
உழைப்புச் சக்தியை மட்டுமே வாழ்வுக்கான ஆதாரமாகக் கொண்டுள்ள பெரும்பகுதி உழைக்கும் மக்கள், வர்ணாசிரம சாதிய அடுக்குமுறைச் சமூகத்தில் பட்டியலினச் சாதியினராக வகைப்படுத்தப்பட்டு, சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு விடுதலை பெற்ற பின்னர், வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டு வாக்களிப்பின் மூலம் அரசை வழிநடத்தும் நாடாளுமன்ற மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது. ஜனநாயக ஆட்சி முறையிலும் பட்டியல் சாதியினரின் உரிமைகள் மறுக்கப்படுவதும், பறிக்கப்படுவதும் தொடர்கிறது.
சமூக அநீதியை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின் விளைவாகப் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலனுக்கான சிறப்பு உட்கூறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் வரவு செலவு திட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு பெரும் உரிமை பெறப்பட்டது.
1980 – 81 முதல் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு வர்க்கம் மற்றும் சாதியச் சார்பு நிலையில் சமூக அநீதி தொடர்வது கசப்பான உண்மையாகும்.
பட்டியல் சாதியினர் சமூகப் பிரிவுக்கான துணைத் திட்டத்திற்கு 2021- 2022 ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் (16.81%) ரூபாய் 2,418.55 கோடியும் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 10,446 கோடியும் செலவிடப்படாமல் பொதுக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் பட்டியல் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுச் செலவிடப்படாத நிதியை முறைப்படுத்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அக்கறை காட்டுவதில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. குறைத்து ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாகச் செலவிடாமல் வேறு திட்டங்களுக்கு மடைமாற்றுவது தொடர்கிறது.
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்பு மற்றும் உணவு உத்திரவாதத் திட்டத்திற்குப் பொதுவான திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது, 2023 -2024 நிதியாண்டில் 2,310 கோடி ரூபாய் சிறப்பு உட்கூறு திட்ட நிதிக் கணக்கில் இருந்து, பொது விநியோகத் திட்டத்திற்கு மாற்றியுள்ளனர்.
உழைக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000ம் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு, துணைத் திட்ட நிதியிலிருந்து ரூபாய் 1,540 கோடி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் உழைக்கும் பெண்களுக்கான பொதுத் திட்டமாகும். இத்திட்டத்திற்குச் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மாற்றுவது ஏற்புடையதல்ல.
பட்டியல் சாதியினர் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கவும், சிறந்த தொழில் முனைவோர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, “தாட்கோ’’ நிறுவனம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் கடனுக்கு மான்யம் குறைவாகும்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80%, இரண்டு லட்சம் ரூபாய்க்கு 70% இரண்டு லட்சம் ரூபாயுக்கும் அதிகமான கடன் தொகைக்கு ரூ.25 லட்சம் வரை 60% வரை மான்யம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு எல்லா நிலைகளிலும் 30% மட்டுமே வழங்கப்படுகிறது.
தாட்கோவின் மூலம் மான்யம் வழங்கப்பட்டாலும், மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு செய்தாலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்குத் தொழில் தொடங்க கடன் வழங்குவதில்லை.
தெலங்கானா மாநிலத்தில் “தலித் பந்து” என்னும் பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பட்டியல் சாதியினர் குடும்பங்களில் உள்ள படித்த இளைஞர்கள் சுயதொழில் அல்லது வணிகம் செய்ய குடும்பத்திற்குத் தலா ரூபாய் 10 லட்சம் நிதி முழு மானியமாக வழங்கி வருகிறது. இத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் பட்டியலினச் சாதியினர், பழங்குடியின மக்கள் குடும்பங்கள் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முழு மானியம் வழங்கும் முதலீட்டு உதவித் திட்டம் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.
வறுமையில் வாடும் பட்டியலின, பழங்குடி மக்கள் வசிப்பிடங்கள் கண்ணியமான சூழலில் அமையவில்லை என்பதை அரசு கருத்தில் கொண்டு, “கலைஞர் கனவு இல்லம்’’திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை மேலும் அதிகரிப்பதோடு குறைந்தபட்சம் 450 சதுர அடியில் சமையலறை, வரவேற்பறை, படுக்கை அறை, கழிவறை, குழந்தைகள் மற்றும் மூத்தோர் தங்கும் அறை என்பது உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்கள் வீடு கட்ட ரூ.5 லட்சம் முழு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வீடு கட்டும் திட்டத்தில், வீட்டுக்குத் தலா குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விவசாயத்தில் ஆர்வம் உள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியின மக்களுக்கு நிலம் வாங்க உதவும் திட்டத்திற்காக 2022- 2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 10 கோடி நிதியாக ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேரவில்லை. இதற்கான காரணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு அரசு சிறப்பு உட்கூறு திட்ட நிதியை பட்டியலினப் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையில் வலுவான பொருளாதார அடித்தளம் அமைவதற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
முதல் கட்டமாக, திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகச் செலவிடும் நேர்மையை உறுதி செய்ய வேண்டும். இதன் வழியாக தொடரும் சமூக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த திசைவழியில் தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும்.