
பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும் பாலியல் வன்முறைத் தாக்குதல்களும் காலம் காலமாக நடந்து வருகின்றன.
குறிப்பாக நிர்க்கதியான பெண்கள், ஏதேனும் ஒரு வகையில் தனது உதவியை நாடும் நிலையில் இருக்கிற பெண்களை, தமது வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாகச் சுரண்டுவதில் மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களும் ஈடுபடுகின்றனர்.
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள், அதிகாரம் செலுத்தும் நிலையில் இருப்பவர்கள் என ஏராளமானோர் இத்தகைய பாலியல் வேட்டைகளை இயல்பாகச் செய்கிறார்கள்.
இது வெளியில் தெரியாது, தெரிந்தாலும் தனக்கு பாதிப்பு வந்துவிடாது என்ற அதிகார மமதைதான் இதற்கு அடிப்படையாக இருக்கிறது. உயர் அதிகாரம் படைத்தோர் இத்தகைய வல்லுறவுகளில் ஈடுபடும்போது, சமூகம் கைகட்டி நிற்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே குற்றம் சாட்டுகிறது!
பாதிக்கப்பட்ட பெண்கள், வெளியில் சொன்னால் வாழ்க்கை போய்விடும் என்று வாயடைக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி நீதியைத் தேடி அலையும் பெண்களுக்கு, அதற்கான ஒவ்வொரு கதவும் இழுத்துச் சாத்தப்படுகிறது!
பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வழக்கு, பாலியல் கொடுமைகளில் புதிய உச்சமாகும்.
தனி மாளிகை கட்டியமைத்து, பெண்களை நம்பிக்கைத் துரோகம் செய்து, காதலிப்பதாக நடித்து, மாளிகைக்கு வரவழைத்து, அடித்துத் துன்புறுத்தி, மிரட்டி கூட்டமாய் அந்த ஓநாய்கள் சேர்ந்து வேட்டையாடியது மட்டும் இல்லாமல், அதனை வீடியோ எடுத்து, வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, தொடர்ந்து பணம் பறிப்பதற்கும், விரும்பும் போதெல்லாம் இச்சையை நிறைவு செய்ய அழைப்பதற்கும் பயன்படுத்தி வந்தது எண்ணிப் பார்க்க முடியாத கொடூரச் செய்கையாகும்.
“அடிக்காதீங்க அண்ணா, வலிக்கிறது” என்றும் “உன்னையை நம்பித்தானே வந்தேன்” என்றும் அந்தப் பெண்கள் அழுது அகற்றுகிற கூக்குரல் எந்தக் கடின மனத்தையும் அசைத்து உலுக்கிவிடும். பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி இதனை வெளிக்கொண்டு வந்த ‘நக்கீரன்’ இதழ் பாராட்டுக்குரியது.
2016 முதல் 2018 வரை தொடர்ச்சியாக இந்த வன்கொடுமை நடந்து கொண்டே இருந்திருக்கிறது.
2019 பிப்ரவரியில், ஒரு கல்லூரி மாணவி துணிச்சலாக இதை காவல்துறையிடம் புகார் செய்ததால், இது வெளிச்சத்துக்கு வந்தது.
புகாரை பதிய மறுத்ததில் தொடங்கி, ஒவ்வொரு கட்டத்திலும் இதை ஒன்றுமில்லாமல் செய்துவிட, அன்றைய அதிமுக அரசு முயற்சித்தது. சட்ட நியதிகளுக்கு முரணாக, புகார் கொடுத்த பெண்ணின் பெயர் முகவரி உறவினர்கள் பெயர் அனைத்தையும் போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் பத்திரிகையாளர் பேட்டியில் வெளிப்படுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையிலும் விவரங்கள் இருந்தன.
இனிமேல் யாராவது புகார் கொடுக்க வந்தால், உங்களுக்கும் இந்த கதிதான் என்பதற்கான எச்சரிக்கை அது.
அப்போது இதை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திமுக நீங்கலாக, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உள்ளிட்ட மாதர் அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தன.
பொதுமக்கள் எழுச்சியினால், இந்த வழக்கில் அதிமுக அரசு முட்டுக் கொடுக்க முடியவில்லை. முதலில் சிபிசிஐடி-க்கும், பிறகு சிபிஐ-க்கும் வழக்கு மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில், எட்டு பெண்கள் சாட்சியம் அளித்தார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் கடைசிவரை வெளிவராமல் பாதுகாக்கப்பட்டதற்காக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளை பாராட்டியாக வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை புகார் செய்யத் துணிந்த கல்லூரி மாணவியும், அவரது குடும்பமும் போற்றுதலுக்குரியவை. அவர் மட்டும் உறுதியோடு நின்றிருக்காவிட்டால், வழக்கு பிசுபிசுத்திருக்கும்.
இந்தக் காமுக ஓநாய்களுக்காக நாங்கள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர்கள் முடிவு செய்ததும் பாராட்டுதலுக்கு உரியது.
கோவை சிறப்புப் பெண்கள் நீதிமன்றம், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கும் 85 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனோடு சேர்த்து மேலும் 25 லட்ச ரூபாய் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக தருவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு. அவர்கள் பணிக்கு வரும்போதும் திரும்பிச் செல்லும் போதும் பாதுகாப்பு தர வேண்டியது வேலையளிப்பவரின் சட்டபூர்வ கடமை. இது ஏட்டளவில் உள்ளது. தமிழ்நாடு அரசு இதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.