அறிக்கைகள்

ஆராய்ச்சிப் படிப்பை அழிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கண்டனம்

ஆராய்ச்சிப் படிப்பை அழிக்கத் துடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம், மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று ஒரு புறம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய சில பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் கொள்கை முடிவுகளை நிராகரித்து, தேசியக் கல்விக் கொள்கை 2020யை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அவ்வப்போது கல்லூரி வளாகத்திற்குள் தேசியக் கல்விக் கொள்கை சம்பந்தமான கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இப்படியாக அண்ணா பல்கலைக்கழகமும் தொடர்ச்சியாக தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவான போக்குகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு விதமான நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கிச் சிதைந்தும் வருகிறது. குறிப்பாக போலிப் பேராசிரியர்கள் நியமனம் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான அவப்பெயரை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்த நிலையில்தான் ஆராய்ச்சிப் படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாகச் சொல்லும் விதமாக, விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய கன்ஃபர்மேஷன் டிசி மீட்டிங் வைக்கும் பொழுது, ஒரு எக்ஸ்டர்னல் தேர்வாளர்கள் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதுவும் ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோராகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு இருக்கின்றனர். இப்படி மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்வாளர்கள் வரவேண்டும் என்றால் அவர்களுக்கான செலவுகளை யார் செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது மாணவர்களிடம் பொருளாதாரச் சுரண்டலை நடத்தும் செயலாகும்.

மேலும் இதுவரை நடைமுறையில் இருந்த கன்ஃபர்மேஷன் டிசி மீட்டிங்-கில் எந்தவிதக் குறையை அண்ணா பல்கலைக்கழகம் கண்டது, ஒன்றிய அரசு நிறுவனங்களில் இருந்து கண்டிப்பாக ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்பது நெறியாளரின் சுதந்திரத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு பேராசிரியர்களின் தரத்தை மறைமுகமாகக் குறைத்து மதிப்பிடுவதாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இதுபோன்ற தொடர் செயல்பாடுகள் மாணவர் நலனுக்கு எதிரானதாகவும், நாம் இதுவரைப் பின்பற்றி வந்த கல்வி நடைமுறைகளைச் சிதைக்கும் போக்காகவும் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக ரீதியாகச் சீரமைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு என்பதற்கு மாறாக, தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஒரு கல்வி நிறுவனமாக மாறிவிடும் என்பதை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button