மாநில செயலாளர்

செங்கடலில் சங்கமிக்க சேலம் வாரீர்!

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

சேலம் மாநகரில் சங்கமிக்க நாம் ஆயத்தமாகி வரும் நிலையில் உலகின் பல நாடுகளில் அப்பாவி மக்களின் அழுகுரல் நாளுக்கு நாள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது.
உலகில் வாழும் எந்நாட்டவரும் விரும்புவது போரையல்ல, மாறாகப் போரற்ற உலகம் வேண்டும் என்றே ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒவ்வொரு நாட்டிலும் தன் மூக்கைத் நுழைத்து அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் தன் அயோக்கியத்தனத்தை ஈவு, இரக்கமற்ற முறையில் செய்து கொண்டே இருக்கும்.

எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டு மடிந்தாலும் ஏகாதிபத்தியத்திற்குக் கவலை இல்லை.

நாடுகளுக்கிடையே நயவஞ்சகமான முறையில் தன் மூக்கை நுழைத்து, போரை உருவாக்கிக் குண்டு மழை பொழியச் செய்யும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அநியாயமாகக் கொல்லப்படுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து துயரப்படுவதையும், அம்மக்களின் அழுகுரலைக் கேட்டு ஆணவச் சிரிப்பு, சிரிப்பதுதான் ஏகாதிபத்தியம்.

பாலஸ்தீன மக்களுக்குரிய நாட்டை அபகரித்த இஸ்ரேல், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது என்ற பழமொழிக்கேற்ப, பாலஸ்தீன மக்களை நாடற்ற மக்களாக்கியது மட்டுமல்ல, அம்மக்களின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து நாள்தோறும் கொன்று குவிப்பது மட்டுமல்ல, மக்களுக்கு உணவுகூடக் கிடைக்கச் செய்யாமல் பட்டினி போட்டு அணுஅணுவாகச் சாகடிக்கும் செயல் கண்டு உலகமே கண்ணீர் வடிக்கின்றது.

இவைமட்டுமன்றி, இஸ்ரேல் திடீரென்று இரான் மீது ஜூன் 13-ஆம் நாள் பெரும் தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலை உலகம் கண்டிக்கின்றது. இத்தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, இது எனக்குத் தெரியாது என்று ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று கூறியது போன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் ட்ரம்ப் கூறினார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கள் நாட்டின் அபாயகரமான போர் விமானத்தை அனுப்பி இரான் மீது கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சென்ற வார ஜனசக்தியின் தலையங்கம் போர் குறித்து விரிவாகவே விவரித்துள்ளது.
அமெரிக்காவின் அடாவடித்தனத்தை உலகின் பல்வேறு பொறுப்பு வாய்ந்த நாடுகள் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் அனைத்துமே தன் கண்டனத்தைத் தெரிவித்தது மட்டுமின்றி, கடந்த 17ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளன.

இராக்கில் அபாயகரமான ஆயுதங்களை சதாம் உசேன் குவித்து வைத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இராக்கைச் சோதனை போட வேண்டும் என நிர்பந்தம் செய்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்த ஐக்கிய நாட்டு சபை நிபுணர்களை அனுப்பி இராக்கைச் சல்லடை போட்டுச் சலித்துச் சோதனை செய்துவிட்டு, அந்நாட்டில் அபாயகரமான ஆயுதங்கள் எதுவுமில்லை என அறிக்கை அறிவித்தது.

ஆனால் அமெரிக்கா இல்லை இல்லை, அங்கே ஆயுதம் இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை சதாம் உசேனுக்கு ஆதரவாக உள்ளது என்று குற்றம்சாட்டியது.

ஆட்டுக்குட்டியின் மீது ஓநாய் குற்றம் சுமத்தித் தானே தீர்ப்பும் வழங்கி ஆட்டுக்குட்டியை ஓநாய் அடித்துக் கொன்று தின்றது என்கிற குட்டிக் கதையைப் போன்று அமெரிக்கா சதாம் உசேன் மீது வீண்பழி சுமத்தித் தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரத்தை உலக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இன்று அதுபோலவே இரான் நாட்டு மதத் தலைவர் அலி காமெனியைக் கொல்வோம் என்று பகிரங்கமாக இஸ்ரேல் அறிவிக்கின்றது. நீ இருக்கும் இடம் எனக்குத் தெரியும் ஓடி ஒளியாதே சரண்டராகு என அமெரிக்கா அச்சுறுத்துகின்றது.

ஐக்கிய நாட்டு சபை உட்பட உலக நாடுகள் அனைத்தும் இது மூன்றாம் உலகப் போராக மாறி விடுமோ என அஞ்சுகின்றன.

எல்லா நாடுகளும் போர் ஆயுதங்களைக் குவிக்கும், தங்களின் நாட்டுப் பாதுகாப்பு கருதி நாங்கள் குவித்துக் கொள்வோம், இது எங்களின் தற்காப்பிற்கு என நியாயப்படுத்துகின்றன. இவர்களின் நியாயம் இரானுக்குப் பொருந்தாது என்று ஒருதலைப்பட்சமாகக் கூறுகின்றார்கள்.

இத்தனை அநியாயங்களும் உலகின் கண்முன்னே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா என்ற நம் பெருநாட்டின் பிரதமர் கண்ணை மூடிக் கொள்கிறார்.

நேரு காலம் தொட்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்தது மட்டுமல்ல, பாலஸ்தீனத்தை அன்றைய பிரதமர் நேரு அங்கீகரித்தார்.

அம்மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். ஆனால் இன்றைய ஆர்எஸ்எஸ் காரரான மோடி அக்கிரமக்காரனான இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றார். அமெரிக்கச் சார்புநிலை எடுக்கின்றார் என்பதல்ல; அமெரிக்காவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து விட்டார்.

இத்தகையச் சூழலில்தான் நாம் சேலத்தில் கூடுகின்றோம். உலகில் எங்கோ ஏதோ நடக்கிறது, இதற்கும் சேலம் மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம்!

தோழர்களே உலகம் கண்ட இரண்டாம் உலகப்போரை எவரும் எளிதில் மறந்திட இயலாது. கொடியவர்கள் ஹிட்லரும், முசோலினியும் மேற்கொண்ட பாசிசப் போருக்கு முடிவு கட்டி, உலகிற்கு ஜனநாயகத்தை மீட்டுத் தந்த பெருமை நம் கரங்களில் உயர்ந்து நிற்கும் செங்கொடி தாங்கிய சோவியத் செஞ்சேனையின் சாதனையாகும்.

இரண்டு கோடி மக்களைப் பலிகொடுத்து பாசிசம் தோற்கடிக்கப்பட்டது.

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் நாள் தொடங்கிய போர் 1945 மே 8-ம் நாள் வரை நீடித்து பாசிசம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு, மே 9 ஆம் நாள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் சோர்ந்து தொங்கிக்கொண்டிருந்த, மரணக் குழியைத் தேடிக் கொண்டிருந்த ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை இறக்கிவிட்டு, அக்கம்பத்தில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட செங்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

அத்தகைய செங்கொடிப் புதல்வர்கள் வழித்தோன்றல்கள் கூடும் வேளையில் உலகில் நடக்கும் அநியாயங்களை அலட்சியப்படுத்திவிட்டு நாம் உண்டு, நமது வேலை உண்டு என்று ஒதுங்கி நிற்கலாகாது.

இரண்டாம் உலகப்போரின் போது அதனைத் தடுக்கத் தவறியது அல்லது கண்டும் காணாமல் இருந்தது குறித்து வெந்து வேதனைப்பட்டு, தனது மனச்சாட்சியின் குரலாக ஜெர்மானியப் பாதிரியார் கவிஞர் மார்ட்டின் நீயே மெல்லர் கூறுகின்றார்.

அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் கொன்ற போது நான் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஏனெனில் நாம் கம்யூனிஸ்ட் இல்லை.

தொழிற்சங்கத் தலைவர்களைக் கொன்று குவித்தபோது, நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

யூதர்களைக் கொன்ற போது நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. ஏனெனில் நான் யூதர் அல்ல.

இன்று அவர்கள் என்னைக் கொல்ல வந்த போது ஏன் எனக் கேட்க எவருமில்லை.

என்ற கவிஞரின் கருத்து எவ்வளவு ஆழமுள்ளது, அர்த்தம் மிக்கது என்பது குறித்து நாம் ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உலகத்தின் சட்டாம் பிள்ளை எனத் தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டுள்ளது.

உலகம் தன் குடைக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். தன்னைவிட, தன் இனத்தை விட உலகில் வேறு எவரும் அறிவாளிகள் இல்லை எனக் கூறி இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டான் கொடியவன் குற்றவாளி ஹிட்லர்.

இன்று அதேபோன்று உலகம் தன் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டுமெனக் கொக்கரித்து மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டு வருகின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இத்தகைய நெருக்கடிமிக்க நேரத்தில் செங்கொடியின் தவப்புதல்வர்கள் சேலம் மாநாட்டில் சங்கமிக்க இருக்கின்றார்கள். ஆகஸ்ட் 15 இல் தொடங்குகின்றது மாநில 26வது மாநாடு.

நாடு விடுதலை பெற்ற நன்னாளாம் ஆகஸ்ட் 15 காலை மாநாட்டு முகப்பில் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

சுதந்திரத்தைப் பாதுகாப்போம் சோசலிசம் சமைப்போம் என்ற முழக்கத்தோடு தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அரிவாள், சுத்தியல் பொறிக்கப்பட்ட செங்கொடி ஏற்றப்பட உள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மாவட்ட மாநாடுகள் தேர்வு செய்த தோழர்கள் அறிக்கைகள் மீது விவாதங்கள் மேற்கொண்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

மாநாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நாள் மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவைகுறித்த விவரங்களை அடுத்த வாரத்தில் காணலாம்.

மாநாட்டின் நிறைவு நாளான ஆகஸ்ட் 18 ஆம் நாள் சேலம் மாநகர் செங்கடலாய்க் காட்சியளிக்க உள்ளது.

ஆம் தமிழகம் எங்குமிருந்தும் செம்படைத் தோழர்கள் குடும்பத்தோடு சங்கமிக்கும் மாபெரும் நம் குடும்ப விழா. ஆண்களும் பெண்களும் நம் குழந்தைகளும் பேரன் பேத்திகளும் குடும்பம் குடும்பமாய்ச் சங்கமிக்கும் நம் குடும்ப விழா.

ஒவ்வொரு தோழரும் சிவப்புச் சட்டை அணிந்து ஒவ்வொரு சகோதரியும் சிவப்புச் சேலை அணிந்து அதுபோன்றே நம் குழந்தைகளும் சிவப்புடை அணிந்து சங்கமிக்கும் விழா.

சேலம் மாநகரம் இதுவரைக் கண்டிராத மாபெரும் மகத்தான செங்கடலைக் காண உள்ளது.

செங்கடலில் சங்கமிக்க தோழர்களே குடும்பத்தோடு பங்கேற்க ஆயத்தமாகி விட்டீர்களா?

ஆகஸ்ட் 18 தொலைதூரத்தில் இல்லை இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன என்பதனை நினைவில் கொள்க!

அணிவகுக்க ஆயத்தமாவீர்!

மீண்டும் சந்திப்போம்…

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

மலர்: 88 / இதழ்: 13
ஜூன் 29 – ஜூலை 05 / 2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button