தமிழகம்

புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பும் இறப்பும் மலிவானதா?

என்.எஸ்.பிரதாப் சந்திரன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் வாயலூர் அருகே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், வடசென்னை அனல்மின் நிலையத் திட்டம் நான்கில் 2x 660 மெகா வாட் என, 1320 மெகா வாட் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி ரூபாய் 11 ஆயிரம் கோடி திட்டத்தில், பெல் (BHEL) நிறுவனம் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 70 சதவீதப் பணிகள் முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

பெல் நிறுவனத்தில் இருந்து பல பணிகள், துணை ஒப்பந்தங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் நிலக்கரி சேமிப்புக் கிடங்கிற்கு ராட்சத அளவிலான மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் எங்கும் இதுபோன்ற மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறவில்லை. ஆனால் வயலூரில் உள்ள அனல் மின் நிலையம் அலகு நான்கில் மட்டுமே நிலக்கரி சேமிப்பு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர். நிலக்கரி சேமிப்புக் கிடங்கின் மீது வெயில் மற்றும் மழை நீர் உட்புகாமலும், காற்று படாமலும் இருப்பதற்காகவே அமைக்கப்படுவதாகத் தெரிகிறது.

ஆனால் மேற்கூரை அமைக்கும் ஒப்பந்தப் பணியைச் செய்யும் பெங்களூரைச் சார்ந்த “மெட் கர்மா” நிறுவனம் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலேயே தொழிலாளர்களை வேலை வாங்கியுள்ளனர்.

இந்தப் பணிகளில், உள்ளூர்த் தொழிலாளர்கள் மிகக் குறைவாகவும், அதற்கு மாறாக 3000 திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 30 அன்று மாலை நிலக்கரி சேமிக்கும் கிடங்கிற்கு, 135 அடி உயரத்தில் ராட்சத அளவிலான மேற்கூரை வளைவு அமைக்கும் பணியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மிக நீளமான இரும்பு ராடுகளைக் கொண்ட சாரம், 135 அடி உயரத்தில் இருந்து சரிந்ததால், அந்தப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்களும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது நான்கு தொழிலாளர்களும் என மொத்தம் 9 அசாம் மாநிலத் தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அந்தப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடும் பொழுது, அவர்களைப் பாதுகாப்பதற்குரிய சாரமோ, ஒருவேளை அவர்கள் தவறி விழுந்து விட்டால், அவர்களைத் தாங்கிப் பிடிப்பதற்கான வலை பின்னல் ஏற்பாடுகளோ, அந்நிறுவனத்தால் செய்து தரப்படவில்லை என்பது கவலை தரத்தக்கதாகும்.

135 அடி உயரத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பணியை மேற்கண்ட நிறுவனமோ, அவர்களது பணியை மேற்பார்வையிட்ட அதிகாரிகளோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்களை வைத்து மிகவும் கடினமான, உயிர் ஆபத்தான இந்தப் பணியை அந்நிறுவனம் செய்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குழந்தை, குடும்பம், பெற்றோர், சுற்றம் என அனைத்தையும் விட்டுப் பிரிந்து, தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றிய போது தங்கள் இன்னுயிரைப் பணியிடத்திலேயே பலி கொடுத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனைக்குறியது.

தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பில் சமரசம் செய்து, அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரர்கள் மீது அஜாக்கிரதையாகச் செயல்படுதல், உயி£¤ழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் அதுமட்டும் போதுமானதல்ல, அகில இந்தியக் கட்டட, கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டத்தின்படியான பணியிடப் பாதுகாப்புகள், எண்ணூர் அனல் மின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். முதன்மை வேலை அளிப்பவர், நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும், அதன் கடமைகளைச் சரியாக நிறைவேற்றினார்களா? என்று ஆராய்ந்து தக்க நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களை முறையாகப் பதிவு செய்வது இல்லை, அவர்கள் தங்குமிடம், அவர்களுக்கான சுகாதாரம், குறைந்தபட்ச ஊதியம் போன்ற பிரச்சனை குறித்தும் அரசு கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு தொழிலாளர்களும் குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்கு மேலாகத்தான் பணியாற்றுகின்றனர். எட்டு மணி நேர வேலை என்கின்ற சட்டம் இங்கு கனவாகவே உள்ளது. இதனால் தொழிலாளர்கள் இயல்பிலேயே களைப்படைந்து விடுகின்றனர்.

பெரும் முதலாளிகளின் லாப வெறிக்காக, மலிவான கூலிக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும், உரிய வாழ்விட வசதிகளும் ஏற்படுத்தித் தராமல் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். தொழிலாளர்கள் பாதுகாப்பு விஷயங்களில் முதலாளிகள் மட்டுமல்ல, அரசுகளும் அக்கறையற்று இருப்பதை இந்த விபத்து நாட்டுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பணியிட விபத்துகளும் மரணங்களும் தினந்தோறும் ஒரு தொடர்கதையாக மாறிவிட்டது.

இதற்குக் காரணம், தொழில் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரிலான பொறுப்பற்ற ஒப்பந்த முறையாகும். இந்நிலையை மாற்றி, தக்கப் பணியிடப் பாதுகாப்பு விதிகளைக் கறாராக அமலாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண நிதியைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலித்து வழங்க வேன்டும்.

இது புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை என்று உள்ளூர் தொழிலாளர்கள் கடந்து செல்லாமல், புலம்பெயர் தொழிலாளர்களை அமைப்பாக்கி, அவர்களைப் பாதுகாப்பதற்கான இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். இது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை அல்ல, தொழிலாளர் வர்க்க உ£¤மைப் பிரச்சனை.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button