தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிடக் கோரி அக். 8 ஏஐடியுசி மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டைத் தொழில்வளம் நிறைந்த, வலுவான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் தொழிற்சாலை எண்ணிக்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. பொருளாதார வளர்ச்சியிலும் ஜிடிபி அளவில் முன்னணியில் திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகள் வரவேற்கத் தக்கவையே.
அதே நேரத்தில் இந்த வளர்ச்சிக்கான உற்பத்தியிலும், சேவையிலும் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பங்கை வழங்குவதும், சட்டபூர்வ உரிமைகளை உறுதிப்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் கடமை யாகும். தொழில் நடத்துவதை எளிமையாக்குவது என்ற பெயரில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து, முதலாளிகளின் விருப்பம் போல தொழிலாளர்களைக் கொடூரமாகச் சுரண்ட அனுமதிப்பது ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கையாக இருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டங்களைச் செயல்படுத்தாதது மட்டுமல்ல, அந்தச் சட்டங்களையே ரத்து செய்வதற்கான புதிய தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
ஒன்றிய ஆளுங்கட்சியுடன் கருத்தியலாகவும், சமூக முறைமையிலும் முழுவதும் முரண்பட்டு, சமநீதி, சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் திராவிட மாடல் அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு எதிராகவும் செயல்படவேண்டும். அதன் வழியில் தொழிலாளர் கொள்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நிரந்தரத்தன்மையுள்ள பணியிடங்களில், நிரந்தரமற்ற தொழிலாளர்களை நியமிப்பது வழக்கமாகி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர, கலைஞர் காலத்தில் இயற்றப்பட்ட நிலையாணை திருத்தச் சட்டம், இதுவரை விதிகள் வரையப்படாததால், செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்தால் வழங்க வேண்டிய சம்பளத்தைப் படுமோசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுதான், சம ஊதிய சட்டத்தை மீறி, காண்ட்ராக்ட், அவுட் சோர்ஸிங் முறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
தூய்மைப் பணியாளர்கள் பல ஆண்டு காலம் போராடியதன் விளைவாக, அரசின் கடை நிலை ஊழியர்களாக ஏற்கப்பட்டனர். ஆனால் இப்போது தனியார்மயம் என்ற பெயரில் காண்ட்ராக்டர்கள் மற்றும் அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். சமூக அடித்தட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த உரிமையை மொத்தமாகப் பறிப்பது சமூக அநீதியாகும்.
தமிழ்நாடு அரசின் “நிரந்தரத் தகுதியை உறுதிப்படுத்தும் சட்டம் 1982” அமலாக்கப்படாததோடு, சட்ட மீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 மற்றும் அது தொடர்பான முத்தரப்புக்குழு முடிவுகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, முதலாளிகளின் அழுத்தத்துக்குப் பணிந்து, சரி பாதிக்கும் குறைவான தொகைகள் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்படுகின்றன. ஆலோசனைக் குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் கூட தமிழ்நாடு அரசின் துறைகளே செயல்படுத்த மறுக்கின்றன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேறாத நிலையிலேயே நிற்கிறது.
மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளிட்ட முத்தரப்புக் குழுக்கள் உரிய காலத்தில் கூட்டப்படுவதில்லை. மேலும் அவற்றின் முடிவுகளும் பரிந்துரைத் தகுதி கொண்டவை என்ற முறையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகின்றன.
கட்டுமானத் தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர் வாரியங்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் போன்றவை விவாதித்து முடிவு எடுக்காத நிலையில் அரசாங்க முடிவுகள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு பின்னர் அவை வாரியத்தில் வைக்கப்பட்டு பின்னேற்பு செய்யப்படுகின்றன. இவை அந்த முத்தரப்புக் குழுக்கள் மற்றும் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றன.
ஆஷா, அங்கன்வாடி போன்ற திட்டத் தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு மிகக் குறைந்த ஊதியத்தை வழங்குகிறது. பிற மாநில அரசுகள், தமது நிதிப் பங்களிப்புகளைத் தந்து ஊதியத்தை ஓரளவுக்கு உயர்த்தி இருக்கின்றன. ஆனால் பலமுறை முறையிட்டும், ஒன்றிய அரசையே காரணம் காட்டி, தமிழ்நாட்டில் கூடுதல் ஊதியம் வழங்க மாநில அரசு மறுத்து வருகிறது.
கிக், பிளாட்பார்ம் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியும், அவர்களை உடல் உழைப்பு வாரியத்தில் சேர்த்ததோடு அரசு தனது கடமையைக் கை கழுவி விட்டது. புலம் பெயர்த் தொழிலாளர் சட்டம் செயல்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. தொழில் தகராறுகளில் தொழிலாளர் துறை வீரியமாகத் தலையிட்டுத் தீர்வுகளை ஏற்படுத்தியது கடந்த கால வரலாறாகிவிட்டது. எந்திரகதியாக எந்த அக்கறையுமின்றித் தொழிற் தாவாக்கள் கையாளப்படுகின்றன.
தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரித்துத் தீர்ப்பளிக்கும், பணிக்கொடை, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், தொழிலாளர் இழப்பீடு போன்ற வழக்குகள், சில மாதங்களில் முடிக்கப்பட்ட நிலை அகன்று, வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.
முதலாளிகளின் அழுத்தத்துக்குத் தொழிலாளர் துறை அடிபணிகிறது. ஒன்றிய அரசு முன்வைத்து இன்னும் நிறைவேற்றப்படாத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், நடைமுறையில் மாநில அரசின் தொழிலாளர் துறை செயல்படுத்தி வருகிறது.
தொழில்துறையில் முன்னணியில் இருப்பதைப் போலவே, தொழிலாளர் நலன் காப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்த நிலை படிப்படியாகக் கீழ் இறங்குவது வருந்தத்தக்கது. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசரமான அவசியக் கடமையாகும்.
அதற்கு உயர்மட்ட முத்தரப்பு அமைப்பான மாநிலத் தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விவாதித்தும், தொழிற்சங்கங்கள், தொழில் உறவு, மனித உரிமை, புள்ளியியல் துறைகள் மற்றும் இவை தொடர்பான வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்தும், பரிந்துரை பெற்று ஆய்வு செய்து, தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான ‘தமிழ்நாடு தொழிலாளர் கொள்கை”யை உருவாக்கி, வெளியிட்டு, செயல்படுத்திட பொருத்தமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் 2025 அக்டோபர் 8 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.