கட்டுரைகள்வரலாறு

ஆவணம் அறிவோம்-12 சமய ஆவணங்கள்-3

ஆ.சிவசுப்பிரமணியன்

நிறுவன சமயங்களான சைவம் வைணவம் என்ற இரண்டும் தலபுராணம், மான்மியம், ஒழுகு, சமய அடியார் வரலாறு, பக்தி இலக்கியங்கள் என்பனவற்றை எழுத்தாவாணங்களாகக் கொண்டுள்ளன என்பதை முந்தைய இதழில் (ஆவணம் அறிவோம்:12, சமய ஆவணங்கள்-2) கண்டோம்.

நாட்டார் சமயத்தில் இவை போன்ற எழுத்தாவணங்கள் இல்லை. பெரும்பாலும் வாய்மொழி வழக்காறுகளே உள்ளன. ஆனால் நாட்டார் தெய்வங்களின் பிறப்பு, இறப்பு, தெய்வமாதல் என்பனவற்றை மையமாகக் கொண்ட வாய்மொழிக் கதைகள் கதைப் பாடல்களாக உள்ளன. இவை தொடக்கத்தில் நிகழ்த்துக் கலைகள் (வில்லுப்பாட்டு, கூத்து, உடுக்கைப்பாட்டு இன்ன பிற) வாயிலாகவே மக்களிடம் சென்றடைந்தன.

அச்சாக்கம் அறிமுகமான பின்னர் இவற்றுள் ஒரு சில மட்டுமே நூல் வடிவம் பெற்றன. இவை நிறுவன சமயங்களின் பனுவல்களுக்கு ஈடானவை. இவற்றை பழமரபுக் கதை (Legend) என்பர், அடிப்படையில் தொன்மங்களில் இருந்து இவை மாறுபட்டவை.

எவ்வாறெனில் தொன்மங்கள் என்பவை மீவியற்கைத் தன்மை மேலோங்கியவை. இவை நிகழும் காலம் நினைவுக்கு எட்டாத பழங்காலமாகும். இவை நிகழும் களங்களாக மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலகம், சமுத்திரலோகம், பாதாளலோகம் என்ற கற்பனை உலகங்களும் அமையும்.

இவற்றில் இடம் பெறுவோர் மானுட ஆற்றலை விட மேலான ஆற்றல் படைத்தோராகவும் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தோர்களாகவும் விளங்குவர். பிறப்பு இறப்பு என்ற வாழ்க்கை வட்டச் சுழற்சிக்கு ஆட்படாதவர்கள். இவர்களது பிறப்பு என்பது அவதரித்தல் ஆக அமையும்.

ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற இப்பூவுலகில் அவதரித்து, அச்செயலைச் செய்து முடித்ததும் மீண்டும் தம் உலகிற்குத் திரும்பி விடுவார்கள். எதிரிகளை வெல்பவர்களே தவிர, எதிரிகளால் கொல்ல முடியாதவர்கள்.

ஆனால், நாட்டார் தெய்வங்கள் மானுடர்களாகப் பூவுலகில் பிறந்து நம்மைப் போன்றே இரத்தமும் சதையும் கொண்டவர்களாய் வாழ்ந்து மறைந்தவர்கள். எதிரிகளால் கொலை செய்யப்பட்வர்கள். நில மானியச் சமூகக் கொடுமைகளை எதிர்த்து நின்று உயிர் நீத்தவர்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியானவர்கள், அல்லது நேரடியான போரில் கொல்லப்பட்டவர்கள்.

இவ்வகையில் தொன்மம் பதிவிடும் களத்தில் இருந்தும், காலத்தில் இருந்தும் வேறுபட்டு நிற்பவர்கள். இதனால் இவர்களது வரலாறு என்பது தொன்மமாக அன்றி பழமரபுக் கதையாக அமைகிறது. இவர்கள் தெய்வமாக்கப்படுவதற்கு முன்னர், நிறுவன சமயத்தின் தெய்வம் ஒன்றிடம் வரம் பெற்று எதிரிகளைப் பழிவாங்குவதாக பழமரபுக் கதையின் முடிவு அமையும். இதன் அடிப்படையில் தொன்மக் கதைகளில் இடம் பெறும் கடவுளரை விட இவர்கள் ஆற்றல் குன்றியவரகள் என்பது மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பழிக்குப்பழி என்ற நாட்டார் நீதியும் (Folk Justice) நிலை நிறுத்தப்படுகிறது.

சாமியாட்டம்:

நாட்டார் தெய்வ வழிபாட்டில் குறிப்பாக அக்கோயில் விழாக்களில் ஒர் இன்றியமையாத நிகழ்வாக இடம் பெறுவது சாமியாட்டம் ஆகும். இந்நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட மனிதன் மீது (பெரும்பாலும் பூசாரி அல்லது சாமியாடி) ஒரு குறிப்பிட்ட தெய்வம் தற்காலிகமாக ஆவி வடிவில் புகுந்து விடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது நிகழ்கிறது. சாமியாட்டம் நிகழ்வின் போது சாமியின் ஆவி நுழையப் பெற்ற மனிதன் உரையாடுவதும், கட்டளை இடுவதும், எதிர்காலப் பலன் கூறுவதும், குறைகளைப் போக்க வழிமுறை கூறுவதும் சாமியின் வாக்காகவே கருதப்படுகிறது. சிறிது நேரத்திற்கு அம்மனிதன் சாமியாகவே கருதப்படுவான். இதனால்தான் “ மனித உருப்பெற்ற தெய்வங்கள்”(Incarnation of Gods) என்று பிரேசர் என்ற மானுடவியலாளர் சாமியாடியை அழைப்பார். தென் மாவட்டங்களில் இதை “வாக்குக்கூறல்” என்றும் அழைப்பர். இது தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் தொன்மையான ஒன்றாகும்.

சிலப்பதிகாரத்தில் மாதவியின் நடன அரங்கேற்றத்தில் தெய்வம் உற்றவரைக் குறித்த அபிநயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இது குறித்து விரிவாக உரை எழுதியுள்ளார். தெய்வமாக்கப்பட்ட கண்ணகி தன் உயிர்த்தோழி தேவந்தியின் மீதும் அரட்டன் செட்டி என்பவரது இருமகள்கள் மீதும் ஆவியாக இறங்கிப் பேசுவது இடம் பெற்றுள்ளது.

வேலனாட்டம்:

சங்க இலக்கியங்களில் வேலனாட்டம் என்ற சடங்கு குறிப்பிடப்படுகிறது. வேல் என்ற போர்க்கருவி வேட்டைச் சமூகத்திற்கு உரியது. சங்க இலக்கியம் பகுத்துள்ள ஐந்து திணைகளில் ஒன்று குறிஞ்சித் திணை. குறிஞ்சித் திணையின் கடவுளாக “சேயோன்” என்ற பெயரில் முருகனைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இக்கடவுளின் ஆயுதமாக வேல் இடம் பெற்றுள்ளது. இதனால் வேலை ஏந்தியுள்ள முருகனுக்கு வேலன் என்ற பெயரும் உண்டு. இக் கடவுளின் பூசாரி வேலன் என்றே அழைக்கப்பட்டார். சங்க இலக்கியத்தில் இடம் பெறும் காதற்பாடல்களில் வேலன் குறித்த பதிவுகள் உள்ளன. (கேரளத்தில் நிகழும் “வேலனாட்டம்”என்ற நாட்டார் நிகழ்த்துக் கலை குறித்து பி.எல். சாமி எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்).

தலைவன் ஒருவன் மீது காதலுற்ற தலைவி காதல் நோயால் உடல் மெலியும் போது அதன் உண்மைக் காரணம் அறியாத அவளின் தாய் முருகு பிடித்துவிட்டது என்று கருதுவாள். அவளுள் புகுந்த முருகனை வெளியேற்ற முருகனது பூசாரியான வேலனை அழைத்துத் தன் மகளைப் பிடித்துள்ள முருகனை அவளிடமிருந்து வெளியேறச் செய்யும்படி வேண்டுவாள். அவனும் உடன்பட்டுச் சில சடங்குகளை மேற்கொள்ளுவான். அச்சடங்கில் ஆட்டுக்குட்டி பலியிடப்படும். அப்போது அவன் மீது முருகன் இறங்குவார். இச் சடங்கு வேலன் வெறியாட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

விலங்கு உயிர்ப்பலி:

நிறுவன சமயக் கோயில்களில் சாமியாட்டம் எனபது விலக்கப்பட்ட ஒன்றாகும். நாட்டார் சமயவழிபாட்டில் இது தவிர்க்க இயலாத முக்கிய கூறாகும். இதற்கு இணையான மற்றொன்று விலங்கு உயிர்ப்பலி ஆகும். சாமிக்கு உணவு படைப்பது பலி என்று அழைக்கப்படுகிறது. இது பாலி மொழிச் சொல் என்று சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் குறிப்பிடுகிறது. இப்பலியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருள் உற்பத்தியைச் சார்ந்தே இருந்துள்ளது. வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடிய விலங்குகளே படையலாகப் படைக்கப்பட்டது. சங்க இலக்கியங்களில் முருகன் உள்ளிட்ட கடவுளருக்கு உயிர்ப்பலி தரப்பட்டுள்ளது. இன்று புனித விலங்காகக் கருதப்படும் பசுவும் கூட பலி கொடுக்கப்பட்டுள்ளது. பசுவைக் கொன்று தின்னும் புலையரும் சிவனுக்கு அடியவரானால் அவரை வணங்குவேன் என்று பல்லவர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசர் பாடியுள்ளார். தேன் பலி, மலர்ப்பலி என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

உணவுப்படையல்:

வேளாண்மை அறிமுகமான பின்னர் தானியங்கள் பலிப் பொருளாயின. பின் தானியத்தைச் சமைத்து உணவாகப் படைத்தலாக இது மாற்றமடைந்தது. உணவு தயாரிக்கவென்றே திருமடைப்பள்ளி என்ற பெயரில் சமையலறை ஒன்றும் உருவாக்கப்பட்டதுடன் அதற்கென்று ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். இதன் செலவுகளுக்காக விளைநிலம் மானியமாக விடப்பட்டதுடன் திருமடைப்புறம் என்று இந்நிலம் அழைக்கப்பட்டது. நிலமானியச் சமூகம் அறிமுகமான பின்னர், உணவு வகை மிகுந்தது. இனிப்புச் சுவை கொண்ட அப்பம் படையலாக அறிமுகமானது.

திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளுக்கு ஏகாதேசியன்று அப்பம் படைக்க ஆகும் செலவுக்காக என்றே கி.பி.948–949 இல் நிலம் மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது (தெ.இ.க.24. க.எண் 308). கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள திருவரங்கம் என்னும் ஊரில் உத்திர திருவரங்கம் என்றழைக்கப்படும் ரங்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தன்று படைக்கப்படும் உணவுப் படையல்களின் பட்டியலை கி.பி.1557 ஆவது ஆண்டுக் கல்வெட்டு பின் வருமாறு குறிப்பிட்டுள்ளது:

அதிரசம்,-வடை,-தோசை,-இட்டிலி. இவை தவிர எள்ளெண்ணை, -மிளகு,-சீரகம் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன (தெ.இ.க.22 பகுதி1. கல்வெட்டு எண்66).

பொங்கலிடுதல்:

நாட்டார் தெய்வக்கோயில்களில் அரிசிச் சோறே முக்கிய படையல். சிறப்பு வழிபாடு நாட்களில் புளியோதரை சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சோறு என்பன படைக்கப்படுவதுண்டு. நிறுவன சமயக் கடவுளர் போன்று நாவூறச் செய்யும் உணவு வகைகள் இங்கு கிடையாது. ஆனால் மிகப் பெரும்பாலான நிறுவன சமயக் கோயில்களில் இல்லாத சற்று வேறுபாடான உணவு படைக்கும் முறை நாட்டார் தெய்வங்களின் கோயிலகளில் பொங்கலிடுதல் என்ற பெயரில் உள்ளது.

திருவிழாவின் போதும் தனிப்பட்ட வேண்டுதலின் பெயரிலும் பொங்கலிடுதல் நிகழ்கிறது. பொங்கலிட்டு முடிந்ததும் சாமி சாப்பிடுவதற்காகப் பொங்கல் பானையை பலிபீடத்திற்கு முன்பு இறக்கிவைத்து விடுவர். இப்பானைகளுக்குப் பூசாரி கற்பூரம் காட்டுவார். இவ்வாறு வழிபடுவோன் சமைத்துப் படைத்த உணவை சாமி ஏற்றுக் கொள்கிறார். இதன் சிறப்புக்கூறை நிறுவன சமயத்தில் நிகழும் நைவேத்தியம் படைத்தலுடன் ஒப்பிட்டுப் பாரத்தால் கண்டறியலாம்.

நிறுவன சமயக் கடவுளர் கோயில்களில் வழிபாட்டிற்குரிய கடவுளின் படிமம் இருக்கும் கருவறை புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இதில் நுழைந்து வழிபடும் உரிமை பிராமணர், தீட்சிதர், சிவப்பிராமணர் என்று சில குறிப்பிட்ட மேட்டிமை சாதியினருக்கே உண்டு. ஏறத்தாழ இதற்கு இணயான ஒன்றாகத் திருமடைப்பள்ளி விளங்குகிறது. திருமடைப்பள்ளியைத் தூய்மைப்படுத்துதல், பாத்திரங்களைத் துலக்குதல் போன்ற பணிகளில் மட்டுமே இடை நிலைச் சாதியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருமடைப் பள்ளியில் இருந்து கருவறைக்கு தாம்பாளம் அல்லது பானையில் எடுத்துச் செல்லும் உணவு பட்டுத் துணியால் மூடப்பட்டே எடுத்துச் செல்லப்படுகிறது. கருவறையில் திரைபோட்ட பின்னரே உணவுப் பாத்திரத்தை மூடியிருந்த பட்டுத் துணி விலக்கப்படுகிறது. பார்வைத்தீட்டு குறித்த அச்சமே இச்செயலுக்குக் காரணம். பட்டுத் துணிக்குத் தீட்டு கிடையாது என்ற நம்பிக்கையினாலேயே உணவுக் கலனை பட்டுத் துணியால் மூடுகிறார்கள்.

ஆனால் நாட்டார் சமயக் கோயில் களில் பொங்கலிடுதலும் படையல் சோறு படைத்தலும் பலரது பார்வையில் படுகிறது. இருப்பினும் சில கிராமங்களில் பட்டியல் சாதியினர் பொங்கலிடத் தனி நேரம் ஒதுக்கப்படுகிறது. அல்லது அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஓர் உறுத்தலான செய்தி. அடிப்படையில் பொங்கலிடுதல் ஒரு வகையில் வைதிக நெறியுடன் முரண்பட்டு நிற்கிறது. நாட்டார் சமயம் குறித்த இச் செய்திகளின் பின்புலத்தில் நாட்டார் சாமிகள் சிலரை அறிமுகம் செய்து கொள்வோம். இவர்கள் வழியாக சமூக வரலாற்றுக்கான சில தரவுகளை நாம் பெற முடியும்.

(1) ஈனமுத்து:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் சிங்கத்தா குறிச்சி. இங்கு புரத வண்ணார் சாதியைச் சேர்ந்த ஈனமுத்து என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவனும் பிராமண நிலக்கிழாரின் பெண்ணொருத்தியும் காதலர்களானார்கள். இதை அறிந்த பெண்ணின் தந்தை அடியாட்களை அனுப்பினார். அடியாட்கள் அவன் காலை வெட்டினர். அவன் நொண்டியவறே சென்று உயிர் நீத்தான். இச்செய்தி அறிந்த அவன் காதலியும் அங்கு வந்து உயிர் துறந்தாள். ஈனமுத்து இறந்த இடத்தில் இருவருக்கும் மண் பீடம் அமைத்து வழிப்படத் தொடங்கினர். ஈனமுத்துவின் பீடத்துக்கு விலங்கு உயிர்ப்பலி உண்டு. அவன் காதலியின் பெயர் தெரியாத நிலையில் சாதியின் அடிப்படையில் பாப்பாத்தி அம்மன் என்றழைத்து உயிர்ப்பலி கொடாது, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். ஈனமுத்து ,பாப்பாத்தி என்று தம் குழந்தைகளுக்குப் பெயரிடுகிறார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் கொடைவிழாவில்தான் மண்பீடம் அமைக்கப்படுகிறது.

(2) ஆரிச்சன்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள வலசைக்கிணறு என்ற கிராமத்தில் ஆரிச்சன் என்ற ஆதிதிராவிடர் இளைஞன் வேளாளர் சாதி நிலக் கிழாரிடம் பணிபுரிந்து வந்தான். நிலக்கிழாரின் இருபெண்களுக்கும் அவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அறிந்த நிலக்கிழார் அவர்கள் மூவரையும் கொல்ல அடியாட்களை ஏற்பாடு செய்தார். அவர்கள் கொலை செய்ய முயன்ற போது மூவரும் வயல் வெளியில் தப்பி ஓடி கத்திரித் தோட்டம் ஒன்றில் ஒளிந்து கொண்டனர். அவர்களைக் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் அங்கு கிடையமர்த்தி இருந்த (பட்டி போட்டிருந்த) ஆயரிடம் கேட்டபோது, அம் மூவரும் ஒளிந்திருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தார். உடனே கத்திரித் தோட்டத்திற்குள் நுழைந்து அவர்கள் மூவரையும் வெட்டிக் கொன்றனர். இறந்த மூவரும் கோபம் கொண்டு, ஆவி வடிவில் வந்து ஆயர்களின் ஆடுகளைக் கொல்லத் தொடங்கினர். ஆடுகளின் இறப்பிற்கான காரணம் அறிய பூசை போட்டுப் பார்த்து உண்மை அறிந்து, ஆவிகளை அமைதிப்படுத்தும் நோக்கில் மூவருக்கும் பீடங்கள் அமைத்து வணங்கத் தொடங்கியதுடன் ஆரிச்சன் என்று பெயரும் குழந்தைகளுக்கு இடலாயினர். கத்தரித் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டமையால் இரு பெண் தெயவங்களுக்கும் கத்தரிக்காய் மாலை அணிவிக்கின்றனர். இதனால் கத்தரிக்காய் அம்மன் என்ற பெயரும் உருவாயிற்று.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button