
போர்க்குணமிக்க தோழர்களே!
பாஜக ஒன்றிய அரசு கடும் பதற்றத்தில் இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காலத்தில் ஏற்பட்ட பதற்றத்தை விடப் பெரும் பதற்றம் பாஜகவைப் பற்றிக் கொண்டுள்ளது.
பஹல்காம் பகுதியில் 25 சுற்றுலாப் பயணிகளும் அவர்களை அழைத்துச் சென்ற ஒரு குதிரையோட்டியுமாக 26 பேர் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்து நாடு அதிர்ச்சியடைந்தது. ஆனால் பாஜகவும், அதன் தலைமையிலான ஒன்றிய அரசும் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நிலைகுலைந்து நிற்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் நாட்டின் குடியரசு துணைத் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு.ஜகதீப்தன்கர் வானத்திற்கும் பூமிக்குமாக குதியோ குதியெனக் குதித்து உச்சநீதிமன்றத்திற்கு எதிராக முண்டா தட்டி, முஷ்டி உயர்த்தி குஸ்திக்குத் தயாராகி நிற்கிறார்.
தற்போது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கடந்த 13.05.2025 அன்று உச்சநீதிமன்றத்திற்கு 14 வினாக்களை அனுப்பி விளக்கம் கோரியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சுட்டிக்காட்டி வினாக்களை எழுப்பியுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றம் நிர்பந்திக்கப்படுவதை மக்கள் உணர்கிறார்கள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இராமஜென்மபூமி வழக்கில் அப்போதைய குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு அனுப்பிய வினாக்கள் பதிலின்றிக் கிடப்பதைக் குடியரசுத் தலைவர் அறிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது. இந்தச் சூழலை உருவாக்கியது யார்? திறந்த மனதோடு, சார்பற்ற நடுநிலை நின்று பரிசீலிக்க வேண்டும்.
ஒன்றிய அரசியல் அதிகாரத்தை 2014 ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடியின் தலைமை வழிநடத்தி வருகிறது. அப்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும் வாய்ப்பைப் பெற்றது. நாட்டு மக்கள் ஆளும் பொறுப்பை பாஜகவிற்கு வழங்கினார்கள்.
மக்களிடம் பெற்ற அதிகாரத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தும், அதன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் கடமைப் பொறுப்பை ஏற்பதாகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர். ஆனால் பிரதமரும், அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்துச் செயல்பட்டு வருகிறார்களா? என்ற வினாவிற்கு பாஜகவினர் நெஞ்சில் கைவைத்து நேர்மையான விளக்கமளிக்க வேண்டும்.
மக்கள் அளித்திட்ட தீர்ப்பு எதுவாகினும், அத்தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளித்து தலைவணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயகம்!
அத்தகைய ஜனநாயகம் குறித்து பாஜகவின் நிலை என்ன?
பாஜகவின் வெற்றியை அனைவரும் ஏற்க வேண்டும் என்பது எவ்வளவு சரியோ, அதேபோல், மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள மாநில அரசுகளை மதித்து நடக்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் பெற்றுள்ள உரிமைகளை மதித்து நடக்க வேண்டியதும் ஒன்றிய அரசின் பொறுப்பாகும்.
தமிழ்நாட்டில் 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து திமுகழகம் ஆட்சி அமைத்தது. எதிர்த்து நின்ற அஇஅதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்தது. பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து திரும்பத் திரும்ப ஆதரவு கேட்டும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஏற்கவில்லை, நிராகரித்து விட்டனர்.
ஜனநாயகத்தின் மீது மோடிக்கும் அவரது கட்சியினருக்கும் நம்பிக்கை இருப்பது உண்மையானால், தமிழக மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தீர்ப்பை மதித்து, தலைவணங்கி ஏற்று இருக்க வேண்டும். அதுதானே உண்மையான ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்.
அத்தகைய ஜனநாயகப் பண்பு பாஜகவினரிடம் உள்ளதா? பிரதமர் மோடியிடம் இருக்கிறதா? அவர்களிடம் அப்படியான நல்ல பண்பை எதிர்பார்ப்பது சரியில்லைதான். ஏனெனில் அவர்களது குருபீடமான ஆர்எஸ்எஸ் ஜனநாயகத்தை ஏற்காத, அதனை விரும்பாத அமைப்பு என்பதே வரலாறாகும்.
பாஜக ஆட்சியில் இல்லாத பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற அரசுகளுக்கு எதிராக, ஆளுநரைக் கொண்டு ஓர் போட்டி அரசை நடத்தலாமா?
மதிப்பிற்குரியவர்கள் மக்களா? அல்லது நியமன அதிகாரிகளா?
மக்களைவிட நியமன அதிகாரிகள் மேலானவர்கள் என்ற ஓர் புதிய முறையை, ஜனநாயக விரோத முறையை வலுக்கட்டாயமாகத் திணிப்பதுதான் மோடியின் ஜனநாயகமாகும். அத்தகைய ஜனநாயகம் நாட்டைச் சீரழித்து வருகிறது.
மோடி திடீர் என நாட்டின் பிரதமர் ஆகிவிடவில்லை – அவர் பிறந்து வளர்ந்த குஜராத் மாநிலத்தின் முதல்வராகச் செயல்பட்டவர். அவர் அவ்வாறு முதலமைச்சராகக் கோலேச்சிய காலத்தில்தான் கோத்ரா கொடுமை, இதனைத் தொடர்ந்து அரங்கேற்றிய இனப் பேரழிவுச் செயலை எளிதில் கடந்து சென்று விட முடியாது.
மோடி முதலமைச்சராக இருந்தபோது மாநில அதிகாரம் குறித்து நீட்டி முழங்கினார். அன்றாடம் அறிக்கைகளை வெளியிட்டார். மாநில ஆளுநர் ஒத்துழைக்கவில்லை எனக் கூக்குரல் எழுப்பினார். அவற்றையெல்லாம் அவர் மறந்து போயிருப்பினும் நாட்டு மக்கள் மறக்கவில்லை, மறக்க மாட்டார்கள் என்பதனை மோடி நினைவில் கொள்ளல் வேண்டும்!
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மோடியின் பரிந்துரைப்படி திரு.ஆர்.என்.ரவி இங்கு அனுப்பப்பட்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021 செப்டம்பர் 18-ல் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பேற்றுக் கொண்ட ஆரம்ப நாளிலிருந்து அவரது செயல்பாடுகள், ஆளுநர் மாளிகையை அவர் பயன்படுத்தும் விதம் தன்னிச்சையாக மேற்கொள்ளும் சுற்றுப் பயணம், முரண்பாடுகளை உருவாக்கும் அவரது பேச்சுக்கள், அறிக்கைகள் என அனைத்தும் அருவருக்கத்தக்க வகையில் இன்றுவரை தொடர்கின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை, மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை நடத்துவதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநயாகச் சக்திகளும், அரசியல் கட்சிகளும், அஇஅதிமுகவும் கூட கண்டித்தன. பல போராட்டங்களை முன்னெடுத்தன.
ஜனநாயக முறையில் நடைபெற்ற போராட்டங்களை ஆளுநர் பொறுப்பிலிருந்த ரவியும் மதிக்கவில்லை. அவரை நியமித்த குடியரசுத் தலைவரும் கருத்தில் கொள்ளவில்லை. மோடியின் ஒன்றிய அரசு வாய்திறக்கவில்லை.
ஆளுநர் ரவியின் அடாவடித்தனமான செயல்பாடுகள் அராஜக வழியிலானது. அனுமதிக்க முடியாதது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆண்டுக்கொருமுறை கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றுவது மரபாகும். ஆளுநர் உரை அரசின் கொள்கைவழி அணுகுமுறையைத் தெளிவுபடுத்தும் ஆவணமாகும்.
ஆளுநர் உரையின் வரைவு தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மாற்றம், திருத்தம் தேவையெனில் அரசோடு கலந்து பேசி இணக்கமான முறையில் இறுதி செய்யப்படுகிறது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய உரையைப் பேரவையில் வரிவிடாமல் படிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆளுநரைச் சார்ந்தது.
ஆனால் ஆளுநர் ரவி என்ன செய்தார்! அவர் விருப்பதிற்கேற்பப் படிக்க முயற்சித்தார். பேரவையின் மாண்பையும், மரபுகளையும் தகர்த்து அவமதித்தார்.
முதலமைச்சர் எழுந்து அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளதை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டுமெனப் பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டார்.
ஆளுநர் வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவை வரலாறுகளில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது உண்டா? இதன் மீது ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா?
போகட்டும்! பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவர் அதற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும் இல்லையெனில் அரசுக்கு மீண்டும் அனுப்பி விளக்கம் அளிக்கக் கோர வேண்டும். இத்தகைய முறைகளை ஆளுநர் பின்பற்றினாரா?
மாறாக ஆளுநர் ரவி எத்தகைய விளக்கமளித்தார்?
மசோதாக்களை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்வேன், அது எனக்குரிய உரிமை, மசோதாக்கள் மீது நான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் “அவைகள் செத்துப் போய்விட்டன” என்று பொருளாகும் என இறுமாப்புடன் பதிலளித்தார்.
இதேபோல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அவர் முழுமையாகப் படித்து, அவருக்கு அம்மசோதாவின் மீது முழு மனநிறைவு பெற்றால் மட்டுமே அவர் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட வேண்டும்.
நாடாளுமன்றம் கடுமையான சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை சூடான விவாதத்தில் கருத்து மோதல்களோடு நிறைவேற்றப்படும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் படித்து, உணர்ந்து அதன் அவசியத்தை ஏற்று ஒப்புதல் வழங்க சில மணி நேரங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. உதாரணத்திற்கு வக்ஃபு சட்டத்திருத்த மசோதா.
ஒன்றிய அரசின் மசோதாக்கள் அவருக்கு வந்த 24 மணிநேரத்திற்குள்ளாக அவசர, அவசரமாகக் கையெழுத்து இடுகின்றார். அடுத்த நாளே அரசிதழில் வெளியிடப்பட்டுச் சட்டமாகி விடுகின்றன.
நாடாளுமன்றத்திற்கு ஒரு ஜனநாயகம் – சட்டமன்றத்திற்கு வேறொரு ஜனநாயகமா? இது எவ்வகைப்பட்ட ஜனநாயகம் என்பதற்கு ஒன்றிய அரசு விளக்கமளிக்க முன்வருமா? போகட்டும், இவை எல்லாம் போகட்டும் உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் கேட்டு, குடியரசுத் தலைவர் மூலம் வினா எழுப்பியுள்ள ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய அரசுக்குத் துணை நிற்கும், நீட்டிய இடத்தில் கையொப்பம் போட்டு ஒன்றிய அரசை திருப்திப்படுத்தும் குடியரசுத் தலைவரிடம் ஒரே ஒரு கேள்வி!
அக்கேள்வி என்னவெனில் வேறொன்றும் இல்லை, பெரும் சட்டப் பிரச்சனைக்குரிய கேள்வி இல்லை. -சாதாரணமான கேள்விதான்! தமிழ்நாடு மாநில முதலமைச்சருக்கு, அமைச்சர் பெருமக்களுக்கு, ஒரு குடிமகன் ஒரு கடிதம் எழுதினால் அல்லது ஒரு கோரிக்கை மனு அனுப்பினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் கிடைக்கின்றது!
மாநில அரசு பின்பற்றும் முறையை ஒன்றிய அரசும் கூடப் பின்பற்றி வரும் என்று கருதுகின்றோம்!
ஆனால் குடியரசுத் தலைவரிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் கிடைக்கின்றதா? என்பதே நமது கேள்வியாகும்!
உச்சநீதிமன்றத்திடம் பதினான்கு கேள்விகளை எழுப்பியுள்ள குடியரசுத் தலைவர் அவர்களே! மேன்மைதாங்கிய ஒன்றிய அரசே! தமிழ்நாடு ஆளுநர் குறித்து, அவரது ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் குறித்து ஓர் விரிவான கடிதத்தை 2022 நவம்பர் 9 ஆம் நாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் உட்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, அஞ்சல் மூலமாக அல்ல, மாட்சிமை தாங்கிய குடியரசுத் தலைவரிடம் நேரில் வழங்கினார்கள்.
தனி ஒருவராக அல்ல, மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு (திமுக) தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் குழுவாகச் சென்று வழங்கினார்கள். இதற்கு இன்று வரை பதில் அளிக்கவில்லையே ஏன்? ஏன்? ஏன்?
தமிழ்நாட்டு மக்களால் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கொடுத்த கடிதத்திற்கு மதிப்பளிக்காதது ஏன்?
நாடாளுமன்ற உறுப்பினர்களை மதித்து அவர்கள் கொடுத்திட்ட கடிதத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இருந்தால், தீர்வு கண்டு இருந்தால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது அல்லவா?
அவை மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் 2023 ஜூலையில் ஆளுநர் குறித்து ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்திற்காவது மதிப்பளித்துத் தீர்வு கண்டிருக்கலாம் அல்லவா?
அவை மட்டுமல்ல, 2023 டிசம்பரில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு வழங்கிய அறிவுரை மதித்து நடந்து இருக்கலாம் அல்லவா?
சட்டமன்றத்தை மதிக்க மாட்டோம்! நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்க மாட்டோம்! மக்களின் உணர்வை மதிக்க மாட்டோம்! மாண்புமிகு முதலமைச்சரின் கடிதத்தை மதிக்க மாட்டோம்!
உச்சநீதிமன்ற அறிவுரையைக் கூட மதிக்க மாட்டோம் என அடம் பிடிக்கும் ஒன்றிய அரசே! அதற்கு துணை போகும் குடியரசுத் தலைவர் அவர்களே! உங்களிடம் ஒரு கேள்வி!
ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுக்கும் திறனற்ற, வலிமையற்ற குடியரசுத் தலைவரே, அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு நிலையிலிருந்தும், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் “உள்ளங்கை நெல்லிக்கனியென” விளக்கமளித்துள்ள முன்னுதாரணங்களிலிருந்தும், ஏப்ரல் 8 மீண்டும் ஒரு முறை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள இறுதித் தீர்ப்பின் மீது கேள்வி எழுப்புவது சரியா, தகுமா, அதற்கான தார்மீக உரிமைதான் தங்களுக்கு உண்டா என மக்கள் மன்றம் தொடர்ந்து எழுப்பும் வினாக்களைக் காது கொடுத்து கேளுங்கள்! குடியரசுத் தலைவரே, காது கொடுத்து கேளுங்கள்…
வணக்கம்
மீண்டும் சந்திப்போம்.