தலையங்கம்

மிகுந்த பொறுப்போடு முதலமைச்சர்

தலையங்கம்

திருப்புவனத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது.

ஒரு காவல் நிலையத்தில் புகார் தந்து அதைப் பெற வைப்பதற்கும், சிஎஸ்ஆர் எனப்படும் ரசீதை வாங்குவதற்கும், முதல் தகவல் அறிக்கை எழுத வைப்பதற்கும் சாதாரண மக்கள் படும் பாடு சொல்லி மாளாது.

ஆனால் எழுத்து மூலமான எந்தப் புகாரும் இன்றி, எஃப்.ஐ.ஆர் எதுவும் போடாமல், 27 வயது இளைஞனை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

அதுவும் டி.எஸ்.பி.யின் பொறுப்பில் உள்ள தனிப்படை.

ஒரு நாள் நைய அடித்து, அந்தத் தங்கநகையை திருடி இருக்க வாய்ப்பு இல்லை என்று விட்டுவிட்ட பின்பு, மீண்டும் ‘நன்றாக விசாரிக்கச் சொல்லி’ உயர் அதிகாரியிடம் இருந்து ஆணை வந்ததால், உயிர் போகும் வரை மிருகத்தனமாக அடித்துத் துவைத்து இருக்கிறார்கள்.

ஆணையிட்டவர் யார்? அவ்வளவு அக்கறை செலுத்துவதற்கு என்ன காரணம்? என்பது பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை.

படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உயிருக்கு ஈடாக வேறு எதையும் கொடுத்து விட முடியாது என்றாலும், இதுவரை இல்லாத சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.

இப்போது ஐந்து காவலர்கள் சிறையில் இருக்கிறார்கள். டி.எஸ்.பி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.பி பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

முதலமைச்சர், கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதா¤யிடம் தொலைபேசி மூலம் பேசி, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தொ¤வித்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியும் தந்திருக்கிறார். இதுவரை எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.

சென்ற வருடம் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்ட கார்த்திக் ராஜாவும், கணேஷ் குமாரும் நிகழ்விடத்தில் உடனிருந்தது மட்டுமில்லாமல், புகார் அளித்து இதனை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

இந்தக் கொடூர சித்திரவதையை, மறைந்திருந்து பார்த்து, வீடியோ எடுத்ததோடு, நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் சொன்ன கோவில் ஊழியர் பெருமதிப்பிற்கு உரியவராகிறார்.

வழக்கம்போல, உடற்கூராய்வு அறிக்கையை தராமல் அரசு மருத்துவமனை இழுத்தடித்து இருக்கிறது. நீதிமன்றம் தலையிட்டதால் அது கிடைத்திருக்கிறது.

என்றாலும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டும், இரண்டு இளம் வழக்கறிஞர்களும் கூடவே இருந்ததால், உடலில் 44 காயங்கள் இருந்ததையும், அடித்ததனால் தான் உயிர் பிரிந்து இருக்கிறது என்பதையும் உடற்கூராய்வில் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியா கிளாட் ஆகியோர், வழக்கறிஞர்களின் வாதத்தை பொறுமையாகக் கேட்டதோடு அல்லாமல், சாட்சியையும் இதமாக கேள்வி கேட்டு, நீதிமன்றம் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கலாம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அதை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பொறுப்பற்றுப் பேசிய, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது ஏதேதோ அறிவுரை கூறுகிறார்!

எங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை என்று காட்டுவதற்காகவோ என்னவோ, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ கையாண்ட விதம் அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை.

காவல்துறை சீர்திருத்தத்துக்காக, கோபால்சாமி கமிஷன் (1969-71) சபாநாயகம் கமிஷன் (1989-90) பூரணலிங்கம் கமிஷன் (2006-08) நீதிபதி சி.டி.செல்வம் கமிஷன் (2022-25) என நான்கு ஆணையங்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டன.

அனைத்து ஆணையங்களுமே ‘காவல் மரணங்கள்’ குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன.

அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட்டவற்றையும் ஆணவம் மிக்க காவல்துறை பயனில்லாமல் போகச் செய்து விட்டது. காவல் நிலையத்துக்குள் சிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும் என்பது பூர்ணலிங்கம் கமிஷன் பரிந்துரைதான். கேமரா வைக்கப்பட்டது; ஆனால் அவை எதுவும் இயங்காது! அல்லது கேமரா பார்வையில் படாத இடத்தில் வைத்து அனைத்து குற்ற செயல்களும் நடத்தப்படுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், காவல்துறை எப்படி இருந்ததோ, அதிலிருந்து இன்றுவரை மாறவே இல்லை. எது செய்தாலும் தப்பிவிடலாம் என்ற அதிகார ஆணவத்துக்குள் உறைந்து கிடக்கிறது.

மிகுந்த பொறுப்போடு இந்த நிகழ்வைக் கையாண்ட முதலமைச்சர், காவல்துறை சீர்திருத்தத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிராக சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(மலர்: 88 – இதழ்: 14
ஜூலை 06 – ஜூலை 12 / 2025)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button