
“கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதி ஒழிப்பில் ஆர்வம் இல்லை, நாட்டமில்லை, அக்கறை இல்லை. அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்தை வலியுறுத்தியே போராடினார்கள், போராடுகிறார்கள். சமூக சமத்துவம் பற்றிக் கண்டுகொள்வதில்லை”எனக் கிளிப்பிள்ளை போல், சொன்னதையே சொல்லிக் கொண்டுள்ளனர் சில சீர்திருத்த இயக்கத் தலைவர்கள்.
இதன் மூலம், தங்களை கம்யூனிஸ்ட்டுகளை விட மேலானவர்களாக, அறிவு ஜீவிகளாக, அதிபுத்திசாலிகளாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.
இந்தச் சீர்திருத்தவாதிகள் அடையாள அரசியலை முன்னிறுத்தி உழைக்கும் மக்களைக் குழப்பி, கம்யூனிஸ்ட்டுகள் பின்னால் அவர்கள் வர்க்க ரீதியாக அணிதிரள்வதைத் தடுக்கின்றனர்.
உண்மையில், கம்யூனிஸ்ட்டுகள், சாதிப்பிரச்சனைகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியே வந்துள்ளனர். சாதி ஒழிப்பிலும் சரியான நிலைபாட்டையே கடைப்பிடித்து வருகின்றனர்.
1845–&46 ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய “ஜெர்மானியச் சித்தாந்தம்’’ என்ற நூலில், சாதியின் தோற்றம் பற்றி தங்கள் கருத்தை ‘‘பொருள் முதல்வாத” அடிப்படையில் வெளியிட்டனர். அப்பொழுது மார்க்சின் வயது 26. ஏங்கல்ஸ் வயது வெறும் 24 மட்டுமே!
உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது என்றார் மார்க்ஸ். பக்குவமற்ற உழைப்புப் பிரிவினையானது, அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றார் மார்க்ஸ். அதுமட்டுமல்ல, சாதியமைப்புதான் பக்குவமற்ற உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்ற கருத்துமுதல்வாத நம்பிக்கையையும் அவர் விமர்சனம் செய்தார்.
சாதி, உழைப்புப் பிரிவினையை உருவாக்கவில்லை. உழைப்புப் பிரிவினைதான் சாதியை உருவாக்கியது எனத் தெளிவுபடுத்தினார்.
அந்த உழைப்புப் பிரிவினையை, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவை மாற்றுவதன் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு.
ஆனால், சாதி என்பது பார்ப்பனர்களின் சதியால் உருவானது. மனுதர்மமும், புராணங்களும், இதிகாசங்களும்தான் சாதி உருவாகக் காரணம். கடவுளின் மூலம் வர்ணத்தை, சாதியை பார்ப்பனர்கள் நியாயப்படுத்தினர். அவற்றின் மூலமே சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை உருவானது என்பதே கருத்துமுதல்வாதிகள் பலரின் கருத்து. எனவே, அவர்கள் மேற்கண்டவற்றை எதிர்த்துக் கருத்தியல்ரீதியாக மட்டுமே போராடினர், போராடிவருகின்றனர்.
உழைப்புப்பிரிவினை மூலம் உருவான சாதியை, மேலிருந்து கீழான படிநிலை அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வை, அதன் அடிப்படையிலான பரம்பரைத் தொழிலை, உழைப்புப் பிரிவினையை, உழைப்புச் சுரண்டலைப் பாதுகாக்க, நிலப்பிரபுத்துவ மற்றும் அதற்கு முந்தைய சமூகப் பொருளாதார அமைப்புகளைப் பாதுகாக்க, பார்ப்பனியம், அரசு அதிகாரம், கடவுள், மனுதர்மம், புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை போன்றவை பயன்படுத்தப்பட்டன.
சாதி உழைப்புப் பிரிவினை என்ற அடிப்படையில் முதலில் தோன்றியது. அதைப் பாதுகாக்க, நிலைத்து இறுகச் செய்திட மற்றவை அனைத்தும் உதவின என்பதே பொருள்முதல்வாதப் பார்வை. கம்யூனிஸ்ட்டுகளின் பார்வை.
சீர்திருத்தவாதிகளின் பார்வை கருத்துமுதல்வாதப் பார்வையாகும். சாதி பார்ப்பனர்களின் சதியால் மட்டுமே உருவானது என்பதே அவர்களின் பார்வை.
சாதியை ஒழிக்க உழைப்புப் பிரிவினையை, உற்பத்தி உறவை மாற்றிட கம்யூனிஸ்ட்டுகள் முதன்மையான போராட்டமாகக் கருதுகின்றனர். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
அதற்கான வர்க்கப் போராட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அதேசமயம், சாதியை பாதுகாக்கும் கருத்தியலையும், நிறுவனங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் எதிர்க்கின்றனர்.
ஆனால், கருத்து முதல்வாத சீர் திருத்தவாதிகளோ, மூலக் காரணத்தை விட்டு விட்டு விளைவின் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.
நோய்முதல் நாடியைக் கண்டறிந்து அதைப் போக்க முயல வேண்டும். சாதியப் பிரச்சனையும் அப்படியே! கம்யூனிஸ்ட்களின் சாதி ஒழிப்புப் போராட்டங்கள் மகத்தானவை. அவை சாதிக்கான மூலக்காரணத்தை, உற்பத்தி உறவை மாற்றுபவை.
1925 ல் கான்பூரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டின் தலைமையுரையில் மார்க்சியப் பார்வையில், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு, தீண்டாமை மற்றும் சாதிப் பிரச்சனை குறித்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், கீழ்க்கண்டவாறு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டாமைப் பிரச்சனை முற்றிலும் பொருளாதாரப் பிரச்சனை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமைச் சமுதாயத்தில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வே கோடிக்கணக்கான அடக்கியொடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோயில்கள், குளங்கள், சாலைகள் இவற்றைப் பயன்படுத்தும் உரிமை பெற்று விட்டாலே; சமூகத்தில் இந்த அவலநிலையிலுள்ளவர்கள் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர முடியாது. தீண்டாமைப் பிரச்சனை என்பதே விவசாய உற்பத்தி உறவுப் பிரச்சனையாகும். இந்தப் பொருளாதாரச் சார்புடைமையிலிருந்து விடுபட்டாலொழிய, தீண்டாமை ஒழியாது.
சமூக அடிப்படையில் பேசுகின்ற இந்தியச் சீர்திருத்தக்காரன் நாட்டின் கோடிக்கணக்கான நமது விவசாயத் தொழிலாளர்களை, பணக்காரர்கள் பொருளாதார இழிநிலை சிறைக்குள் வைத்திருப்பதைப் பற்றி வாளாவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சீர்திருத்தக்காரனின் பணக்கார மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு” என, சிங்கார வேலரின் உரையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட உரையில் இந்தியாவில் நிலவும் தீண்டாமைப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமாக, நிலவுடமை உற்பத்தி உறவு இருப்பதை சிங்காரவேலர் சுட்டிக்காட்டுகிறார்.
“தீண்டாமைப் பிரச்சனை என்பது பொருளாதாரச் சுரண்டலோடு தொடர்புடையதாகும். நில உடைமையே இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு அடிப்படையாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார விடுதலையின்றி, சமூக விடுதலை மட்டும் சாத்தியமில்லை’’ என்றார் சிங்காரவேலர்.
- இந்தியாவில் காணப்படும் சாதி சமயக் கட்டுப்பாடுகள் போல் உலகெங்கும் காண்பது அரிது. சாதி சமயம் ஒழியவேண்டுமானால் அதனை ரட்சித்துவரும் அரசியலை ஒழிக்கவேண்டும். இப்போதைய அரசு அதை ரட்சித்து வருவத னால் இந்த அரசும் பொருளாதாரமும் மாறினால் ஒழிய சாதியும் சமயமும் மாறா. (20.3.1932)
- சுயமரியாதை இயக்கம், சாதி சமயம் ஒழிந்து சமதர்மம் ஏற்பட்டால் ஒழிய சுயராஜ்யம் வேண்டாம் என்று குறிப்பிடல் எந்த நியாயத்துக்கும் பொருந்தாது. (3.4.1932)
- சமதர்ம அரசு வந்தால்தான். நம் நாட்டிலிருந்து தீண்டாமை, மதம், பசிப்பிணி தீரமுடியும். சமதர்மம் என்பது சொத்துரிமை, சமயவுரிமை, சாதியுரிமை நீங்கிய வாழ்க்கையாகும். சம சொத்துரிமையைப் பாதுகாக்கும் முறை தேவை. (10.4.1932)
- சமதர்மத்துக்கு மதமும் சாதியும் நேர் விரோத மானவை. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பவை உடையவன் இல்லாதவன் என்ற வேறுபாட்டால் உருவானது. இதையொழித்து சுயமரியாதை இயக்கத்தார் சாதி சமயமற்ற பொருளாதார வேறுபாடுகள் அற்ற சமூகத்தை ஏற்படுத்த வேண்டும். மற்ற கட்சியோரைக் கண்டித்தால் மட்டும் போதாது. ஆக்கபூர்வமான வேலை செய்யவேண்டும். (17-.4.-1932)
- “சமூகத்தின் பொருளாதார வேறுபாடுகளை அகற்றுவதன் மூலமே சாதி, சமயத்தைக் களைய முடியும்’’ எனத் தனது கருத்துகளை சிங்காரவேலர் கூறிவந்தார்.
இதுபோன்று சாதி ஒழிப்பு குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு சிங்காரவேலர் தெளிவுபடுத்தினார்.
சிங்கார வேலர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தலைப்புகளைப் பாருங்கள்…
1. சாதியை ஒழிக்க வேண்டும்.
2. சாதி மதம் ஒழிவதற்கு இனிவரும் சந்ததியரைக் கற்பிக்க வேண்டியதின் அவசியம்.
3. சாதி ஒழிப்பிற்குக் கலப்புமணம் ஒரு மார்க்கம்.
4. சாதி வாதமும் வகுப்புவாதமும்.
5. சாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா?
இதுபோன்று பல கட்டுரைகள்.
சாதி ஒழிப்பில் அக்கறை இன்றியா, சிங்காரவேலர் என்ற கம்யூனிஸ்ட், சாதி ஒழிப்பைப் பற்றி எழுதிக் குவித்தார்? ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்தார்?
கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அகில இந்திய மாநாட்டு அரசியல் அறிக்கைளிலும், கட்சியின் திட்டத்திலும் சாதி ஒழிப்பைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் (Party Programme)…
பத்தி எண்கள் 8.12 முதல் 8.15 வரை, சாதி மற்றும் வர்க்கப் பிரச்சனைகள் பேசப்படுகிறது.
பத்தி எண் 8.14 ல் “… சித்தாந்த ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூகப் பொருளாதார ரீதியாக மற்றும் நடைமுறையில் தொடர்ச்சியாக சாதிகளுக்கும் சாதியத்திற்கும் எதிராகப் போராட வேண்டியது அவசியமாகும்…” என்று கூறப்பட்டுள்ளது.
பத்தி எண் 8.15 ல்
“வர்க்கங்களற்ற, சாதிகளற்ற சமூகத்தைப் படைப்பதற்காகக் கட்சி உறுதி பூண்டுள்ளது.
அதை ஒரு வளர்ச்சி பெற்ற முன்னேறிய சோசலிச சமூக அமைப்புதான் சாத்தியமாக்கும்.அத்தகைய புரட்சிகரமான மாறுதலுக்காகக் கட்சி போராடும், சண்டையிடும்“ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரம்தான் அனைத்துக்கும் அடிப்படை. பொருளாதாரம் என்பதை, மனிதர்களிடையேயான உறவாக, உற்பத்தி உறவாக அதாவது வர்க்கங்களுக்கிடையேயான உறவாக, அவ்வுறவைப் பற்றி ஆராயும் சமூக விஞ்ஞானமாக மார்க்ஸ்தான் அடையாளம் காட்டினார்.
உலக வரலாற்றில், பொருளாதாரம் என்பதை மனிதர்களிடையான உறவாகப் பார்த்த முதல் நபர் மார்க்ஸ்தான்.
ஆனால், மற்றவர்களோ பொருளாதாரத்தை உற்பத்திப் பொருட்களுக்கிடையேயான உறவாகப் பார்த்தனர். சிலர் உழைப்புக் கருவிகளை, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதைப் பொருளாதாரமாகப் பார்த்தனர்.
உற்பத்தி உறவு என்பது உற்பத்திச் சாதனங்களான நிலம், தொழிற்சாலை போன்றவற்றில் உள்ள உடைமை மற்றும் உற்பத்திப் பொருட்களில் ஒவ்வொருவரும் பெறும் பங்கு போன்றவற்றின் அடிப்படையிலான, மனிதர்களிடையேயான உறவாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாமேதை மார்க்ஸ்தான், அடிமை உடைமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்ற ஒவ்வொரு சமூகப் பொருளாதார அமைப்பின் அடித்தளமாக (Base) உற்பத்தி உறவுகள் உள்ளன என்றார். அவற்றின் மேல் கட்டுமானமாக (Super Structure) அந்தச் சமூகப் பொருளாதார அமைப்புகளால் உருவாக்கப்படும், அவற்றைப் பாதுகாக்கும் அரசு, சட்டம், அரசியல், மதம், தத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவை உருவாகின்றன என்ற, “அடித்தளம் மற்றும் மேற்கட்டுமானம்’’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.
இது மார்க்சின் மாபெரும் கண்டுபிடிப்பாகும்.
இதில் அடித்தளம்தான் மேற்கட்டுமானத்தை நிர்ணயிக்கிறது. இந்த அடித்தளம், அதாவது உற்பத்தி உறவுகள்தான் சமூக வாழ்நிலை எனப்படுகிறது.
இந்தச் சமூக வாழ்நிலைதான் சமூக உணர்வை (மேற்கட்டுமானத்தை) நிர்ணயிக்கிறது என மார்க்ஸ் கூறினார்.
மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செயல்படும் பகுதியாக இருக்கிறது. தாக்கம் செலுத்தினால் பொருளாயாதச் சக்தியாக மாறிவிடும். ஆயினும் இறுதியாக அடித்தளமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கும். மேற்கட்டுமானம் அடித்தளத்தை தீர்மானிப்பதில்லை.
இது சாதி மற்றும் சாதி ஒழிப்புப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள மிகவும் அவசியமாகும்.
சாதி என்பது , உற்பத்தி உறவாக, உழைப்புப் பிரிவினையாக அடித்தளத்தில் உள்ளது. அதே சமயம் மேற்கட்டுமானதில் சாதி உணர்வாக , பல்வேறு கருத்தியல் வடிவங்களாக, சாதியத்தை காக்கும் அரசு,மதம் ,குடும்பம் போன்ற நிறுவனங்களாக ,அகமணத் திருமண முறையாக நிலவுகிறது.
அடித்தளம் மாறும் பொழுது மேற்கட்டுமானத்தில் உள்ள கருத்தியல் வடிவங்களும், நிறுவனங்களும் , திருமண முறைகளும் மாறும்.
எனவேதான், கம்யூனிஸ்ட்டுகள் மேற்கட்டுமானத்தில் உள்ள சாதிய உணர்வு, தீண்டாமை போன்றவற்றை ஒழிக்க, முதலாளித்துவச் சமூகப் பொருளாதார அமைப்பின் அடித்தளத்தை மாற்ற முயல்கின்றனர்.
முதலாளித்துவ உற்பத்தி உறவை ஒழித்துவிட்டு, சோசலிச உற்பத்தி உறவைக் கட்டி எழுப்பப் பாடுபடுகின்றனர்.
அதாவது உற்பத்திச் சாதனங்களில் உள்ள தனியுடைமையை ஒழித்து, அவற்றை பொதுவுடைமையாக்கப் பாடுபடுகின்றனர்.
உழைப்புச் சுரண்டலை ஒழிக்க முயல்கின்றனர். உழைப்புச் சுரண்டலை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. ஏனெனில், சாதி, உழைப்புச் சுரண்டலுக்கான ஏற்பாடாகும்.
எனவே தான், கம்யூனிஸ்ட்டுகள் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி உறவை ஒழித்துவிட்டு, சோசலிச உற்பத்தி உறவை, சோசலிசச் சமூகப் பொருளாதார அமைப்பை உருவாக்கப் பாடுபடுகின்றனர். அதற்கான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இந்த வர்க்கப் போராட்டத்தை, பொருளாதாரத் தளம், அரசியல் தளம் மற்றும் சித்தாந்தத் தளம் என்ற மூன்று தளங்களிலும் நடத்துகின்றனர்.
இதில், அரசியல் போராட்டத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர்.
வர்க்கப் போரின் மூலம் உற்பத்தி உறவை மாற்ற வேண்டும். அதன்மூலம் சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்கள், பொருள் முதல்வாதிகளான கம்யூனிஸ்ட்டுகள்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் அறிந்த கம்யூனிஸ்ட்டுகளோ, வர்க்கப்போராட்டத்தின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தைக் கட்டி எழுப்பும் பொழுதுதான், ஓர் வளர்ச்சி பெற்ற முன்னேறிய சோசலிச சமூக அமைப்பில்தான் சாதியை ஒழிக்க முடியும். வர்க்க வேறுபாடுகளையும் ஒழிக்க முடியும் என்கின்றனர்.
அவை பொருளாதாரப் போராட்டமும் கூட என்பதையும் உணரவேண்டும். அவை வெறும் சமூகச் சமத்துவத்திற்கான போராட்டம் மட்டுமல்ல.
பொருளாதாரச் சமத்துவத்தை எட்டாமல் அதாவது உற்பத்திச் சாதனங்களை பொதுவுடைமையாக்கி, உழைப்புச் சுரண்டலை ஒழிக்காமல் சமூகச் சமத்துவம் என்பது சாத்தியமில்லை.
உண்மையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதின் மூலமே உறுதி செய்ய முடியும். சாத்திய மாக்க முடியும்.
சமூகச் சமத்துவத்திற்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரச் சமத்துவமே. எனவே, பொருளாதாரச் சமத்துவத்தை முதன்மைப்படுத்திப் போராடும் கம்யூனிஸ்ட்டுகளின் வழிமுறை மிகச் சரியானதே. அதுவே அறிவியல் பூர்வமானதாகும்.
இதை உணர்ந்து, இனிமேலாவது, கம்யூனிஸ்ட்டுகள், சாதி ஒழிப்பில் அக்கறை காட்டவில்லை என பல்லவி பாடுவதை நிறுத்துவார்களா?
கம்யூனிஸ்ட்டுகள் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதைக் கைவிடுவார்களா?