
தமிழகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், வேந்தராக ஆளுநர் (இசைப் பல்கலைக்கழகம் தவிர்த்து) நீடிக்கிறார் என்பது உண்மைதான். துணைவேந்தர்களைப் பணியமர்த்தும் மற்றும் பணி நீக்கும் பொறுப்புகள் மட்டுமே மாநில அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உதகமண்டலத்தில் துணைவேந்தர்களின் மாநாட்டினை ஆளுநர் நடத்துவதும், அதற்குக் குடியரசுத் துணைத் தலைவரை அழைத்திருப்பதும் பேசு பொருளாகியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் இதனைக் கண்டித்துள்ளனர். மேலும், மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கும் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.
குறிப்பாக, சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழக முதல்வர் தலைமையில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
உதகையில் நடைபெறுகின்ற துணைவேந்தர்கள் மாநாட்டினை வேந்தர் என்கின்ற நிலையிலிருந்து ஆளுநர் ரவி ஏற்பாடு செய்திருக்க இயலாது. ஏனென்றால், இந்த நிகழ்வுக்கு அவர் வேந்தராக இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் அல்லாது, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வேந்தராக இல்லாத தமிழ்நாட்டில் உள்ள பிற தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கின்ற நிலையில் அல்லாது, ஆளுநர் என்ற அளவிலேயே அவர் இந்த மாநாட்டினைக் கூட்டியிருக்க முடியும்.
தமிழக முதலமைச்சர் நடத்தியதற்கு எதிராக அல்லது போட்டியாக துணைவேந்தர் மாநாட்டினை ஆளுநர் நடத்தவில்லை என்றும் ஆண்டுதோறும் இது நடத்தப்படுவதுதான் என்றும் விளக்கங்கள் தரப்படுகின்றன. மேலும், முதல்வரின் கூட்டத்துக்கு முன்னரே ஆளுநர் நடத்தும் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்றும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக இன்னும் ஆளுநரே தொடர்வதால் அவரிடம்தான் பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் நீடிக்கின்றன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
- பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் நீடிக்கிறார்
- பல்கலைக்கழகப் பணிகள் தொடர்பான விவரங்களைக் கேட்டறியும் உரிமை வேந்தரிடம் இருக்கிறது
- பல்கலைக்கழகங்களின் மேல் நடவடிக்கை எடுக்க அவரால் முடியும்
- பல்கலைக்கழகங்களில் ஆட்சிக் குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை அமர்த்துகின்ற வாய்ப்பு அவருக்கு இருக்கிறது
- பட்டமளிப்பு விழாப் போன்ற நிகழ்வுகளை வேந்தரது தலைமையில்தான் நடத்தமுடியும்
என்பவற்றை ஆளுநர் தரப்பினரும் பாரதிய சனதாக் கட்சியினரும் முன்னிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த உரிமைகள் அல்லது கடமைகள், பல்கலைக்கழகங்களைக் கட்டுபடுத்தத் தக்க அளவிலான மேனிலையினை உருவாக்கித் தரவில்லை. ஒரு பல்கலைக்கழகத்தின் மேல் ஆளுநர் நடவடிக்கை எடுப்பது அவ்வளவு எளிதன்று. மாநில அரசின் ஒப்புதல் அல்லது ஒத்துழைப்பு இல்லாமல் ஆளுநராகச் செயல்பட இதில் எதுவுமில்லை.
துணைவேந்தர் தேர்வு, பணி நீட்டிப்பு என்ற வாளினை வைத்துக்கொண்டுதான், வாலாட்டிக்கொண்டிருந்தார் ஆளுநர். இப்போது அதுவும் பிடுங்கப்பட்டுவிட்டது.
மாநில ஆளுநர் என்ற வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் பொறுப்பில்லாத மாநிலத் தலைமையாக எப்படி ஆளுநர் விளங்குகிறாரோ, அதைப் போன்றுதான் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து வேந்தர் நிலையும் என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும்.
மாநிலத்தின் ஆளுநர் என்ற கடமைப் பொறுப்பில் இருப்பதால் மட்டுமே அவர் தனது அலுவல் நிலை சார்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகக் கருதப்படுகிறார். எனவே, அமைச்சரவையின் அறிவுரையினைப் பெற்றுதான் வேந்தர் செயல்படவேண்டும் என்ற நடைமுறை விடுதலைக்குப் பின்னர் பல்லாண்டுகளாக நீடித்து வந்தது.
ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கட்சியொன்று மாநில ஆட்சியில் அமர்ந்த பிறகுதான் நிலைமைகள் மாறின. வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடங்கின.
அரசியல் கட்சி அல்லது கட்சிகள்தாம் மாநில ஆட்சியின் பொறுப்பில் இருக்கின்றன. ஒன்றிய அரசின் கட்சியைச் சார்ந்தவர்தான் மாநில ஆளுநராகப் பணியேற்கிறார். இந்த உண்மை நிலையினைப் புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் பல்கலைக்கழக வேந்தர்களாக இருக்கும் ஆளுநர்களுக்குத் தனி உரிமை இருப்பது போன்ற ஒரு நிலையினை உறுதிப்படுத்திவிட்டன.
மாநில அரசு கட்சி நலன் சார்ந்த முடிவுகளைத்தான் எடுக்கும் என்றும், ஆளுநர் நடுநிலையோடு முடிவுகளை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றங்கள் கருதிவிட்டன. தான் சார்ந்த கட்சி நலன்களுக்கு ஏற்பவே ஆளுநரும் செயல்படுவார் என்ற உண்மை நடைமுறை நிலை நீதிமன்றங்களுக்குப் புரியவில்லை என்பதாகத் தெரிகிறது.
இப்படித்தான் பல்கலைக்கழக வேந்தர்களாகக் கருதப்படும் ஆளுநர்கள், தங்கள் அத்துமீறல்களை நீடித்து வந்தனர்.
கேரள ஆளுநராக இருந்த அரிப் முகமது கான் ஆடிய ஆட்டங்கள் எண்ணிக்கையில் அடங்கா. மேற்கு வங்க ஆளுநராக இருந்த, இப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் சகதீப் தன்கர், மாநில அரசுக்கு எதிரான நிறுவனங்களாகவே பல்கலைக்கழகங்களை மாற்றியிருந்தார். இவற்றுக்கெல்லாம் நீதிமன்றங்களும் ஏதோவொரு வகையில் ஒப்புதல் தந்து வந்தன.
இவற்றையேதான் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி இப்பொழுது செய்து வருகிறார். ராட்ரிய சுய சேவக் அமைப்பின் பற்றாளர்களே பெரிதும் துணைவேந்தர்களாகத் தெரிவு செய்யப்பட்டுவந்தனர். இதற்கேற்ப, மாநில அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட அவர்கள் தூண்டப்பட்டனர்.
இதில் ஒன்றுதான் அண்மைக் காலங்களில் நடத்தப்படும் துணைவேந்தர் மாநாடு அல்லது கூட்டங்கள்.
புதிய பல்கலைக்கழகத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னர் துணைவேந்தர்களின் மாநாட்டினை வேந்தர் நடத்துவதற்கான எதிர்ப்பு என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எப்பொழுதெல்லாம் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் துணைவேந்தர்களது கூட்டத்தை நடத்தினாரோ அப்போதெல்லாம் எதிர்க் குரல்கள் எழுந்துகொண்டுதானிருந்தன. பல்கலைக்கழக நடைமுறைகளில் எப்பொழுதெல்லாம் ஆளுநர் தலையிடுகிறாரோ அப்போதெல்லாம் மறுப்புகள் கூறப்பட்டன. இவற்றையெல்லாம் மறந்துவிடக்கூடாது.
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசின் துறைகள் போன்றவையாக இருக்கவில்லை. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களினால் தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக அவை உருவாக்கப்படுபவை.
பல்கலைக்கழகங்களின் கல்வி, நிதி, மேலாண்மை தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் பல்கலைக்கழகச் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சிக் குழு, ஆட்சிப் பேரவை, கல்விக் குழு, பாடத் திட்டக் குழுக்கள் போன்றவற்றின் கட்டுப்பாட்டினால் மட்டுமே செயல்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் நேரடியாகத் தலையிட ஒன்றிய, மாநில அரசுகளுக்கோ ஆளுநர், அமைச்சர்களுக்கோ வாய்ப்புகள் இருப்பதில்லை.
துணைவேந்தர் கூட்டத்தில் கல்வி, நிதி, மேலாண்மை தொடர்பான எந்தவொரு வழிகாட்டுதலைத் தரவும் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு வழியுமில்லை; வாய்ப்புமில்லை.
கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகளை அல்லது நோக்கங்களை எடுத்துக் கூற முயற்சிக்கலாம். இங்குதான் சிக்கல் எழுகிறது.
ஒரு மாநிலத்தின் வேண்டல்கள், இளைய தலைமுறையினரை உருவாக்குதல், வேலை வாய்ப்புக்கேற்ற கல்வித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் போன்ற பல அடிப்படை அறிவுறுத்தல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் தர முடியும்.
மாநில அளவில், அரசின் உணர்வுகளுக்கு மாறாக ஆளுநர் எந்த வகையிலும் அறிவுறுத்த முடியாது.
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கூட்டத்துக்கும் ஆளுநர் நடத்துகின்ற கூட்டங்களுக்கும் முழுமையான வேறுபாடுகள் உள்ளன.
வேந்தர் பொறுப்பில் முதல்வர் இல்லை என்றாலும், அவரது அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக நீடிக்கிறார். ஆசிரியர்களின் ஊதியம், பணியாளர் ஊதியம், மேலாண்மைச் செலவுகள் ஆகியவற்றுக்கான நிதியினைத் தமிழ்நாடு அரசுதான் தருகிறது. நிதி நிலை அறிக்கையில் இவற்றுக்கான ஒதுக்கீடுகளும் செய்யப்படுகின்றன. இவையல்லாமல், கட்டமைப்புப் பணிகளுக்கும் நல்கை உண்டு. வேறு பல பொருளுதவிகளையும் மாநில அரசுதான் வழங்கிவருகிறது.
நிதிச் சுமையில் தடுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு உதவி செய்வது குறித்துத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கூட்டத்தில் முதலமைச்சர் பேசவில்லை என்று முன்னால் முதல்வர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்ள நிதிச் சிக்கல்கள் வெவ்வாறானவை. அவற்றை முதல்வர் தலைமையிலான மாநில அரசுதான் தனித்தனியே பேசித் தீர்க்கப் போகிறது.
கொள்கை அறிவுறுத்தலுக்காக அழைக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் முதல்வர் அவர்கள் பெருந்தன்மையோடு அரசினது நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மட்டுமே எடுத்துக் கூறியிருப்பது பொருத்தமானதாகவே தெரிகிறது. பெரும்பாலும், கல்வி தொடர்பான நோக்கங்களை மட்டுமே மாநில அரசு முன்னெடுத்தது.
ஆனால், மாநில அரசின் நிலைப்பாட்டினை அறிந்து அதற்கேற்பச் செயல்படாமல், மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் நோக்கோடு மட்டும் நடத்தப்படும் துணைவேந்தர் மாநாட்டினால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. அப்படி ஏதேனும் வலியுறுத்தப்பட்டாலும், மாநில அரசின் உணர்வுகளுக்கு அப்பால், பல்கலைக்கழக ஆட்சிக் குழு, ஆட்சிப் பேரவை, கல்விக் குழு, பாடத் திட்டக் குழு ஆகியவற்றின் நடைமுறைகளை மீறித் துணைவேந்தர்கள் செயல்படப் போவதில்லை; செயல்படவும் வாய்ப்பில்லை.
தனக்கு எந்த வகையிலும் உரிமையில்லாத இடத்தில் இருந்துகொண்டு, துணைவேந்தர்களை அழைத்துத் திருவிழா நடத்துவதெல்லாம் போட்டிக்குச் செய்வதாகவே இருக்க முடியும். அழையா விருந்தாளியின் சிறுபிள்ளைத்தனமான செயலாகவே கருதத் தக்கதாகும்.
முன்னர் நடத்தப்பட்ட கூட்டங்களாக இருந்தாலும், இனி நடக்கப்போவதாக இருந்தாலும், பல்கலைக்கழகங்களின் கல்வி, நிதி, மேலாண்மை ஆகியவற்றில் ஆளுநர் செய்யக்கூடியன எதுவும் இல்லை. இவற்றையெல்லாம் உயர்கல்வித் துறை அமைச்சரின் பரிந்துரையில் முதலமைச்சர்தான் நிறைவேற்றித் தர முடியும்.
மாநில அரசை வலியுறுத்துகின்ற அளவில் தீர்மானம் அல்லது வேண்டுதல்கூடச் செய்ய வழியற்ற நிலையில் இருக்கின்ற ஆளுநர், துணைவேந்தர் கூட்டத்தில், அவரது அத்துமீறல்களைத்தான் வெளிப்படுத்தி வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்டாலும், அவரும் ஆளுநரும் வழிநடத்த இத்தகைய கூட்டங்களில் எதுவுமில்லை.
வேந்தர் என்ற முறையில் அவருக்கு இருப்பதாகக் கருதப்படும் உரிமைகள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கும் இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளுக்கும் தொடர்புகள் ஏதும் இல்லவே இல்லை. அந்த உரிமைகளை அல்லது கடமைகளை வைத்துக்கொண்டு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வகைசெய்ய ஆளுநருக்கு வழிகள் இல்லை.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் அழைக்கிறார் என்கின்ற முறையில், மதிப்பளிக்கும் எண்ணத்தில் சில துணைவேந்தர்கள் கலந்துகொள்ளலாம். அவ்வளவுதான்.
ஆளுநர் என்ற அளவில் வீணே இருப்பது போல, வேந்தர் என்ற முறையிலும் ரவி என்பவர் வெட்டி வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.