கட்டுரைகள்வரலாறு

ஆவணம் அறிவோம்: 12 சமய ஆவணங்கள்-2

ஆ.சிவசுப்பிரமணியன்

சமயம் என்ற அமைப்பு உருவாகும் முன்னர் இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகளின் தொகுப்பாக நிலவிய சமயத்தைத் தொல்சமயம் (Primitive Religion) என்று மானுடவியலாளர் கூறுவர்.

இதிலிருந்து கிளைத்த சமய நெறியே நாட்டார் சமயம் (Folk Religion) ஆகும். கறாராக வரையறுக்கப்பட்ட சமயக் கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், புனித நூல், சமயத் தலைமை என்பனவற்றுடன் கூடிய சமயங்கள் நிறுவனச் சமயங்கள் (Instituted Religion) எனப்படும். தமிழ் நாட்டில் இன்று நிலவும் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் என்பன நிறுவனச் சமயங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவினர் சிலர், தாம் பின்பற்றும் சமய நெறியைச் சற்று நெகிழ்ச்சித் தன்மையுடன் பின்பற்றுவர். அதே நேரத்தில் தம் சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இராது பார்த்துக் கொள்வார்கள். இதை வெகு மக்கள் சமயம் (Popular Religion) என்பர். தமிழகக் கத்தோலிக்கர்களிடமும், இஸ்லாமியர்களிடமும் இடம்பெற்றுள்ள சில சடங்குகள் ‘வெகுசனக் கத்தோலிக்கம்’, ‘வெகுசன இஸ்லாம்’ ஆக உள்ளன. ஆனால் ஒன்றிரண்டு மேட்டிமைச் சாதியினர் நீங்கலாக மிகப் பெரும்பாலான தமிழர்கள், வெகுமக்கள் சைவர்களாகவோ, வைணவர்களாகவோ இன்றி நாட்டார் சமய வழிபாட்டையும், சைவ அல்லது வைணவச் சமய வழிபாடுகளையும் ஒருசேரப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

இரட்டைச் சமய வாழ்க்கை

இவ்வாறு இருவேறு சமய நெறிகளை ஒருசேரப் பின்பற்றுவதால் இவர்களின் சமய வாழ்வை இரட்டைச் சமய வாழ்க்கை என்றழைக்கலாம். இது தமிழ்நாட்டில் மிகவும் தொன்மையான ஒன்றாகும். சான்றாக, சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் மாதரி என்ற ஆயர் குலப் பெண்ணைக் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் முதல் முறையாகச் சந்திக்கும் போது, இயக்கி என்ற தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்துவிட்டுத் திரும்புகிறாள். பின்னர் ஆயர்பாடியில் வைணவக் கடவுளான திருமாலுக்கு நடத்தப்படும் குரவைக் கூத்தில் கலந்து கொள்கிறாள்.

பெரும்பாலான தமிழர்கள் சைவர்களாகவோ வைணவர்களாகவோ இருப்பினும் தமக்கென்று குலசாமிகளை இன்றும் கொண்டுள்ளார்கள். இதுபோல் கிராமப் புறங்களில் உள்ள ஊர்த்தெய்வங்கள் மிகப் பெரும்பாலும் நாட்டார் தெய்வங்கள்தான். பட்டியல் சாதியினருக்கு மறுக்கப்படும் கோயில் நுழைவு உரிமையும் பொங்கலிடுவதும் ஆடு, கோழி பலி கொடுப்பதும் இத்தெய்வங்கள் உறையும் கோயில்களில்தான்.

மற்றொரு பக்கம், இவர்கள் ‘திருயாத்திரை’ என்ற பெயரில் கால்நடைப் பயணம் மேற்கொள்வதும் தேர் இழுக்கச் செல்வதும் காவடி எடுப்பதும் சிவன், விஷ்ணு கோயில்களுக்குத்தான். இவ்வாறு இன்றுவரை தமிழர்களில் பெரும்பாலோர் இரட்டைச் சமய வாழ்க்கையை மேற்கொண்டோராகவே தம் சமய வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இரு வேறு சாமிகள்

நம் நடைமுறை வாழ்க்கையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு நிலவுவது போன்று சமய வாழ்விலும் இரட்டைச் சமய வாழ்க்கையானது கடவுளர்களிலும் பாகுபாட்டை உருவாக்கியுள்ளது. சைவ வைணவச் சமயக் கடவுளர்கள் ‘தெய்வங்கள்’ என்று அடைமொழி எதுவும் இன்றி அழைக்கப்பட, நாட்டார் தெய்வங்கள் சில அடைமொழிகளால் அழைக்கப்பட்டன. இவற்றுள் தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் “சிறு தெய்வம்” என்று அழைத்ததுடன் அதை வணங்க மாட்டோம் என்ற பெருமித உணர்வு பொங்க, “சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்” என்று பாடியுள்ளார். நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் (4:6,2) “இளந்தெய்வம்” என்று அழைத்துள்ளார்! இளந்தெய்வம் என்பது அற்பமான தெய்வம் என்ற பொருளைத் தரும் சொல்லாகும். ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார், சூத்திரத் தெய்வங்களில் ஒன்று என்று பொருளுரைத்துள்ளார். நான்கு வருணப் பாகுபாட்டில் சூத்திரர்கள் என்போர் கடைநிலையில் உள்ளனர் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

மில்டன் சிங்கர் என்ற அமெரிக்க நாட்டு மானுடவியலாளர் சிறுமரபு (Little Tradition), பெருமரபு (Great Tradition) என்று பகுத்துள்ளதை அப்படியே சிலர் உள்வாங்கி சிறுமரபு என்பதற்குள் நாட்டார் சமயத்தை அடக்கிவிட்டனர். எல்லாவற்றிலும் ஓர் அரசியல் உண்டு என்பதற்கேற்ப சொல்லாக்கத்திலும் கூட வர்க்க அரசியலும், பண்பாட்டு அரசியலும் உண்டு என்பதற்குச் ‘சிறு தெய்வம்’ ‘இளந்தெய்வம்’ என்ற சொல்லாட்சிகள் சான்று பகர்கின்றன.

வள்ளலார், பாரதியார் ஆகியோரும் கூட இத்தெய்வங்களைச் சற்றுத் தாழ்ச்சியாகவே நோக்கியுள்ளனர். கடுத்த சைவரான தமிழ் அறிஞர் மு.அருணாசலம் குற்றக் கடவுளர் (Criminal Gods) என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பரவலாக இருந்த கண்ணகி வழிபாட்டைத் தடுத்து நிறுத்த ஆறுமுக நாவலர் மிகவும் ஆர்வம் காட்டினார். இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு: “செட்டிச்சியும் புறச்சமயத்தவளுமகிய கண்ணகி பரம்பொருள் எனவும், விநாயகக் கடவுள் சுப்பிரமணியக் கடவுள் இருவரும் அவளிற் தாழ்ந்தவர் எனவும் மயங்கி அவளுக்குக் கோயில் கட்டுவித்து, அவ்விருவர் விக்கிரகத்துக்கும் நடுவே அவள் விக்கிரகந் தாபித்து வழிபடும் அதிபாதகர்களும்”. இன்னும் அபிராமிப் பட்டர், மறைமலையடிகள் என ஒரு பட்டியலைக் குறிப்பிடலாம்.

இவர்களாவது தேவலாம். சிவராம சாஸ்திரி என்ற தஞ்சை மாவட்டத்துக்காரர் இந்தச் சாமிகள் யாருக்குரியது என்று வெளிப்படையாகச் சிறிதும் கூச்சமின்றி போட்டுடைத்துள்ளார். 1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா அரங்கில் “சென்னை மஹா ஜன சபை” என்ற அமைப்பின் கூட்டம் நிகழ்ந்துள்ளது. அதில் பண்டிதர் அயோத்திதாசரும் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு, ஆதி திராவிடர்களுக்குக் கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமை வேண்டும் என்று கேட்டபோது “எல்லோரும் ஏகமாய் நின்று எதிர்த்துக் கூச்சலிட்டார்கள். சிவராம சாஸ்திரி என்பவர் எழுந்து “உங்கள் குலத்தாருக்கு மதுரைவீரசாமி, காட்டேரிசாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும் விஷ்ணுசாமியும் உங்கள் குலத்தாருக்கு உரியதல்ல” என்று ஆட்சேபித்ததாக 1908 அக்டோபர் 21ஆவது நாள் தமது ‘ஒரு பைசா தமிழன்’ இதழில் அயோத்தி தாசர் எழுதியுள்ளார்.

மனிதர்களில் உயர்வு தாழ்வு என வேற்றுமை இருப்பது போல கடவுளர்களிலும் உயர்வு தாழ்வு உருவாக்கப்பட்டுள்ளதை சிவராம சாஸ்திரியாரின் கூற்று வெளிப்படுத்துகிறது. மேலும் “உங்கள் குலத்தாருக்கு கொடுத்திருக்கிறோம்” என்று அவர் கூறியமை, கடவுளை ஏதோ தம் மடியில் கட்டி வைத்துக் கொண்டு வேண்டுவோருக்கு விருப்பம்போல் கொடுக்கும் உரிமை குறிப்பிட்ட சிலரிடம் இருப்பது போன்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. கூடவே நாங்கள் கொடுத்த சாமியைத்தான் நீங்கள் வழிபடவேண்டும் என்ற ஒருவகையான மேலாதிக்க உணர்வும் வெளிப்படுகிறது.

ஆவியம் (அனிமிசம்)

தொல்சமயத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கோட்பாடு “ஆவியம்” ஆகும். இதன்படி உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அனைத்திலும் நம் கண்ணுக்குப் புலப்படாத ‘ஆவி’ என்ற பொருள் உறைகிறது என்ற நம்பிக்கை உள்ளது. ஆதிவாசிகளின் சமய நெறியிலும் நாட்டார் சமய நெறியிலும் இந்நம்பிக்கை அழுத்தமாக உள்ளது. ஒருவன் இறந்தபின்னும் அவனது ஆவி அழிவதில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இறப்புச் சடங்குகளில் இறந்தவருக்கு உணவு படைக்கப்படுகிறது. எகிப்தின் பிரமிட்களிலும் தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர், பொருந்தல் அகழ்வாய்வுகளிலும் கிடைத்த பொருள்கள் இறந்தவரின் ஆவியின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டவைதான். மேலும் இறந்தோரைத் தெய்வமாக வழிபடும் மரபு சங்ககாலத்திலேயே உருவாகிவிட்டது. இவர்கள் நினைவாகக் கல்நட்டு அதை வழிபடும் நடுகல் வழிபாடு குறித்த பதிவுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.

கொலையில் உதித்த தெய்வங்கள்

ஆவியத்தை இங்குக் குறிப்பிட்டதன் காரணம் நாட்டார் தெய்வங்கள் பலவும் இறந்தோர் வழிபாட்டுடன் தொடர்புடையன என்பதால்தான். தமிழ்நாட்டின் நாட்டார் சமயக் கடவுளர்கள் சிலர் கொலைக்கு ஆளாகி இறந்தவர்களாகவே உள்ளனர்.

பேராசியர்கள் ஆறு. இராமநாதனும் சக்திவேலுவும் இணைந்து நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகளைத் தொகுத்து, “தெய்வங்களின் தோற்றக் கதைகள்” என்ற தலைப்பில், நூல் வெளியிட்டுள்ளார்கள். அதில் கொலையுண்டு தெய்வமானவர்கள் குறித்த சில அடிப்படைச் செய்திகளை வகைப்படுத்தித் தந்துள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய புதிய முயற்சி. இந்நூலில் 676 நாட்டார் தெய்வங்களின் தோற்றக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 79 தெய்வங்கள் இயல்பான மரணம் அடையாது அகால மரணம் அடைந்தவர்கள். அதாவது கொலையுண்டவர்கள்.

கொலைக்கு ஆளாகித் தெய்வமாக்கப்பட்டவர்கள் குறித்த வாய்மொழி வழக்காறுகளைச் சேகரிக்கும் பொருட்டுத் தென்மாவட்டங்களில் நிகழ்த்திய களஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரையாசிரியர் இவர்கள் கொலையுண்டதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கண்டறிந்துள்ளார். அவை வருமாறு:

(1) நிலப் பிரபுத்துவம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் பகைமை, (2) பிறரின் பொறாமை உணர்வு, (3) நரபலி போன்ற மூடநம்பிக்கைகளின் தாக்கத்திற்கு ஆட்படுதல், (4) மண உறவு, சொத்துரிமை, முறையற்ற பாலுறவு என்பன தோற்றுவிக்கும் பகைமையுணர்வு, (5) நேரடியான போர் அல்லது சண்டையில் ஈடுபட்டமை, (6) வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்கொள்ளும் வழிமுறையாகச் சில தவறுகள் அல்லது சிறு குற்றங்களைச் செய்தமை, (7) கொள்ளையர், காமுகர் ஆகியோரிடமிருந்து நலிந்தோரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டமை, (8) சாதி மீறிய காதலுக்கு ஆட்பட்டமை, (9) குடும்ப மானத்தைக் காப்பாறும் முயற்சி.

இக் காரணங்களால் கொலையுண்டவரை அவரது குடும்பத்தினர், உறவினர், ஊரார் என்போர் பீடம் அமைத்தோ, சுடுமண் உருவம் செய்தோ, சிலை வடித்தோ வழிபடத் தொடங்கும் போது நாட்டார் தெய்வம் ஒன்று உருவாகிவிடுகிறது. கொலை செய்தவர்களும், அறிந்தோ அறியாமலோ அதற்குத் துணை நின்றவர்களும் கொலையுண்டவனின் ஆவி குறித்த அச்சத்தால் இவ்வழிபாட்டை மேற்கொள்வதுண்டு. சான்றாக, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற இளஞன் ஒரு வீரனாக விளங்கி மக்களால் போற்றப்பட்டான். இதனால் எரிச்சலுற்ற வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் அவன் கொலை செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். ஆவியின் மீது கொண்ட அச்சத்தால் அமைச்சரின் வீட்டில் சின்னத்தம்பியின் நினைவாகப் பீடம் அமைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர். அவ்வழிபாடு இன்றும் தொடர்கிறது. கொலை செய்வதற்காக ஒருவரைத் தேடி அயலூருக்கு வருபவரின் பார்வையில் முதலில் படுபவர் ஊரின் வெளிப்புறத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஆயர்கள்தான். அவர்களிடம் விசாரிக்கும்போது, அதன் உண்மையான நோக்கம் புரியாது. ஆயர்கள் கூறிய பதில் கொலைசெய்யப்பட வேண்டியவரைக் கண்டறிய உதவியிருக்கும். இதனால் கொலையுண்டவரின் ஆவி அவர்களையும் துன்பறுத்தும். அதை அமைதிப்படுத்த ஆயர்கள் பீடம் அமைத்து வழிபடத் தொடங்குவர்.

ஆய்வின் தேவை

இவ்வாறு வழிபடப்படுபவர் கொலையுண்டவர் என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல. கொலையுண்டவர் யார்? அவரது சமூக நிலை என்ன? அவர் ஏன் கொலையுண்டார்? அக்கொலையைச் செய்தவர் அல்லது செய்வித்தவர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை கண்டறிவதுதான் சமூகப் பண்பாட்டு வரலாற்றாய்வில் முக்கியமானதாகும். இவ்வாறு கிடைக்கும் விடையானது நிலமானியச் சமூகத்தின் ஆளுவோரும் அவர்களைச் சார்ந்து இயங்கிய மேட்டிமையோரும் அடித்தள மக்கள் மீது நடத்திய பொருளாதாரச் சுரண்டலையும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் அறிந்து கொள்ளத் துணை நிற்கும். சுருங்கக் கூறின் வரலாற்றில் எதிர்நிலைத் தலைவர்களாக (வில்லன்கள்) விளங்கியோரை அடையாளங்காட்டும்.

நாட்டார் அல்லது நாட்டுப்புறச் சமயத் தெய்வங்களின் வரலாறு குறித்த சில அடிப்படைச் செய்திகளை இந்த இதழில் அறிந்து கொண்டோம். அடுத்த இதழில் ஆவணமான சில வாய்மொழிக் கதைகளைக் காண்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button