
இருமலை நிறுத்திட உட்கொள்ள வழங்கப்படும் திரவ மருந்தின் காரணமாக உலகில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தைகள், அதிகமாக இறந்துள்ளனர். உலகச் சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு சர்வதேசப் பிரச்சனையாக அறிவித்துள்ளது.
இம்மருந்துகளுக்கான செலவைக் குறைப்பதற்காக, டை எத்திலின் கிளைக்கால் (diethylene glycol) போன்ற நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக அறியப்படுகிறது.
கடந்த 2023 ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் கலப்படத்தன்மை காரணமாக, காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும், காமரூனில் 12 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தோனேசியாவிலும் இதேபோன்ற சோக மரணங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் 1998-ல் குருகிராமில் 33 குழந்தைகளும், 2020-ல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 17 குழந்தைகளும் கலப்பட இருமல் மருந்து காரணமாக இறந்தனர். அண்மையில் மத்தியப் பிரதேசத்திலும் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்படமான கோல்ட்ரிஃப் திரவ இருமல் மருந்தை உட்கொண்டதால் குறைந்தது 22 மரணங்கள் நடந்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் ரீமென் லேப் செய்த கலப்பட இருமல் மருந்தினால் காமரூனில் 12 குழந்தைகளும் 2023 ஆண்டில் உயிரிழந்தனர். கோல்ட்ரிஃப் சம்பவத்தால் மக்கள் கோபமடைந்த பின் 2 ஆண்டு காலதாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகள் ரீமென் லேப் நிறுவனம் மீது 2025 அக்டோபரில் தான் கிரிமினல் வழக்கைத் தொடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் முதல் உயி£¤ழப்பு 04.09.2025 அன்றே ஏற்பட்ட நிலையில் கால தாமதமாக, 01.10.2025 அன்றுதான் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வில் அந்த மருந்தின் மாதிரிகளில் “நச்சுப் பொருள்” இல்லை என்று முடிவு வந்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும், தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாடு அரசு ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, டை எத்திலின் கிளைக்கால் என்ற நச்சு உள்ளது என்பதைக் கண்டறிந்தது. இந்நிறுவனம் மிகத் தீவிரமான 39 விதி மீறல்கள் உட்பட 364 விதி மீறல்களைச் செய்துள்ளது. இம்மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி, தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைசெய்து, நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்து, அந்நிறுவனத்தை முழுமையாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்து தர ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மருந்தைப் பரிந்துரைத்ததற்காக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். பிற மாநிலத் தயாரிப்பான ரீலைஃப் (relife), ரெஸ்போலைட் (Respolite) இருமல் மருந்துகளும் கலப்படம் காரணமாக முடக்கி வைக்கப்பட்டன.
இறப்பு எப்படி?
“இருமல் மருந்துகளில் உள்ள பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துப் பொருட்களைக் கரைப்பதற்கான கரைப்பானாக ப்ரோப்பலீன் க்ளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக் கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. ‘மருந்தகத் தர’ ப்ரோப்பிலீன் கிளைகோலுக்குப் பதிலாக, ‘உணவு தர’ ப்ரோப்பிலீன் கிளைக்காலை கரைப்பானாகப் பயன்படுத்தி இருமல் மருந்து தயாரிக்கப்பட்டதே முக்கியப் பிரச்சினையாகும்.
“பொதுவாக, ஒரு மருந்து உற்பத்தி நிறுவனம் மருந்தைத் தயாரித்து முடிந்த பிறகு, விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை. அடுத்ததாக, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மருந்துகளை வாங்கும்போது அவற்றைப் பரிசோதித்துத்தான் வாங்குவார்கள். ஆனால், மத்தியப் பிரதேச அரசு இதனைப் பரிசோதிக்கவில்லை. இந்த விநியோகச் சங்கிலியில் ஏதாவது ஒரு இடத்தில் சோதனை நடந்திருந்தால், இதனைத் தடுத்திருக்கலாம்“
தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மருந்து தர ஆய்வாளர்கள் பணியில் உள்ளதாகவும், காலிப்பணியிடங்கள் பெரிதுமில்லையெனக் கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 14 முதுநிலை மற்றும் 120 இளநிலை மருந்துத்தர ஆய்வாளர்கள் உள்ளனர். அரசு மருந்து தர பகுப்பாய்வுக் கூடங்கள் இரண்டு உள்ளன. இந்தக் கட்டமைப்பு போதாது. உடனடியாக இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பையும், நவீனப் பகுப்பாய்வு உபகரணங்களையும் அதிகரித்திட வேண்டும். தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP) மற்றும் நல்ல ஆய்வக நடைமுறைகள் (GLP), தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விதிப்படி வருடத்திற்கு ஒரு முறையாவது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனைக்கான மருந்து மாதிரிகள் எடுப்பதும், பரிசோதனைகள் செய்வதும், குறைபாடுகளைக் கண்டறிந்து வழக்கு தொடுப்பதும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் மாநிலங்களுடைய தரக்கட்டுப்பாடுகளை ஒருங்கிணைக்க ஓர் அமைப்பு இல்லாததும், தவறிழைக்கும் மருந்து நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தர ஆய்வாளர்களுக்குப் போதிய அதிகாரம் இல்லை என்பதும் பிரச்சனைகளாக உள்ளன.
இந்தியாவில் உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குடிசைத் தொழில் போல உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பல மாநிலங்களில் மருந்து தர ஆய்வாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன. மருந்து தரக் கண்காணிப்புப் பணி சரிவர நடைபெறவில்லை.
விலை குறைவாக இருக்க வேண்டும் என்பது உற்பத்தித் தரத்தைக் குறைக்கிறது. மேலும் விலை அதிகமாக விற்கப்படும் பெரிய மருந்துக் கம்பெனிகள் கூட சிறிய கம்பெனிகளிடம் இருந்து குறைந்த விலையில் மருந்தைப் பெற்றுக் கொண்டு தனது லேபிளை ஒட்டி அதிக லாபத்தைச் சம்பாதிக்கின்றன.
இந்நிலையில் மருந்துகளைப் பரிந்துரைக்கின்ற மருத்துவரோ அல்லது அந்த மருந்தை விநியோகிக்கின்ற மருந்துக் கடைக்காரரோ, அந்த மருந்தைக் குழந்தைக்குக் கொடுக்கின்ற பெற்றோரோ அல்லது அந்த மருந்தை உட்கொள்கின்ற ஒரு நோயாளியோ மருந்தின் தரத்தைப் பரிசோதிப்பது என்பது இயலாது.
இவர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மருந்தையும் பரிசோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்திட முடியாது. எனவே தரத்தை உறுதிப்படுத்தித் தரமான மருந்துகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டிய கடமை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குத்தான் உள்ளது.
தனியார் துறையில் லாப நோக்கமே மேலோங்கும். அவற்றிடமிருந்து எந்தச் சுயகட்டுப்பாட்டையும் தரத்தையும் எதிர்பார்க்க முடியாது. தனியார் துறையின் மருந்துகளின் தரத்தை அரசுகள்தான் உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கம் அவசியம்
மருந்து உற்பத்தி அரசின் கடமை;
சில மருத்துவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு தனியார் மருந்து நிறுவனங்களின் தரமற்ற மருந்துகளை சிபாரிசு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
லாப வெறியுடன், போதுமான தரக்கட்டுபாடின்றித் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. எந்தத் தனியார் மருந்து நிறுவனங்களின் தரத்தை நம்பி அதன் மருந்துகளை மருத்துவர் பயனாளர்களுக்குப் பரிந்துரைப்பார்? இந்நிலையில் நியாயமான மருத்துவர்கள் கமிஷனே வேண்டாம், தரமான மருந்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்திடம் கூறி நாம் திருப்தி அடைந்துவிட முடியாது.
அதேபோல வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்ற மருந்துகளை மட்டும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பதும் ஏற்புடையதல்ல. 145 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில், தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்குவது அரசின் கடமையாகும்.
ஏழை, பணக்காரன், ஜாதி, மத, இனம், மொழி, நாடு கடந்து அனைத்து உயிர்களின் மதிப்பும் சமமானவை, விலைமதிப்பற்றவை.எனவே அரசுகளே மருந்துகளை,தடுப்பூசிகளை, மருத்துவ உபகரணங்களை பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தரமாக உற்பத்தி செய்து , தட்டுப்பாடின்றி, மலிவாக வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் 2012 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 800 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி நிறுவனம் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது. ஆயினும், பல ஆண்டுகளாக அது திறக்கப்படாமல் உள்ளது.
நமது 75வது விடுதலை நாள் விழாவில், நமது நாட்டில் மொத்தமுள்ள ஐந்து பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இரண்டை மூடவும் மூன்றை பலவீனப்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்பட்டதும் வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு டாம் கால் (TAMPCOL) நிறுவனம் மூலம் சில சித்த மருந்துகளை உற்பத்தி செய்து விற்கிறது. அதேபோல நவீன அறிவியல் மருத்துவத்தின் மருந்துகளையும் தமிழக அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்ய வேண்டும் என சமூகச் சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகிறது.
தனியார் நிறுவனங்கள் குடிசைத் தொழிலாக சிறிய இடங்களில் மருந்துகளை உற்பத்தி செய்யும் பொழுது, அரசாங்கத்தினால் ஏன் உற்பத்தி செய்ய முடியாது? செய்யக் கூடாது? அரசாங்கம் உற்பத்தி செய்து அதை மருந்துக் கடைகளில் விற்க வேண்டும். அந்த அரசின் தரமான மருந்துகளைத் தவிர்த்து விட்டு, கமிஷனுக்காகத் தரமற்ற தனியார் மருந்துகளை மருத்துவர்கள் எழுதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு தமிழக அரசைக் குறை கூறுகிறது. குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தைப் போன்ற வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருந்துக் கம்பெனிகளில் மருந்துகள் கலப்படமானதும் உறுதியாகி உள்ளது.
ஆகவே தொடர்ந்து ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தைக் குறை சொல்வதினாலோ, சில மருந்து நிறுவன உரிமையாளர்களை/மருத்துவர்களைக் கைது செய்வதாலோ பிரச்சினை முடியப் போவதில்லை. இந்நடவடிக்கை மூலம் அரசுகள் மக்களின் கோபத்தைத் தனி நபர்களுக்கு எதிராகத் திருப்பி மடைமாற்றம் செய்கிறது. அரசு தனது கடமையிலிருந்து தவறுவதை மக்கள் உணராமல் பார்த்துக் கொள்கிறது.
ஆகவே குழந்தைகள் மற்றும் நோயாளியின் இறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசு தரமான மருந்துகளைப் பொதுத்துறை நிறுவனம் மூலம் உற்பத்தி செய்திடக் கோர வேண்டும்.