கட்டுரைகள்

பட்டம் பெற்ற பின் பறிக்க முயலும் பா.ச.க.

மே.து.ரா.

கடந்த ஆகத்து 13இல் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடந்தபோது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடமிருந்து தனது முனைவர் பட்டத்தினைப் பெற மறுத்த ஒருவர், துணைவேந்தரிடமிருந்து பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

நாகர்கோயிலைச் சார்ந்த முனைவர் சீன் சோசப், தனது கணவர் தி.மு.க.வில் பொறுப்பில் இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்காக எதையும் செய்யாத ஆளுநர் கையில் பட்டம் பெற விரும்பவில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வந்தன.

ஆளுநர் கையில் பட்டம் பெறாததால் அவருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென அப்போதே கூக்குரல்கள் எழுந்து அடங்கின.

பிறர் படிப்பதைச் சனாதனிகள் ஏற்கவில்லை

சனாதனிகளன்றி வேறு எவரும் படிப்பதையோ, பட்டம் பெறுவதையோ, பெரும் பணிகளுக்குச் செல்வதையோ விரும்பாத பா.ச.க.வினர் மனதில் வன்மத் தீ இன்று வரை அணைந்துவிடவில்லை.

பா.ச.க.வின் இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், ஆளுநரைத் தாழ்மைப்படுத்தியவரின் பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்றும், துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இப்போது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகச் சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா என்பதைக் காண வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கல்வி முறை குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் வழக்குத் தொடுத்திருப்பதும், அதற்கு இரு நீதியர்கள் கொண்ட அமர்வு தெரிந்தோ தெரியாமலோ துணை போயிருப்பதும் அதிர்வையே தருகிறது.

அறியாமல், தவறுதலாக, தகுந்த தேர்ச்சி பெறாத ஒருவருக்குப் பட்டம் வழங்கியிருந்தால் மட்டுமே அதனைத் திரும்பப் பெற முடியும் என்பது, இந்தியாவிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வகுத்து வைத்துள்ள விதியாகும்.

பட்டத்தைப் பறிக்கும் உரிமை இல்லை

இதன்றி, படித்து, உரிய முறையில் தேர்வாளர்களால் மதிப்பிடப்பட்டுப் பெற்ற பட்டத்தைப் பறிக்க உலகில் எவருக்கும் உரிமை தரப்படவில்லை.

பொருள், செல்வம் போன்று செலவழிக்கக்கூடியதோ, பிறரால் கைப்பற்றக்கூடியதோ அல்ல கல்வி. தொடர் மதிப்பெண்கள் பெறுவதுதான் நடைமுறைக் கல்வியாக அமைகிறது.

பருவ, ஆண்டுத் தேர்வுகள், மதிப்பீடுகள், மதிப்பெண்கள் ஆகிய பல கட்டங்களைத் தாண்டித்தான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் பட்டமளிப்பு விழா என்பது ஒரு சடங்கு மட்டும்தான். இந்தச் சடங்குகூட இல்லாமல் பட்டம் பெற முடியும்.

ஏதோ கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பது போல அல்லது தரப்பட்ட அரசுப் பட்டத்தை மறுப்பது போல, குழந்தைக்குப் பொம்மையைக் கொடுத்துவிட்டுப் பிடுங்குவது போன்று நீதிமன்றத்தில் வழக்காடப்படுகிறது.

பட்டப்படிப்பு, மேல்படிப்பு என்று எடுத்துக்கொண்டாலும், பாடங்களாகப் பிரித்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் தரப்படுகின்றன. இந்த மதிப்பெண் பட்டியல்கள் மாணவர் ஒருவர் தேர்வாகிவிட்டதை உறுதிப்படுத்துகின்ற அடிப்படை ஆவணங்களாகும். அனைத்துப் பாடங்களிலும் தேர்வு பெற்ற பின்னர் உடனடியாகத் தற்காலிக சான்றும் வழங்கப்பட்டுவிடுகிறது. இதுதான் பட்டம் பெறும் தகுதி பெற்றதைக் குறிக்கும் முதன்மை ஆவணமாகும்.

அதற்குப் பின்னர் பல திங்கள் கழித்துப் பட்டங்கள் உரிய வடிவில் தரப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் துணைவேந்தர்கள் பணியமர்த்தப்படாததால், பட்டங்கள் பெற முடியாத நிலையும் உள்ளது.

முனைவர் பட்டம் என்றால், ஆய்வு தொடங்கும் முன் முதல்நிலைத் தேர்வுகள், அடுத்தடுத்த மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கடந்து ஆய்வேடு முழுமை பெறுகிறது.

இந்த ஆய்வேட்டினை மூன்று வல்லுநர்கள் ஏற்றுக்கொண்ட பின்னர், ஆய்வேடு பொதுவெளியில் முப்பது நாள்கள் வைக்கப்படும். யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்க முடியும். அதனையடுத்து நடைபெறும் பொது வாய்மொழித் தேர்வில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு தங்களுடைய வினாக்களை எழுப்பி விளக்கங்களைப் பெறலாம். இதிலும் தேர்ச்சி பெற்றால்தான் முனைவர் பட்டம் கிடைக்கும். உடனடியாகப் பல்கலைக்கழகம் ஒரு சான்றிதழைத் தரும்.

பட்டமளிப்பு விழா ஒரு நாடகம்

முனைவர் பட்டம் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழா வழியாகத்தான் பெறவேண்டும் என்ற நிலையில்லை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல், அஞ்சலில் அந்தப் பட்டத்தைப் பெறமுடியும். தேர்வு பெற்றவுடன் பட்டத்தைப் பெறலாம் அல்லது பல்லாண்டுகள் கழித்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு மற்றொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். பட்டமளிப்பு விழா என்ற பெயரில் நடத்தப்படுவது ஒரு நாடகம் போன்றதுதான்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில், ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் பயின்ற அனைவரும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாது. முனைவர் பட்டம் பெறுவோர், பரிசுகளை வென்றோர் போன்றோர் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

மற்ற அனைவருக்கும் அவர்கள் படித்த கல்லூரிகள் வழியாகவே பட்டங்கள் தரப்படுகின்றன. அந்தப் பட்டங்களை ஆளுநரோ, இணைவேந்தரோ, துணைவேந்தரோ தங்களது கரங்களால் தருவதுமில்லை, மாணவர்கள் பெறுவதுமில்லை.

பட்டம் பெறப் பட்டமளிப்பு விழா வேண்டியதில்லை

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும். முதல் நாள் மட்டுமே ஆளுநர் வருவார். விருந்தினர் ஒருவர் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துவார். சிறப்பு நிலையில் தேர்வு பெற்றோர் பட்டங்களை நேரில் பெறுவர்.

அடுத்த இரண்டு நாள்களிலும் பல்கலைக்கழக அலுவலர்கள்தான் பட்டங்களை வழங்குவர். கருப்பு அங்கி அணிந்து விழா அரங்கில் சென்று அமர்ந்து திரும்பவேண்டும்; அவ்வளவுதான்.

கருப்பு அங்கியுடன் பட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு அருகில் உள்ள புகைப்பட நிலையம் சென்று படம் எடுத்துக்கொள்ளலாம். இதுதான் நடந்துகொண்டிருந்தது.

1960களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலர்கள் பட்டங்களைத் தந்துவிடுவார்கள். துறைத் தலைவர்கள் பட்டங்கள் பெற்ற விவரங்களை அறிவிக்கும்போது, ஊர்வலம் போல மேடையில் ஏறி இறங்குவதுதான் நடக்கும்.

1968இல் இதுவும் மாறி, பெயர்களைத் துறை வரிசையில் அறிவிக்கும்போது, இருந்த இடத்திலேயே மாணவர்கள் எழுந்து நிற்பர். அதோடு முடிந்துவிடும்.

நடைமுறைகள் இவ்வாறுதான் பெரிதும் அமைகின்றன.

தவறு ஏதும் நடைபெறவில்லை

ஆளுநருக்கு மாறாக, முனைவர் பட்டத்தைத் தன் கையில் தர மறுப்பெதுவும் கூறாமல் துணைவேந்தரும் வழங்கிவிட்டார்; ஆளுநரும் இதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்; மறுத்துப் பேசவில்லை. இதிலிருந்து, ஆளுநர்தான் வழங்கவேண்டும் என்ற கண்டிப்பான நடைமுறை எதுவும் இல்லை என்பது புலனாகிறது.

சிக்கல் ஏதுமின்றி நடைமுறைகள் நிறைவுபெற்றுவிட்டன. பின்னர் இப்போது அதனை எதிர்த்துக் குரல் எழுப்புவது பொருந்துவதாகத் தெரியவில்லை.

ஆளுநரைத் தாழ்மைப்படுத்தும் செயல் நிகழ்ந்துவிட்டதாக வேந்தரான ஆளுநரோ, துணைவேந்தரோ குற்றம் சாட்டியதாக இன்றுவரை தகவல்கள் எதுவுமில்லை.

ஆளுநர் கையில்தான் பட்டம் பெறவேண்டும் என்றில்லை. அஞ்சல் ஊழியர் வழியாகவும் பெறலாம் என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக எப்போதும் இருக்கிறது.

இந்த நிலையில், மூன்று திங்கள்களுக்குப் பின்னர் உயர்நீதிமன்ற வழக்கு ஏன் என்பதுதான் புரியவில்லை.

ஆளுநர் மாளிகையும் துணைவேந்தர் அலுவலகமும் முன்னெடுக்காத ஒன்றைத் தனியர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஏன் எழுப்பவேண்டும்?

பிற்படுத்தப்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்டோர் போன்ற பிறர் படிப்பதையும் பட்டம் பெறுவதையும் பெரும் பணிகளுக்குச் செல்வதையும் பா.ச.க.வினரும் சனாதனிகளும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வெறுப்புணர்வின் வெளிப்பாடுதான் இது.

கல்வியை மறுக்கும் பா.ச.க.

பா.ச.க.வினர் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நிகழ்வும் இதனைத் தெளிவுபடுத்தி வருகின்றன என்பதில் அய்யமில்லை.

குலத் தொழிலை ஊக்குவிக்கும் உதவித் திட்டங்கள், நுழைவுத் தேர்வுகள் போன்ற எளியோரின் எண்ணக் கனவுகளைத் திக்குத் திருப்புவதற்காகப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவப் படிப்பையடுத்து, பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகள், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும் வடிகட்டும் நுழைவுத் தேர்வுகள் வந்துவிட்டன.

கீழ்த்தட்டு மக்கள் படிப்பதைக் கண்டு எரிச்சல், பொறாமை மேலோங்கி வருகிறது என்பதையே இவையெல்லாம் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பார்ப்பனரல்லாத பிற மாணவர்களே தொடர்ந்து முதலிடம் பெற்றுவருகின்றனர். ஒரு சில விலக்குகள் இருக்கலாம். ஒன்றிய அரசுத் தேர்வுகளிலும் இந்த நிலை பரவிக்கொண்டுள்ளது.

இதனால்தான் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பெரிதும் பயன்படும் வகையில், பொருளிய வருவாய் குறைந்தோருக்கென 10% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரைவிட மிகக் கீழான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற முயற்சிகளின் மற்றொரு வடிவமாக ஆளுநர் இழிவு என்ற பெயரில் பெற்ற பட்டத்தைப் பறிக்க முயற்சிக்கப்படுகிறது.

நாளை பட்டம் பெற்றோரது செயல்களில் எதையேனும் காட்டி, வேறு வகையில் பலரது பட்டங்களைப் பறிப்பதற்கான முன்னோட்டமாக இது இருக்கலாம்.

இதனைத் தமிழ்நாடு விழிப்புடன் எதிர்கொள்ளவேண்டும்.

முனைவர் பட்டத்தை ஆளுநர் கையில் பெற மறுத்தவரின் செயல் போராட்ட முறையாகவே போற்றப்பட வேண்டும். எதிர்ப்பு நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது ஏற்கத்தக்கதல்ல என மதுரை அமர்வு நீதியர்கள் கருத்துரைத்துள்ளனர்.

ஒப்புக்கொண்டபடி சட்டப்பேரவையில் உரையாற்றாமல், நாட்டுப் பாடலைப் பாடுவதற்கு முன்பு வெளியேறிய ஆளுநர் ரவிக்கு என்ன தண்டனை வழங்குவது? அவருடைய ஆளுநர் பொறுப்பைப் பறித்துவிடமுடியுமா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதியர் மீது காலணியை வீசியதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர் வேண்டாம் என்றால் விட்டுவிடலாமா?

இவற்றையெல்லாம் நீதியர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button