அறிக்கைகள்

பாசிசத்திற்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டுவோம்!

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 17வது அகில இந்திய மாநாடு அறைகூவல்

பாசிசத்திற்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டுவோம் -என திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 17வது அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 17வது அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் மே 15 முதல் 18 வரை நடைபெற்றது.

மாபெரும் பொதுக்கூட்டம்

பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், சமூக நீதி, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்று முழக்கங்களை முன்வைத்து 15.05.2025 அன்று மாலை 5 மணி அளவில் இந்திரா மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற தலைவர் சுக்ஜிந்தர் மகேஷரி தலைமை தாங்கினார்.

ஆந்திர மாநிலத் தலைவர் ராஜேந்திர பாபு வரவேற்றுப் பேசினார். ஆந்திர மாநிலக் கலைக்குழுக்களின் பாடல், பரத நாட்டியம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பிரபல பாடகர் வந்தே மாதரம் ஸ்ரீநிவாஸ் கலந்துகொண்டு புரட்சிகரப் பாடல்களைப் பாடினார்.

இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியச் செயலாளர் கே.நாராயணா, மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணா, இளைஞர் பெருமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் கே.சந்தோஷ்குமார் எம்.பி., இளைஞர் பெருமன்ற பொதுச்செயலாளர் இரா.திருமலை, மாணவர் பெருமன்றப் பொதுச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர். இளைஞர் பெருமன்ற தேசியச் செயலாளர் லெனின் பாபு நன்றி கூறினார்.

பிரதிநிதிகள் மாநாடு

16.05.2025 அன்று பிரதிநிதிகள் மாநாடு கச்சாபி அரங்கில் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற தேசியத் தலைவர் சுக்ஜிந்தர் மகேஷரி கொடியேற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தமிழ்நாட்டிலிருந்து 85 பிரதிநிதிகள் உள்ளிட்டு, 23 மாநிலங்களிலிருந்து 570 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சுக்ஜிந்தர் மகேஷரி (பஞ்சாப்), அருண் (கேரளா), ரோஷன் குமார் சின்ஹா (பிகார்), சையது வலி உல்லா காதரி (தெலங்கானா), ஆர்த்தி (மகாராஷ்டிரா) ஆகியோர் தலைமை தாங்கினர்.

வாழ்த்தரங்கம்

மாநாட்டில், கட்சியின் தேசியச் செயலாளர் கே.நாராயணா, இளைஞர் பெருமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் கே.சந்தோஷ்குமார், விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரௌலா வெங்கய்யா, இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் என்.பெரியசாமி எக்ஸ் எம்எல்ஏ, மாதர் சம்மேளனப் பொதுச் செயலாளர் நிஷா சித்து, மாணவர் பெருமன்றப் பொதுச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், தலைவர் விராஜ் திவாங், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் கொண்டல் ராவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கட்சியின் தேசியச் செயலாளர் பினாய் விஷ்வம் அவர்களின் வாழ்த்துச் செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது. மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜாஷ்டி சலேமேஸ்வரர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கருத்தரங்கம்

16.05.2025 அன்று மாலை இரா.திருமலை தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியும், வேலையின்மைப் பிரச்சினையும்’’ என்கிற தலைப்பில் வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், “தேர்தல் சீர்திருத்தம் -காலத்தின் தேவை” என்கிற தலைப்பில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் அஸ்வினி பக்‌ஷி அவர்களும் உரையாற்றினர்.

தேர்தல் சீர்திருத்தை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் 5 கோடி கையெழுத்து இயக்கத்தையும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி அக்டோபரில் தேசிய நெடும்பயணத்தையும் நடத்துவது என மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்

  • அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
  • கல்வி, வேலை, அதிகாரத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தேர்தலில் வெளிப்படைத்தன்மையும் உறுதிபடுத்த வேண்டும். மற்றும் சீர்திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும்.
  • கல்வியை அனைவருக்கும் கட்டணமில்லா மலும், சமமாகவும் வழங்க வேண்டும்.
  • ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.
  • சம வேலைக்கு சம ஊதியம் பெறும் உரிமையும் மற்றும் தொழிற்சங்க அமைக்கும் உரிமையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்.
  • ஜிக் தொழிலாளர்களுக்கு அரசே தனிச் செயலியைத் துவங்கி நடத்த வேண்டும்.
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  • போராடும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். போராடுபவர்கள் மீதான அரசு பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.
  • பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  • பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும்.
  • இயற்கை வளங்களைக் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் இளைஞர்களுக்குப் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
  • தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்

உள்ளிட்டுப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியார் படத்தை அகற்ற விடமாட்டோம் – இளைஞர்கள் உறுதி
இளைஞர் பெருமன்ற மாநாட்டையொட்டி திருப்பதியில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பெரியார் படமும், அவரின் கீழ்க்கண்ட வாசகமும் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது.

“நமது சீரழிவுக்கு மூலக்காரணம் கடவுள்தான் என்றால், அந்தக் கடவுளை அழித்துவிடுங்கள். அதற்குக் காரணம், மதமாக இருந்தால், மதத்தை அழித்துவிடுங்கள். மனுதர்மம், கீதை அல்லது வேறு எந்தப் புராணமாக இருந்தால், அவற்றை எரித்துச் சாம்பலாக்குங்கள். அது கோயிலாகவோ அல்லது பண்டிகையாகவோ இருந்தால், அவற்றைப் புறக்கணிக்கவும்.

இறுதியாக, அது நமது அரசியலாக இருந்தால், வெளிப்படையாக அறிவிக்க முன்வாருங்கள்”.
இதைக் காவல்துறை அகற்ற வேண்டும் என்று இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை மிரட்டினர். பேனரை அகற்ற மறுத்து நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பேனரை அகற்ற காவல்துறை முயற்சி செய்தனர்; இதை இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் முறியடித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button