
வந்தே மாதரம்‘ பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
நான்கு கட்ட கொண்டாட்டங்கள்!
வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால நிகழ்ச்சிகள். முதற் கட்டம்: 7-14 நவம்பர் 2025, ஜனவரி 2026 குடியரசு தினத்தை ஒட்டி இரண்டாவது கட்டம் – 26, ஆகஸ்ட் 2026 இல்லந்தோறும் மூவண்ணக் கொடியுடன் கொண்டாடுவது மூன்றாவது கட்டம் – 7-15; 2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடுவது நான்காவது, நிறைவுக்கட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமான நவம்பர் 7 இல், தில்லி இந்திரா காந்தி திடலில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை தாங்க, நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடப்பட்டது.
சந்தேகத்தின் சாயல்!
நவம்பர் 7 எவ்வகையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வந்தே மாதரம் உருவான நாள் எனக் கணக்கிட்டு, வந்தே மாதரம் -150 கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டன என்பது குறித்து எந்த தரவுகளும் இல்லை.
‘வந்தே மாதரம் 150’ என ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செயல்திட்டக் குறிப்பில் ‘வந்தே மாதரம் பின்புலம்’ (Vande Mataram: Background) என இடம்பெற்றுள்ள குறிப்புரையில், இப்பாடல், தொடர் வடிவில் வெளியிடப்பட்ட பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெற்றதாகவும் ‘வந்தே மாதரம்’ 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அக்ஷய் நவமி அன்று எழுதப்பட்டதாகவும் நம்பப்படுகிறது என்று சந்தேகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலை முதன்முதலாக 1896 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் பாடினார். அந்த நிகழ்வின் பின்வந்த காலங்களில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது காங்கிரஸ் கூட்டங்களில் வழக்கமாகிவிட்டது என்றும் தெரியப்படுத்தியுள்ளது.
நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய கீதம், தேசியப் பாடல் என்ற பொருள் குறித்து முதன்முதலாக, ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நவம்பர் 1951-இல் (முதற் பதிப்பு) வெளியிட்ட, நமது தேசியப் பாடல்கள் எனும் வெளியீட்டில் கூட, “இரண்டு பாடல்களுள் வந்தே மாதரம் பழையது. 1882 ஆம் ஆண்டு வெளிவந்த பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்‘ என்ற நாவலில் இது காணப்படுகிறது என்று விவரித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் பாடப்பட்டது என்ற மேலோட்டமான விவரம் மட்டுமே வந்தே மாதரத்தின் தோற்றம் குறித்து அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே கடந்த 2006 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இப் பாடலின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் – ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, எஸ்.கே. போஸ் 1974 ஆம் ஆண்டில், எழுதி, வெளியிட்ட ‘பங்கிம் சந்திர சாட்டர்ஜி’ வாழ்க்கை வரலாற்று நூலில், “அவர் இறந்து சரியாக பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளப் பிரிவினையை எதிர்த்த வலிமையான இயக்கம் வந்தே மாதரம் பாடலுக்குப் புது மதிப்பை அளித்தது என்கிறார். அதன் பிறகே ஆனந்த மடத்தின் நாவலாசிரியர் படிப்படியாக மக்களின் இதயத்தில், ‘ தீர்க்கதரிசி’யின் நிலையைப் பெற ஆரம்பித்தார். ஒரு தீவிர தேசபக்தி உணர்வு வெடிப்பின் பின்னணியில்தான் சாட்டர்ஜி வந்தே மாதரத்தை எழுதினார். பாடல் எப்போது இயற்றப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்கிறார்.
ஆனால் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் இது 1875 இன் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது என ஜி.சி. ராய் எழுதிய வந்தே மாதரம் (வெளியீடு: ஜுகாந்தர், ஆகஸ்ட் 15, 1959) என்ற நூலொன்றைத் தனது கூற்றுக்குச் சான்று காட்டி, போஸ் தன் நூலில் குறிப்பு வைத்துள்ளார். ஆக தகவல் – ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன் குறிப்பிட்டுள்ள இரு வெளியீடுகளிலும் நவம்பர் 7, 1875 குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை.
வந்தே மாதரத்துக்கு எழுந்த எதிர்ப்பு
இப்பாடலை இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் மகாசபையில் பாடும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். முகம்மது அலி ஜின்னா தலைமையிலிருந்த முஸ்லிம் லீக் இறுதி வரை இதனை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், 1930களிலிருந்து ஜனவரி 1950-இல் தேசிய கீதம், தேசியப் பாடல் குறித்து அரசியல் அமைப்புச் சபையில், தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவிப்புச் செய்தது முதல், இன்று வரை வந்தே மாதரம் பாடல் நடைமுறையில் இருப்பது அதன் முதல் இரண்டு அடிகள் மட்டுமே.
வகுப்புவாத மயமாக்கும் பாஜக!
அப்பட்டமாக, எந்த சப்தமும் இல்லாமல், இதனை முற்றிலும் மீறும் வண்ணம், ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தைப் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு, பாடலில் தவிர்க்கப்பட்ட நான்கு பத்திகளையும் இணைத்துப் பாடத் தொடர்பும் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் வகுப்புவாத விஷம நடவடிக்கைகளை தெளிவாக காணலாம்!
வந்தே மாதரத்தில் நீக்கப்பட்ட பகுதிகள்!
இந்தியாவின் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வது குறித்த விவாதம்
மௌலானா ஆசாத், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சார்ய தேவா மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்கிய குழு, இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக, 1937 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் வந்தே மாதரத்தின் சில பகுதிகள் தேசியப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்துக்கள் அல்லாதவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழுப் பாடலையும் இந்தத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக வந்தே மாதரத்தை “ஆட்சேபனைக்குரியது” என்று கருதுவதால், அவர்கள் அதைப் பாட விரும்பவில்லை என்றால், ஒரு மாற்று “ஆட்சேபனையற்ற பாடலை” பாட எவருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ரவீந்திரநாத் தாகூர் உட்பட கூடியிருந்த தலைவர்களின் கூற்றுப்படி, முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டின் அழகை, உணர்வு ரீதியாக தூண்டும் விதமாகத் தொடங்கினாலும், பிந்தைய சரணங்களில் இந்து தெய்வமான துர்காவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகில இந்திய முஸ்லிம் லீக் இந்தப் பாடலை எதிர்த்து. அதன்பிறகு, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன், இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பாடப்படும், தேசியப் பாடலாக முதல் இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது, துர்கா மற்றும் லட்சுமி பற்றிய குறிப்புகளைக் கொண்ட பிற வரிகள் நீக்கப்பட்டன என்பதுதான் உண்மையான வரலாறு.
பிரித்தாலும் சூழ்ச்சிக்கு ஆதரவு!
எப்படி எடுத்துக் கொண்டாலும் காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் பாடப்பட்ட பிறகு தான் அந்தப் பாடல் விடுதலை இயக்கத்தின் சின்னமாக மாறியது. ஆனால் இது எழுதப்பட்ட காலத்தில் அதிலும் குறிப்பாக பங்கிம் சந்திரர் பிரிட்டிஷ் அரசின், ஒரு சாதாரண எழுத்தாக இருந்தவர். இப்பாடல் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்த காரணத்தால் அவருக்கு துணை மாவட்ட ஆட்சியராகவும், நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற வைத்து தங்களது விசுவாசத்தைக் காட்டினர். இதன்மூலம் பிரிட்டிஷ் மாதாவுக்கு சேவகம் செய்ததால்தான் இந்த வெகுமதிகள் கிடைத்தது என்பது தெளிவாகிறது.
‘சர்’ பட்டத்தை திருப்பி அளித்த தாகூர்!
இதன் வகுப்புவாத கண்ணோட்டத்தை ஏற்காத காரணத்தால் தான் தாகூர் கைரே பைரே என்ற ஒரு புதிய நாவலையே எழுதினார். இதில் அவர் படைத்த கதாநாயகன் நிகிலேஷ் இந்தியாவை தெய்வீக வடிவமாக வணங்க மாட்டான் மாறாக அதில் இருக்கும் ஏழைகள், விவசாயிகள் குடிசை வாழ் மக்கள், நலிந்த பிரிவினர் ஆகியோரை இந்தியாவாக அவன் பார்ப்பதாக படைத்திருப்பார்.
ஜாலியன்வாலாபாக் படு கொலை,செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் தாகூர். அரசாங்கத்தின் மீது சீற்றமுற்று, சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கிய சர் பட்டத்தைத் திருப்பி கொடுத்து விட்டார். அத்துடன் ‘மனிதாபிமானமற்ற வகையில் என் நாட்டு மக்கள் சுட்டுக் கொல்லப்படும் போது, எனக்கு மட்டும் இந்தக் கௌரவம் எதற்கு? இது எனக்கு அவமானம். எவ்விதமான தனிமதிப்பும் இல்லாமல், நான் எப்போதும் என் நாட்டு மக்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன் என்று ஒரு கடிதமும் எழுதி வைசிராய்க்கு அனுப்பி வைத்தார். அவர்தான் தாகூர்!
பாரத் மாதா கி ஜே! என்ற முழக்கத்தை உருவாக்கியவர் அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர், ஜெய்ஹிந்த்! என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர் அபித் ஹாசன் என்ற இஸ்லாமியர். எனவே அவர்களை தேச பற்றுக்கு அப்பால் வைக்க என்னதான் அவர்கள் முயற்சித்தாலும் அது உண்மைக்கு எதிரானது மட்டுமல்ல, அது ஒரு வரலாற்று துரோகம்!
பிரிட்டிஷ் ஆட்சிக்கு சேவகம் செய்தது தான் சங் பரிவாரங்களின் வரலாறு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வண்ணம் இந்த வந்தே மாதரம் கொண்டாட்டம் அமைந்துள்ளது.