கட்டுரைகள்

காவிரிப் படுகையைப் பாலைவனமாக்கலாமா? தமிழ்நாட்டு முதல்வரின் தலையீடு தேவை

பி.எஸ்.மாசிலாமணி

காவிரிப் படுகையை அழிக்க வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்குப் பின் காவிரி டெல்டா வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலம் என்ற கோரிக்கை வலுவாகக் கிளர்ந்தது. அதன் வரலாறு:

காரைக்கால் உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் எண்ணற்ற இடங்களில், பல ஆயிரம் அடி கீழே துளை போடப்பட்டு எண்ணெய், எரிவாயு எடுக்கப்பட்டன. நிலம் கொடுத்த குடும்ப வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பினர். எதிர்பார்த்த வேலையும் இல்லை, இழப்பீடும் பெயரளவிற்கு மட்டுமே.

ஆனால் எதிர்பாராத பாதிப்புகள் தொடர ஆரம்பித்தன. கனரக வாகனங்களால் சாலைகள் பழுதாகின. நிலத்தைக் கொடுத்த விவசாயிகளுக்கு நிதி இழப்பீடு, உரிய வாழ்க்கை பாதுகாப்பு இல்லை. 2 மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டிய எரி எண்ணெய் : வாயுக் குழாய்களைப் பல பகுதிகளில் பூமி மேற்பரப்பிலே பதித்ததால் அடர்த்தி அதிகம் கொண்ட வாயுக்கள் வரும்போது குழாய்கள் உடைந்து வாழ்விடங்கள் பாதித்தது மட்டுமல்ல, உயிர்பலிகளும் ஏற்பட்டன.

ஓ.என்.ஜி.சி.யைத் தொடர்ந்து சுத்திகரிப்பாலையும் இங்கு அமைக்கப்பட்டது. ஆயில் விற்பனை உரிமை இந்தியன் ஆயில் கம்பெனிக்கும்: எரிவாயு விநியோக உரிமம் கெயில் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. எதிர்பாரத அளவில் குருடாயில் கிடைக்க சாத்தியம் இருப்பதை அறிந்து சுத்திகரிப்பாலை பெரிய அளவில் கட்டமைத்திட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. இடைக்காலத்திற்குக் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட குருடாயில் கடல்வழிக் குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டது. இதையும் சரிவர மேற்கொள்ளாமல் உடைந்து, கடல் பரப்பு ஆயில் மண்டலமாகி மீன்வளம் பாதித்த நிலையில், மீனவர்களின் போராட்டத்தால், இக்குழாய்களை அகற்றும் நிலைவந்தது.

நரிமணம், குத்தாலம் போன்று டெல்டாவில் பல கிராமங்கள் முழுதும் ஓ.என்.ஜி.சி, செயல்பாட்டால் மாசுபட்ட நிலையில் ஊரே கரிய நிறத்தில், மக்கள் வாழும் நிலையற்று உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் மனிதர் வாழ்நிலைக்கு ஆபத்து இல்லாத முறைகளில் இவற்றைச் செயல்படுத்திடவில்லை.

பல கோடிக்கணக்கான ரூபாய் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு லாப பங்கீடு கிடைத்து வந்த நிலையில் நிலத்தை, உடல் நலனை, மனித வாழ்வை இழந்த இம்மாவட்ட மக்களுக்குப் பெரிய உதவியும் இல்லை. இந்நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியும், அரசின் வழக்கமான திடங்களும்தான் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற இடங்களிலும் வேளாண்மை மற்றும் வாழ்வுநிலை பாதிக்கும் நிலைவந்தது. சுற்றுச்சூழல் மாசுபட்டு கேடானது. மழை பொழிவு இடரானது. வெப்பநிலை உயர்ந்து குருவி இனங்களே காணாமல் போயின.

ஓ.என்.ஜி.சி துரப்பணப் பணிகள் மற்றும் கெயில் குழாய்கள் புதைப்பு, ஐ.ஓ.சி ஆயில் குழாய்கள் புதைப்பு என ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் புதைக்கப்பட்டது. முதல் ஒரு ஆண்டு மட்டும் புதைக்கப்படும் இடத்தில் ஏற்படும் பயிரிழப்பிற்கு மட்டும் இழப்பீட்டைக் கொடுத்துவிட்டு, இக்குழாய்கள் செல்லும் வழிகளில் மரங்கள் வளர்க்கக் கூடாது, கொட்டகை, வீடுகள், எந்த ஒரு கட்டுமானங்களும் அமைக்கக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர் உரிமையைக் கோரும் இந்நிறுவனங்கள் அந்த இடத்திற்குத் தொடர்ந்து இழப்பீட்டைக் கொடுக்க வேண்டுமே என்ற நியாயத்தைக் கூடக் கடைபிடிப்பதில்லை. இதனால் போராட்டங்கள் இவற்றுக்கு எதிராகத் திரும்பியது.

இந்தப் போராட்டங்களைச் சமாளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு அம்பானி, அதானி, எஸ்ஸார் போன்ற நிறுவனங்களை உள்ளே நுழைத்து வந்தது. இந்நிலையில்தான் மன்னார்குடியை மையமாகக் கொண்டு மிகப்பெரிய பரப்பளவில் விரிவடைந்துள்ள தரமான பழுப்பு நிலக்கரியை வெளியே எடுக்கும் முன்னர் இதன் ஊடே புதைந்துள்ள மீத்தேன் வாயுவை எடுக்க ஏற்பாடு செய்தது. மீத்தேன் வாயு ஊடே புகுந்திருக்கும் நிலையில் நிலக்கரியை எடுத்தால் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால் மீத்தேன் முதலில் எடுக்கத் திட்டமிடப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு இதற்கான ஒப்பந்தத்தைக் கொடுத்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடக்கத்திலேயே மன்னார்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அதைத் தொடர்ந்து தொடர் போராட்டங்களையும், டெல்லிக்கு நேரடியாகச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி.எஸ்.மாசிலாமணி தலைமையிலான குழு வலியுறுத்தியது. பின் இந்த கம்பெனிக்குக் கொடுத்த ஒப்பந்தம் மட்டுமே ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய அரசு, ஒப்பந்த முறைகளை மாற்றி திறந்தவெளி முறையில் 100% அந்நியக் கம்பெனிகள் உள்ளே வரும் அளவில் புதிய ஒற்றைச் சாளர வழியில் எரிவாயுக் கழகத்தின் விதிகள் திருத்தப்பட்டு அதன்படி கொடுக்கப்பட்ட புதிய ஒப்பந்தம்தான் ஜெம் லேபரட்டீரீஸ் என்கிற நிறுவனத்திற்கு நெடுவாசல், கதிராமங்கலம் ஆகும். ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் வரும் நீர், நிலம் முழுங்கி ஒன்றிய அரசு மீனவர்கள் வாழும் பகுதியில் சாகர்மாலா என்ற திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

3.1.2013 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியது என்னவென்றால், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சோதிக்கப்படாத பல மருந்துகளை, இந்திய மனிதர்களை எலிகளாக நினைத்து அனுப்பி வந்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்துகள் இங்கு தடையின்றி விற்பனையாகிறது. இந்த மருந்துகளைச் சாப்பிட்டு இறந்தவர்களைத் திருப்பித் தர முடியாது. அரசு விசாரணைக் குழுவை அமைப்பதே இதன் தீவிரத்தைக் குறைக்க, மக்களின் கவனத்தைத் திருப்பவே.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் என்கிறாரே. நம் மண்ணைப் பறித்து எரிவாயு, எரிஎண்ணெய் எடுக்க இவர்களுக்குக் கொடுப்பார்கள். இவர்கள் லாபம் கொழிப்பார்கள். அரசுகள் வரிமேல் வரிகளைப் போட்டு நம்மிடமே விலையைக் கூட்டிக் கொள்ளையடிக்க வழி செய்வார்கள்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தோடு, பெட்ரோலியம் மண்டலம் என்ற பேரால் பெட்ரோலிய துணைப் பொருட்களைத் தயாரிக்க நாகை, கடலூர் மாவட்டங்களில் 56,000 ஏக்கர் அளவில் நிலங்களை எடுத்திடும் அறிவிப்பு உள்ளது. இதன்மூலம் பன்னாட்டுக் கம்பெனிகள் நமது இயற்கை வளத்தைச் சூறையாட நமது பாரம்பரியத்தை அழித்திட, வாழ்வுரிமையை தொலைத்திடும் நிலைவரும்.

இப்படி தொடர்ந்து வந்த நெருக்கடிகள் டெல்டாவைப் பெருமளவு பாதித்தது. டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையே பிரதானப் பொருளாதாரமாகும். இதே நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலம் மக்கள் வாழ்வு சூனியமாகிவிடும் என்பதை உணர்ந்துதான் காவிரிடெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனப் போராட்டங்களை நடத்தினோம்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான், 2020ல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அனுமதி. ஓ.என்.ஜி.சி. என்ற சி.பி.சி.எல். நிறுவனம் இதுவரை துளையிட்டவற்றை இயக்கலாம். புதிய திட்டங்களுக்கு இங்கு அனுமதி இல்லை என வரையறுக்கப்பட்ட நிலையில் சட்டமன்றத் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, அனுமதி பெற்றதாகக் கூறி அன்றைய ஆட்சியின் முதல்வர் பாராட்டு விழாக்களை நடத்தியதுடன் காவிரி டெல்டா காப்பாளர் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார். முதல்வர் தலைமையில் இதற்கான பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை முதல்வர் தலைமையிலான குழுகூட வேண்டும் என்ற முடிவை அமல்படுத்திடவில்லை.

கடந்த ஆட்சியில் ஒரு முறை, தற்போதைய ஆட்சியில் 12.5.2022 அன்று ஒரு முறை மட்டுமே கூடிஉள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்டக் குழுக்கள் அமைத்திட வேண்டும் என்று ஏற்கப்பட்ட விதியை நிறைவேற்றிடவில்லை. டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கு, தனித்திட்டமிடல் நிதி ஒதுக்கீடு விதியின்படி இல்லை. இந்நிலையில்தான் ஒன்றிய அரசு நாடு முழுவதும் 72 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்திடும் ஒப்பந்தத்தை வழங்கியதில் டெல்டா மாவட்டங்களில் மூன்று இடங்களான திருவாரூர், பெரியகுடி, அரிச்சகநல்லூர் உள்ளது.

இதைப் பற்றிய கேள்வியில் தமிழ்நாடு அரசின் காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது. நாங்கள் அதற்கான இசைவு எதுவும் கொடுக்கவில்லை என எரிசக்தி துறை உயர் அலுவலர் கூறியுள்ளார். அப்படி எனில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியினர் அனுமதி பெற்றதாகக் கூறியது உண்மை இல்லையா? வளர்ச்சியைப் பாதிக்கும் நிலையிலான ஒரு திட்டத்தைத் தடுத்திட மாநிலச் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லையா? வேளாண்மை மாநிலப் பட்டியலில் உள்ள நிலையில், இப்படி முடிவு எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

இவற்றைக் கவனத்தில் கொள்ளாது தன் விருப்பத்திற்கு தன் கட்சியின் முதலீட்டு ஆதரவாளர்கள் என்பதால் வரன்முறைகளை மீறி ஒப்பந்தம் வழங்கலாமா? காவிரி பாயும் மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்ற தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை, ஒன்றிய அரசு இப்போதாவது ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். தமிழக அரசு இதற்கான உரிய அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஒன்றிய அரசு, டெல்டாவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித்தான் காரைக்கால் மாவட்டம், நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி அலுவலகம்முன் 500 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட குழுக்கள் மிகு எழுச்சியாக நடத்தியது.

இந்தச் சூழலில், தமிழக முதல்வர் அவர்கள் தன் தலைமையிலான தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் கூட்டத்தைக் கூட்டி, இதற்கான உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் இந்த அமைப்பின் வழிகாட்டல்படி டெல்டாவில் திட்டமிடப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button