கட்டுரைகள்

இன்றைய இளைஞர்களின் தேவை பகத் சிங்

மதுர் சத்யா

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தென் சென்னை ஆஸ்திரேலியப் போர்த்தந்திர ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் உலகின் திசைவழியைத் தீர்மானிக்கும் முக்கியமான 64 தொழில்நுட்பங்களைப் பற்றிய ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அதன்படி அந்த 64 தொழில்நுட்பங்களில் சீனா 57ல் முதல் இடத்தில் உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் 2003 ஆம் ஆண்டு சீனா வெறும் மூன்றே தொழில்நுட்பங்களில்தான் முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவோ 2003லும் சரி 2024லும் சரி ஒரு தொழில்நுட்பத்தில் கூட முதல் இடத்தில் இல்லை.

இதுவே வருத்தமான செய்தி என்றால், இன்னொரு செய்தியோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் இந்த அவலத்தின் ஆழம் இன்னும் பெரிதாகிறது. சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் தரவுகளின்படி உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். ஆக உலகை முன்னகர்த்திச் செல்லும் ஆற்றலுடைய ஒரே நாடாக இருந்தும் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பது நம் நாட்டு ஆளும் வர்க்கம் இத்தலைமுறை இளைஞர்களுக்குப் புரியும் வரலாற்றுத் துரோகம்.

சீனா தன் இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, மரபணு திருத்தம் என்று பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தியாவில் பாடத்திட்டத்தில் மனுநீதியையும், கீதையையும் சேர்க்க விதிகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இக்கொடுமையை எதிர்த்து இளைஞர்கள் போர்க்கொடி உயர்த்த அவர்களுக்கு முன்மாதிரி தலைவர்கள் வேண்டுமே. அதற்கும் இடமளிக்காமல் காவி வண்ணக்குப்பிகளோடு சுற்றும் கும்பல் சுபாஷ் சந்திர போஸ் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை அனைத்துத் தலைவர்களுக்கும் வண்ணம் பூசியிருக்கிறது.

நல்லவேளையாக கார்ல் மார்க்ஸ் வெளிநாட்டுக்காரராகப் போய்விட்டார் என்று நாம் பெருமூச்சு விடமுடியாத நிலையை உருவாக்க காவிகள் அபகரிக்க முயற்சிக்கும் தலைவர்தான் மார்க்ஸின் இந்தியப் புதல்வனான புரட்சியாளர் பகத் சிங். பாபாசாகேப் அம்பேத்கருக்குக் காவி கோட் என்றால் புரட்சியாளர் பகத் சிங்குக்கு காவி தலைப்பாகை. ஆனால் இது எதேச்சையாக நடந்ததா? இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் காரணமில்லையா?

வர்க்க சமரசத்திற்குக் கொடுக்கப்பட்ட பலி

நவீன இந்திய வரலாற்றின் வேடிக்கைகளுள் ஒன்று காந்தி காலம் முழுக்கச் சனாதனக் கோட்பாட்டிற்கு ஆதரவாக இருந்தார், பகத் சிங் அதே கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தீவிர சனாதனிகள் காந்தியின் உயிரைக் குடித்ததோடு இன்றும் அவரை தேசவிரோதியாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே பகத் சிங்கைப் போற்றுகின்றனர். இதற்கு முழுப்பொறுப்பும் காந்தியின் வழித்தோன்றல்களையே சேரும்.

காந்தி, பகத் சிங், சாவர்க்கர் போன்றவர்கள் வரலாற்றுக் குறியீடுகள். புரட்சியாளர் பகத் சிங் வர்க்கப் போருக்கான குறியீடு, காந்தியடிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தெளிவானது. அதில் மக்களைத் திரட்டி இயக்கமாக்கியதில் அவரது பங்கு இணையற்றது. ஆனால் அவர் ‘வர்க்கம்’ எனும் கோட்பாட்டையே நிராகரித்தார். சுரண்டிக் கொழுப்பவர்களை, ‘சமூகத்தின் அறங்காவலர்கள்’ என வர்ணித்தார். இது அவா¤ன் வர்க்க சமரசத்துக்கான குறியீடு.

ஆளும் வர்க்கம் நம்மோடு செய்து கொண்ட சமரசம் என்னவென்றால் “பகத் சிங் புகழைத்தானே பாட வேண்டும்.. தாராளமாக அவர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தார் என்பதைச் சொல்லிக்கொள்ளுங்கள்” என்பதுதான். ஆனால் தியாகம் என்பது ஒரு இலக்கை அடைய வழியே தவிர, அதுவே இலக்கல்ல. மார்க்ஸ் நல்வாழ்வை தியாகம் செய்தார் – தியாகம் செய்தே தீரவேண்டும் என்பதாலா? இல்லை நம் விடுதலைக்கான தத்துவத்தை நமக்காக வகுத்துத் தரவே செய்தார். அப்படியிருக்க மார்க்ஸின் தத்துவத்தைப் பரப்புவதை இரண்டாம் பட்சமாக்கி, அவர் பிள்ளைகளைப் பறிகொடுத்து வறுமையில் வாடினார் என்பதையே முதன்மைப்படுத்தினால் எப்படியிருக்குமோ அதுவே புரட்சியாளர் பகத் சிங் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற அறிவுரைகளை மறந்து அவர் தியாகத்தை மட்டுமே போற்றிக்கொண்டிருப்பது.

அறிவியல் பூர்வமான தியாகம்

பகத் சிங் தூக்குமேடை ஏறுவோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்தில் குண்டு வீசியது புரட்சிகர வேட்கையில் செய்த சாகசமல்ல. அது மிகவும் நிதானமாகச் சிந்தித்துக் கையில் எடுத்த அறிவியல் பூர்வமான ஒரு உத்தி. பகத்சிங் அவர்களின் காலத்துக்கு முன்பு புரட்சிகர வேட்கைகொண்ட, இந்தியச் சுதந்திரத்திற்காக எதையும் இழக்கத் தயாராக இருந்த நபர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, தங்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குதலைப் புரிந்துகொள்ளவும், அதை எதிர்த்துப் போராடவும் தத்துவ வழிகாட்டுதல் இல்லை. ஆகவே அவர்கள் பெரும்பாலும் தனிமனித பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களாகவே இருந்தனர். பகத் சிங்கைப் பொறுத்தவரையில் மார்க்சிய லெனினிய தத்துவம் தான் அவர்களை வழிநடத்த முடியும். ஆனால் அதனைச் சாத்தியப்படுத்தப் பெரும் தடை இருக்கிறது. ஆங்கிலேய அரசின் ஒடுக்குதல் மற்றும் கண்காணிப்பைத் தாண்டி புரட்சிகர இயக்கம் மக்களிடம் செல்வது பெரும் சவாலாக இருக்கிறது. ஆதலால் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்ட ரகசிய இயக்கமாகவே இருக்கிறது என்பதை உணர்கிறார். எனவே முதலில் மக்களின் கவனத்தை, குறிப்பாக உழைக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் தொழிலாளர்களின் உரிமைகளை இல்லாமல் செய்யும் சட்டத்தை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு திட்டமிட்டிருக்கும் நாளன்றே சட்டமன்றத்தில் குண்டு வீச வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. இப்படியாக உயிரை விடத் துணிந்த பின்பும் மார்க்சிய லெனினிய தத்துவத்தைக் கொண்டுசேர்க்கும் இலக்கிலும் பகத் சிங் சற்று வேறுபடுகிறார்.

புரட்சிகர இயக்கம் பின்னடைவைச் சந்திக்கும்போது புரட்சிகர முன்னேற்றம் நம் கைநழுவிப் போகாமல் தக்கவைத்து, அதனைத் தொடரச் செய்ய நாம் கொடுக்கும் விலையாகத்தான் சமரசம் இருக்க வேண்டுமே தவிர, புரட்சியை அலமாரியில் பூட்டிவைத்துவிட்டு எதிரியோடு கைகுலுக்கும் வண்ணம் இருக்கக் கூடாது என்பதுதான். இதுவே லெனினியப் பாதைக்கும் காந்தியப் பாதைக்கும் உள்ள வேறுபாடாக அவர் இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.

இங்கே அவர் சமரசம் செய்யத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, “நான் சமரசம் செய்துகொள்வதைத் தூயப் புரட்சியாளன்” என்று மார்தட்டிக்கொள்ளும் சாகசவாதிகளையும் மறைமுகமாக அம்பலப்படுத்துகிறார். ஏனெனில் புரட்சியாளர் என்பவர் மக்கள் நலனுக்காக சாகவும் துணிய வேண்டும், தேவையான நேரத்தில் சமரசம் செய்யவும் துணிய வேண்டும்.

நமக்கான இன்றைய பாடம்

இளைஞர்களுக்கு இருவேறு தத்துவத்தை வேறுபடுத்திக் காட்டும் அவர், இருவேறு அணிவகுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார். அப்போது இருந்த கட்சிகளைப் போல பண்ணையார்களையும், முதலாளிகளையும் கொண்டு ஒருபோதும் இந்தியாவுக்கான உண்மையான விடுதலையைச் சாத்தியப்படுத்த முடியாது, அது கண்டிப்பாக உழைக்கும் வர்க்க மக்களுக்கான கட்சியால் மட்டுமே சாத்தியம் என்பதை விளக்குகிறார். அந்த வர்க்கத்தை ஒன்று திரட்ட ஒரு கட்சிக்கு அவசியம் தேவை பெரும் இளைஞர்கள் பட்டாளம் என்கிறார். ஆகையால் புரட்சிக்கான அடிப்படைக் கடமைகளை இளைஞர்களான நம்மிடமே ஒப்படைக்கிறார் புரட்சியாளர் பகத் சிங்.

அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் நமக்கு எது தடையாக இருக்கும் என்பதை 1928ல் அவர் கீர்த்தி என்ற பஞ்சாபி பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். அதுதான் சாதி. சாதிதான் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கான தடை என்றும், தீண்டாமைதான் இந்நாட்டின் மிகவும் வெட்கப்படவேண்டிய சமூக இழிவு என்றும் சொல்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கவின் என்ற படித்த பண்பான இளைஞரைப் பட்டியல் சாதியில் பிறந்த காரணத்திற்காகவே கொடூரமாகக் கொன்ற சாதிவெறியன் சுர்ஜித் 60 வயது கிழவன் அல்ல, வெறும் 25 வயதே ஆகிய இளைஞன் – படித்தவன்.

புரட்சிக்கும் நமக்கும் நடுவே நிற்கும் தடைகளில் மிகப்பெரியது சுர்ஜித் இளைஞர்களிடம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும் சாதியம். அதுவே 57 தொழில்நுட்பங்களில் சீனா முதலிடத்தில் இருக்கிறது என்ற செய்தியை மட்டுமே வாசிக்கத் தகுதியானவர்களாக நம்மை வைத்திருக்கிறது. சாதி என்னும் தேசவிரோதத்தை விரட்டி அடிப்போம்! வர்க்கப் போராட்டத்தை முன்னேற்றிச் செல்வோம்!! இன்குலாப் சிந்தாபாத்!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button