
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பி.எம்.ஆர்.முத்து விழா மஹாலில், டி.ராமசாமி முன்னாள் எம்எல்ஏ, எஸ்.குணசேகரன் முன்னாள் எம்எல்ஏ, டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அரசியல் அறிக்கையை மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிமுகம் செய்தார். வேலை அறிக்கையை மாநிலத் துணைச் செயலாளர் எம்.ரவி முன்வைத்தார். சிறப்புத் தீவிர வாக்காளார் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து, மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி விளக்கிப் பேசினார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
மேகதாது அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்க!
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மற்றும் இறுதித் தீர்ப்பின் நிறைவாக வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றில் எதையும் ஏற்காத கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவதற்குத் தீவிரம் காட்டி வருகிறது. மேகதாது அணை திட்டத்தை மேற்கொள்ள, கர்நாடகா பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது.
கர்நாடக மாநிலத்தின் அத்துமீறல், சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் களப் போராட்டங்கள் வழியாகத் தடுக்க தமிழ்நாடு அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேகதாது அணை கட்டுமானம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
கீழ்ப் பகுதி பாசன உரிமை உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல், ஒன்றிய நீர்வள ஆணைய, காவிரி நீர் ஆணைய அனுமதி இல்லாமல் மேகதாது அணையைக் கட்டமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள அதேநேரத்தில், மேகதாது அணை குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க, காவிரி நீர் ஆணையம், கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இது, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான அடுத்தகட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். இது கீழ்ப் பகுதி பாசன உரிமைக்காகப் போராடிவரும் மாநிலங்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாது புறக்கணிக்கும் செயலாகும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அரசுகளும், மக்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், காவிரி தீர்ப்பை ஏற்க மறுத்து வரும் கர்நாடகத்திற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் காவிரி கழி முகப்பகுதி பாசனத்தைப் பாதுகாத்திட அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
விவசாயத் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ.திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரக மருத்துவத் துறை மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை ஆகியவை இணைந்து, தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர் உடல் நலன் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. அந்த ஆய்வில், விவசாயத் தொழிலாளர்களுக்கு அதிக அளவு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக அளவில் புகழ்பெற்ற லான்ஸ்செட் மருத்துவ இதழ் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. “50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்களின் சிறுநீரகச் செயலிழப்புக்கு, சர்க்கரை நோயோ, மிகை ரத்த அழுத்தமோ காரணமில்லை. கடுமையான வெயிலில் நின்று வேலை பார்ப்பதும். அதனால் ஏற்படுகிற நீர்ச்சத்து இழப்பும், பணி நேரத்தில் போதிய அளவில் குடிநீர் அருந்தாததும் சிறுநீரகச் செயல் இழப்புக்குக் காரணமாகும்” எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் நலிவு தெரிந்தும், மருத்துவச் செலவுகளுக்கு அஞ்சி, சிகிச்சைக்குச் செல்லாமலேயே காலம் தள்ளுவதால், நோய் தீவிரமடைந்து கடைசியில் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. உடல் உழைப்புத் தொழிலாளர் எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கை முதன்மையானது.
தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்க, இஎஸ்ஐ திட்டம் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. விவசாயத் தொழிலாளர்களையும் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து விரிவான மருத்துவ சேவை வழங்க வேண்டும். அதற்குப் பொருத்தமான வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என்றும் ஒன்றிய அரசையும், இதற்கான வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளர் பங்குத் தொகையை மாநில அரசு முழுமையாகச் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து, தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்!
இந்தியாவின் தொழில் உற்பத்தியில் முதல் வரிசையில் இருக்கும் தமிழ்நாட்டில், பல்வேறு தொழில்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் தொழிலகங்கள் மற்றும் நிறுவனங்களில், நிரந்தரத் தொழிலாளி எண்ணிக்கை வெகுவேகமாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம், வெளிமுகமை முறைகளில், சட்டபூர்வ உரிமைகளைப் பெற முடியாத வகையில் தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி வழங்க வேண்டியதை விட குறைவானதாக உள்ளது. அதனையும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை.
நிரந்தரம் செய்யப்பட்ட உள்ளாட்சிப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர் என அழைக்கப்பட்டனர். இப்போது தூய்மைப் பணியாளர் என்று அழகிய தமிழில் அழைக்கப்படுகின்றனர். ஆனால் நிரந்தரத் தொழிலாளியின் ஊதியத்தில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவான ஊதியம்தான் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அடித்தட்டில் உள்ள, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பறித்திருப்பது சமூகநீதிக் கொள்கைகளுக்கு மாறானதாகும்.
இதே போலவே மருத்துவமனைப் பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியத்தை வழங்குவதோடு, அவர்கள் மீது அதிகமான பணிச் சுமையும் சுமத்தப்படுகிறது.
போக்குவரத்துப் பணியாளர்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரியும், அரசுப் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரியும் அரசுக்கு முறையீடு செய்து வருகிறார்கள். மேற்சொன்ன அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும், பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய குறைகளைக் கேட்கவோ, அதன்மீது அக்கறை செலுத்தி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவோ அரசு உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவர ஏஐடியுசி மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் எட்டாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாத நிலையில், அந்தத் தொழிலாளர்கள் அனைவரும், அரசு தம்மைக் கைவிட்டு விட்டதாகக் கருதுவதில் நியாயம் உள்ளது.
மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் போன்ற உயர்மட்ட முத்தரப்புக் குழுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கூட்டப்படாததால், இதுபோன்ற விஷயங்களை விவாதிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வேறு சில முத்தரப்பு குழுக் கூட்டங்கள் கூட, விவாதிக்கப்படும் விஷயங்களில் அக்கறையும் கவனமுமின்றிச் சடங்காக நடத்தி முடிக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசு போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, குறைகளைக் களைவதற்கும், சுமுகத் தீர்வு காண்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
ஆஷா பணியாளர் ரேவதிக்கு இழைக்கப்பட்ட கொடுமை:
தக்க நடவடிக்கை கோரி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியைச் சார்ந்த கரியாலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆஷா பணியாளராக ரேவதி பணியாற்றுகிறார். அவர் மகப்பேறு முடிந்து, ஐந்து மாத காலத்தில் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சையும் செய்த பின்பு, தனது குழந்தையைக் கவனிக்க யாரும் இல்லாததால், குறை மாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் சிசுவையும் தூக்கிக்கொண்டு பணிக்கு வந்துள்ளார்.
அந்தப் பகுதியில் கருவுற்ற ஒரு பெண்ணை முன்பேறுகால மருத்துவ சிகிச்சைக்காக, அங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் பணிக்கப்பட்டு இருக்கிறார். கைக்குழந்தையோடு அவ்வளவு தூரம் ஒரு கருவுற்ற பெண்ணையும் அழைத்துச் செல்வதில் உள்ள சிரமங்களை எடுத்துச் சொல்லி, தன்னை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறு ரேவதி மன்றாடிக் கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்த செவிலியர், அந்த வேலையைச் செய்துதான் ஆக வேண்டும் என்றும், மறுத்தால் செயல்திறன் பதிவேட்டில் கையெழுத்திட மாட்டேன் என்றும் அகந்தையோடு உத்தரவிட்டுள்ளார். சுகாதார மையத்தின் மருத்துவரும் தலையிட மறுத்துவிட்டார்.
வேறு வழியின்றி அந்தப் பணியை மேற்கொண்டு அவர் பயணம் செய்த போது, அந்தப் பச்சிளம் குழந்தை இறந்து விட்டது. இதற்கு அந்த செவிலியர் மற்றும் மருத்துவ அதிகாரியின் மனித நேயமற்ற, பொறுப்பில்லாத நடவடிக்கையே காரணமாகும். ஈடு செய்ய முடியாத இழப்புக்கு உள்ளான ரேவதிக்கு நிரந்தர அரசு பணி வழங்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து, தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்
இந்தியாவிலேயே தமிழ்நாடு மிக வேகமாக நகர்மயமாகி வருகிறது. போக்குவரத்து வசதிகளின் தேவை உயர்ந்து கொண்டே செல்கிறது. சாலைகளை விரிவாக்கி நவீனமயப்படுத்தினாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இது பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும், கால விரயத்தையும் கூடுதலாக்குகிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற மாநகரங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் திணறி வருகின்றன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி கோவை, மதுரை பெருமாநகரங்களில் முறையே ரூ.11,340 மற்றும் 10,740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவது என்று தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசின் அறிக்கையைப் பரிசீலித்த ஒன்றிய அரசு, சில திருத்தங்களைக் கோரியது. அதன்படி திருத்தங்கள் செய்து மீண்டும் 2024 நவம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசு 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, கோவை, மதுரை மாநகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து இருப்பது மட்டுமல்ல, மாநகராட்சிக்கு அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மாநகராட்சியின் பகுதிகளாக மாறி கோவை, மதுரை மாநகரங்கள் பெரிதும் விரிவடைந்து விட்டன. இவற்றையெல்லாம் கவனத்திலேயே கொள்ளாமல், 14 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு நிராகரித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் பாதகமிழைப்பதாகும்.
மதுரை, கோவையை விட சிறிய, நகரங்களான, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மீரட், ஆக்ரா உள்ளிட்ட சிறிய நகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஒன்றிய அரசின் இந்த உள்நோக்கம் கொண்ட, நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிகழ்கால வளர்ச்சியைக் கணக்கிலெடுத்து, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தூய்மைப்பணியாளர், டாஸ்மாக் பணியாளர் போராட்டங்களுக்கு ஆதரவு
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 13 பிரிவு பணியாளர்களும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 8 ஆம் நாளன்று அரசின் தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்), மதுபானங்கள் விற்பனைப் பிரிவில் 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும், இன்னமும் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியமும், ஓய்வூதியமும் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் டிசம்பர் 16 ம் தேதியன்று தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இத்தொழிலாளர் போராட்டங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
பணியாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிற நியாயமானதும், சட்டரீதியானதுமான கோரிக்கைகளை ஆக்கப்பூர்வமாக அணுகி சுமுக தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசை மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கை செம்மொழிப் பூங்காவில் காட்சிப்படுத்துக
கோவை சிறைச்சாலையில் விடுதலைப் போராட்ட வீரர், தியாகி வ.உ.சி. இழுத்த செக்கு கோவைச் சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்தச் சிறைச்சாலை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. உலக மக்கள் அனைவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் நமது முன்னோர்கள் அனுபவித்த கொடூரமான துயரங்களை, கண்டுணரும் பொருட்டு, தியாகி வஉசி இழுத்த செக்கை, கோவை செம்மொழிப் பூங்காவில் நிறுவ வேண்டும் என்றும், உரிய வகையில் அங்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
வீடு இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு, விதிகளைத் தளர்வு செய்து வீட்டுமனை வழங்கிடுக!
தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் 86,272 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கிட அரசாணை (எண்.97 நாள்: 21.01.2025) வெளியிடப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. அத்துடன் மேய்க்கால் புறம்போக்கில் வீடு கட்டி உள்ளோருக்குப் பட்டா வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா கிடைக்கவில்லை. சட்ட விதிகளைத் தளர்வு செய்து அவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். இதன் முன்னோடியாக, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் அரசாணை (எண். 854 நாள்: 30.12.2006) வெளியிட்டுத் தளர்வு செய்ததை, அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அதேபோல் மாநகராட்சியிலிருந்து 16 கி.மீ. தூரம், நகராட்சி, பேரூராட்சிகளில் 8 கி.மீ. தூரத்துக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கக் கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்த எல்லைக்குள்ளாக வீட்டுமனை வழங்க முடியவில்லை. இதிலும் தளர்வுகள் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் மாநில அரசை வலியுறுத்துகிறது.
சிறப்பு உட்கூறு திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு மடை மாற்றாதீர்
ஒன்றிய அரசின் சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றாமலும், ஒன்றிய அரசுக்குத் திருப்பி அனுப்பாமலும், பட்டியலின மக்கள் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் செயல்படுத்திட பொருத்தமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட ரூ.5.50 லட்சம் நிதி வழங்குக!
வீடு இல்லாத பட்டியலின, பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, தமிழ்நாடு முழுவதும் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆதி-திராவிட நலத்துறை மூலம் அரசு வாங்கியும் கூட, 30 ஆண்டுகளாக அளவீடு செய்து வழங்கப்படாமல் உள்ளது. வீட்டு மனைகளை அளவீடு செய்து, அந்த மனையில் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட ரூ.5.50 லட்சம் வழங்கவும், சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு கட்டுவதற்கு ரூ.2.50 லட்சம் வழங்குவதை ரூ.5.50 லட்சமாக உயர்த்தவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.