
அளவில்லாப் பொய்கள், தெளிவில்லா முழக்கங்கள் என்று நாள்தோறும் செயல்பட்டு வருகிறது ஒன்றிய பாஜக அரசு!
உலகிலேயே மிகவும் வணிகமயமாக்கப் பட்ட மருத்துவத் துறையைக் கொண்ட இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி என்று போகிற போக்கில் பொல்லாத பொய்யை அவிழ்த்து விட்டு உள்ளார் அமித்ஷா.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசியப் புற்றுநோய் நிறுவனத்தில் ஸ்வஸ்தி நிவாஸ் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும்,
60 கோடி ஏழை மக்களுக்கு, தலா 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு உதவிய தனியார் நிறுவனங்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துத் தனது பசப்புரையை நிகழ்த்தியுள்ளார்.
உண்மை என்ன?
ஆயுஷ்மான் பாரத் மூலம் பெரும் மக்கள் தொகையினருக்குச் சுகாதாரப் பாதுகாப்பு என்ற வாக்குறுதி, தனியார் மூலதனத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் எந்தவகை தாக்கங்களை ஏற்படுத்தும்? அது எப்படி மக்களுக்கு உதவ முடியும்?

கோவிட்-19 தொற்றுநோய் காலம் அரசின் ஏராளமான கட்டமைப்பு தோல்விகளை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது இந்தச் சுகாதார அமைப்பும் அடங்கும். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY), பாரதிய ஜனதா கட்சியின் முதன்மையான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகப் பரப்புரை செய்யப்படுகிறது. இது 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை சுகாதாரக் காப்பீடு வழங்கும் எவரையும் விட்டுவிடாதீர்கள்” என்றும் வேறு கூறுகிறது. 60 கோடி மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது விளங்கவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் என்று சொன்னால் அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. அத்தோடு ஆண்டுதோறும் மருத்துவச் சுய செலவுகளால் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள சுமார் 7 கோடி பேர் வறுமைக் கோட்டுக் கீழே வருகின்றனர் என்று நிதி ஆயோக் கூறுகிறது. ஆனால் இந்தச் சேவை வழங்கலுக்காகத் தனியார் சுகாதார வழங்குநர்களை நம்புவதன் மூலமே இதனைச் செய்ய முடியும். பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தனியார் மருத்துவமனைகளை மட்டுமே நம்பி இருப்பது இந்தியா போன்ற அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு ஏற்றதல்ல. எனவே, இந்தச் சுகாதாரக் காப்பீடு மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லை.
தேசியச் சுகாதார ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை, ஊரடங்கு காலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் சராசரி வாராந்திரக் கோரிக்கைகள் 51% குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் கவலையளிக்கும் விதமாக, புற்றுநோய் பராமரிப்பு மற்றும் பிரசவங்களுக்கான கோரிக்கைகள் முறையே 64% மற்றும் 26% ஆக வீழ்ச்சியடைந்து உள்ளன.
உள்கட்டமைப்பு இல்லாத தனியார் சுகாதார அமைப்புகள்
காப்பீட்டு வலையமைப்பில் உள்ள மருத்துவமனைகளின் பதிவேட்டில் (ROHINI) இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்த மிதா சவுத்ரி மற்றும் பிரிதம் தத்தா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 3% தனியார் மருத்துவமனைகள் மட்டுமே தகுதியுடையவை என்பதைக் கண்டறிந்தனர். அவர்களின் மதிப்பீட்டின்படி, சராசரியாக, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 1.28 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்குச் சுகாதாரப் பராமரிப்பை வழங்க இயலும் என்றும், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் கூறுகின்றனர்.
காப்பீட்டு நிறுவனங்களால் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவை 50க்கும் குறைவான படுக்கைகளைக் கொண்டிருந்தன. இவற்றில், மூன்றில் இரண்டு பங்கு 30க்கும் குறைவான படுக்கைகளைக் கொண்டிருந்தன. அகில இந்திய அளவில், தரவுத் தொகுப்பில் உள்ள சுமார் 65% மருத்துவமனைகள் 11-50 படுக்கைகளும், 13% 50-100 படுக்கைகளும், மீதமுள்ள 8% 100 படுக்கைகளுக்கு மேல் படுக்கைகளைக் கொண்டிருந்தன என்று பல முதன்மை ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது, அவை நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் 50 க்கும் குறைவான படுக்கைகளைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. அரசு சுகாதார நிறுவனங்களை, மருத்துவமனைகளை வளர்த்து, விரிவாக்காமல் தனியாரை மட்டும் ஊக்குவித்து லாபம் கொழிக்க வைக்கும் திட்டமாகத்தான் இது அமைந்துள்ளது என்பது மிகப் பெரும் தோல்வியாகும்.
தொற்று நோய்க் காலங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்திவிட்டுச் சென்றனர். அரசு நிறுவனங்கள்தான் பெரும் பணியினைச் செய்து முடித்தனர் என்பது நமது அனுபவமாகும். நிலைமை இப்படி இருக்க எப்படி அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்கும்?
ஊழல் மயமான ஆயுஷ்மான் பாரத்!
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், பயனாளிகள் தொடர்பாக 1,200 ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமைக் கணக்காயர் (CAG) ஆய்வு இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நிறைய குறிப்பிட்டுள்ளது.
முறைகேடுகள் நடைபெற்ற 376 மருத்துவமனைகளில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ஆறு மருத்துவமனைகள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகள் முடிந்த பிறகு, ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 97 மருத்துவமனைகள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
தனியார் துறையில், அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 75 சதம் 25 படுக்கைகளுக்கும் குறைவானவை என்று இதன் வலைத்தளத்தில் கிடைக்கும் “பி.எம்-ஜெய் ஐ ஒரு வருடத்தில் செயல்படுத்துவதில் கற்றுக்கொண்ட பாடங்கள்” என்ற ஆவணம் கூறுகிறது. சிறந்த செயல்படுத்தலுக்குச் சவாலாக இதில் நடைபெரும் மோசடியைப் பட்டியலிடுகிறது தேசியச் சுகாதார ஆணையம். எனவே, தனியார் சுகாதார வழங்குநர்கள் “லாப நோக்கத்துடன்” செயல்படுகின்றனர் என்பது கடந்த காலத்தில் நிரூபணமாகி உள்ளது.
மூத்த குடி மக்களுக்கான மருத்துவக் காப்பீடு
மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் பி.எம்-ஜெய்: வரையறுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை, காப்பீடு, மருத்துவமனை வலையமைப்பு முழுக் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் காப்பீடு போதுமானதாக இருக்காது என்பது நடைமுறையில் தெளிவாகிறது. இதற்கான வயது 70 வயது என்று குறிக்கப்படுகிறது. தாண்டியவர்கள் என்றால் இந்த ஐந்து லட்சம் ரூபாய் இருவருக்கும் இடையே பங்கிட்டுக் கொள்ளப்படும் என்பது எவ்வளவு அநீதியானது. ஆனால் அரசின் அறிவிப்புகளின் படி 60 வயதைத் தாண்டியவர்கள் மூத்த குடிமக்களாவர். அப்படி எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்த இந்தியாவில் முத்தம் 14.9 கோடி பேர் இதன் கீழ் வருவர். 70 வயது என்ற அளவுகோல் வைக்கப்பட்டதால் 8.9 கோடி பேர் இதில் விடுபட்டுள்ளனர். இதையும் இணைத்தால் இத்திட்டத்திற்கான கூடுதல் நிதி 150% ஒதுக்கப்பட வேண்டும். அதாவது 5100 கோடி ரூபாய் கூடுதலாக வரும். இதனை தடுக்கவே எழுபது வயது என்ற வரம்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதிலும் எவ்வளவு ஏமாற்று வேலை!
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய, மாநிலப் பங்கீடுகள்!
இந்த நிதியும் கூட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்கு 60:40 ஆக உள்ளது. ஆனால் பேர் என்னவோ பெத்த பேராக, பிரதமர் பேரில் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இரண்டு இமயமலை மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவற்றிற்கு 90:10 ஆகவும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்கு 100% ஆகும். அதேசமயம் சட்டமன்றம் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஏற்கனவே மாநிலங்களுக்கு உள்ள 60:40 ஆகும்.
ஆயுஷ்மான் பாரத் பெரும்பாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் சில வகையான புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளுக்குக் காப்பீட்டை விலக்கி விடுகிறது என்பதை நினைவில் கொண்டால் இது போதுமானது அல்ல என்பது தெளிவாகும். எனவே மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும், ஒரு வலுவான பொதுச் சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதும்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வே தவிர வீண்பெருமை பேசிப் பீற்றிக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை. ஒன்றிய அரசுக்குப் பித்தம் தெளிந்தால் போதும்!