கட்டுரைகள்

அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வேண்டும்

கலை.அஸ்வினி

1920 களில், ஜப்பானியத் தொழிலாளர் சங்கங்கள் தங்கள் பெண் தொழிலாளர்களுக்கு விடுப்பு (சீரி கியூகா) கோரத் தொடங்கின என்பது வரலாறு. 1947 வாக்கில், ஜப்பானியத் தொழிலாளர் தரநிலைகளால் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது மாதவிடாய் பெண்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க அனுமதித்தது.

ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு ஸ்பெயின், இந்தோனேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் வழங்கப்படுகின்றன. இந்தக் கொள்கைகள் பொதுவாக ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்பட்டாலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் முதல் நாடாக ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைச் சட்டமாக்கியுள்ளது. இது தவிர பல நாடுகளில், நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பை வழங்குகின்றன.

இந்தோனேசியாவில் 1948 ஆம் ஆண்டே மாதவிடாய் விடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மாதவிடாய் விடுப்பு கேட்கும் பெண்களுக்கு நிறுவனங்கள் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.

தென்கொரியாவில், சட்டம் 73-ன் படி ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தைவான் -சட்டம் 14-ன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் விடுமுறையைப் பெற்றுக் கொள்ள உரிமை உள்ளது.

ஜாம்பியாவில் பெண்கள் மாதவிடாய்க்காக ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

வியட்நாமில் பெண்கள் மாதவிடாயைக் குறிப்பிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படாது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மாதவிடாய் விடுமுறை என அரசாங்கத்தில் தனியாகச் சட்டம் எதுவுமில்லை. ஆனால் தனியார் நிறுவனங்கள் சில தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பெண்களுக்கு விடுமுறை வழங்கி வருகின்றன.எடுத்துக்காட்டாக, நைக் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு முதல் தனது ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் -கல்ச்சுரல் மெஷின் மற்றும் கோசூப் -அதன் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளன. பீகாரில் அரசு சேவைகளில் உள்ள பெண் ஊழியர்கள் இந்த நோக்கத்திற்காக ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு பெறலாம்.

2020-இல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தனியார் நிறுவனக் கணக்கெடுப்பின் முடிவுகள்படி, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 23 சதவீதம் பேரும், 30 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் 15.18% பேரும், பதின்பருவப் பெண்களில் 17% பேரும் மாதவிடாய்க் காலங்களில் உடல்ரீதியான பாதிப்புகளை அனுபவிப்பதாகக் கூறுகின்றது. இவ்வாறு இருக்க மாதவிடாய் விடுப்பு குறித்த கோரிக்கைகள் நிச்சயம் இங்கு நியாயம் சேர்க்கின்றன என்பதற்கான புரிதல்கள் இங்கு அவசியம் தேவை.

இந்திய அளவில் மாதவிடாய் விடுப்பு குறித்த மசோதா ஒருவேளை கொண்டுவரப்பட்டால் அவ்விடுப்பு அனைத்துத் தரப்புப் பெண்களையும் சென்றடைவது அவசியம். குறிப்பாக அமைப்பு சாரா நிறுவனங்களில் பணி செய்யும் பெண்கள் இதில் கொண்டுவரப்படுவது அரசின் முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும். இதற்கான கண்காணிப்பு அமைப்புகளைச் செயல்பாட்டில் வைத்திருப்பதும் அவசியம். இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். வீட்டு வேலை, பீடித் தொழில், பின்னலாடை நிறுவனங்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் என பெண்கள் இங்கு பிரிந்து இருக்கிறார்கள். அமைப்புசாரா தொழிலாளப் பெண்கள் பற்றிய பார்வை குறைவாகவே உள்ளது.

2000-ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் 25.6% ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 20.3% ஆகக் குறைந்துவிட்டதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவை எல்லாம் இங்கு பேசும் பொருளாகவோ, விவாதத்திற்கோ உள்ளாக்கப்படவில்லை.

பெண்களுக்கான சம உரிமை, சமவாய்ப்பு, சம ஊதியம் வேண்டி நூற்றாண்டுகளாக நடந்த போராட்டத்தின் விளைவு அதற்கான கால் பகுதியைத்தான் நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் கடக்க வேண்டிய தொலைவு நெடுந்தூரம் உள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இதற்கான முன்னெடுப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஏற்கெனவே பீகார், கேரளா தற்போது கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாதவிடாய்க் கால விடுப்பு உள்ளதை மேற்கோள் காட்டியே மாதவிடாய்க் கால விடுப்புக் கோரிக்கைகளை எழுப்பலாம்.

இந்தியாவிலும் இதன் அதிர்வலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்கின்றன. அந்தவகையில் கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய்களில் விடுமுறை அளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்.24 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. முதலில் மத்திய அரசு மாதவிடாய் விடுப்பிற்கான கொள்கையை வகுக்கட்டும். அதன் பிறகு நாம் அதனை பரிசீலிப்போம்“ என்று பதிலளித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்தியா போன்ற நாடுகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதுபோல் ‘மாதவிடாய் விடுப்பு’ பல்வேறு சிக்கலான பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் அவற்றை வகைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது அரசின் தலையாய கடமை.

மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்துவது பெண்கள் அனுபவிக்கும் வலியைப் போக்காது. ஆனால் அது நிச்சயமாக பணிச்சூழலைப் பெண்களுக்கு மிகவும் உகந்ததாக மாற்றும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button