உள்ளூர் செய்திகள்

நாமக்கல் எக்ஸல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற வலியுறுத்தல்

நாமக்கல் எக்ஸல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்ற வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய எக்ஸல் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கடந்த 27.10.2025 அன்று இரவு உணவு அருந்திய மற்றும் 28.10.2025 அன்று உணவு அருந்திய சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கல்லூரியில் பல லட்சம் கட்டணமாகச் செலுத்திப் படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும், விடுதியில் வழங்கப்படும் உணவும் சுகாதாரச் சீர்கேடு நிறைந்ததாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலிருந்து இதற்கு முன்பே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகக் கூறப்பட்டது.

உணவுக்கூடங்களில் கரப்பான் பூச்சி அதிகம் காணப்பட்டது என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகப் பெருமளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை கல்வி நிலையங்களிலும் உணவுக் கூடங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் உணவுக் கூடங்களைக் கையாள்வதற்கான தனி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து வெளியிட வேண்டும் என்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button