மாநில செயலாளர்

உண்மைகள் வெளிப்படுவது நாட்டிற்கு நல்லது

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட திடீர்ப் பதற்றம் பெரும் கவலை கொள்ளச் செய்தது.

உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் மனப்பூர்வமாக விரும்புவது போரற்ற உலகம். இரு நாடுகளுக்கிடையே போர் மூளுமேயானால் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் உயிர்கள் மட்டும் பலியாவது இல்லை. அப்பாவின் மக்கள், அதுவும் சாதாரண ஏழை, எளிய மக்கள் எல்லையோரம் உள்ள குடிசை வாழ் மக்கள் என மக்களின் உயிர்கள்தான் எண்ணில் அடங்காத எண்ணிக்கையில் பலியாவார்கள், வீடுகள் தரைமட்டமாக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும், அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைகளும் பன்மடங்கு பெருகும்.

வர்த்தகச் சூதாடிகள் வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி தேசபக்தியோடு பெருக்கிக் கொள்வார்கள்.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ஆயுதங்களை இருநாட்டுக்கும் தாராளமாக வழங்குவார்கள். இனாமாக அல்ல, மாறாக விலை வைப்பது மட்டுமல்ல, கடனும் வழங்குவார்கள். இரு நாடுகளையும் கடன்கார நாடுகளாக மாற்றி, தங்கள் நாட்டின் முதலாளிமார்களின் செல்வம் பன்மடங்கு உயர்ந்திட வழிவகை செய்வார்கள்.

நேட்டோ நாடுகளுடன் உக்கரையினைச் சேர்த்துக் கொள்வதாக அறிவித்தார்கள். விளைவு ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதனைவிட இரு நாடுகளுமே கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக உக்ரைன் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதுடன், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏறத்தாழ அடிமையாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு உதவிடுவோம், ரஷ்யாவை துவம்சம் செய்வோம் எனக் கொக்கரித்த நாடுகள், உக்கிரனுக்கு ஏராளமான ஆயுதங்களைக் குவியலாக வழங்கி அந்நாட்டைக் கடன்கார நாடாக மாற்றி, தற்போது தாங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கொடு என நிர்பந்திக்கின்றார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் கொடுத்த கடனுக்கு உக்ரைன் நாட்டில் உள்ள கனிம வளங்களையெல்லாம் தனதாக்கிக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கின்றது.

உக்ரைன் நாடும் வேறு வழியின்றி அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி பரிதாபமான நிலையில் உள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளை நம்பி, ரஷ்யாவைப் பகைத்து, அதனை எதிர்கொள்ளலாம் என இறுமாப்போடு நேட்டோ கூட்டணியில் அங்கம் வகித்தே தீருவேன் என அடம்பிடித்து, அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது. போரும் முடிந்த பாடில்லை.

இஸ்ரேல் நாடு ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான யுத்தத்தை மட்டுமல்ல, நாட்டையே முற்றிலுமாக அழித்தொழித்து இன வெறியாட்டம் போடுகின்றது.

அமெரிக்கா ஹமாஸ் பகுதியை விலை கொடுத்து வாங்குவேன், அது அமெரிக்காவின் ஒரு பகுதி என டிரம்பு பகிரங்கமாகத் தெரிவிக்கின்றார்.

அப்பாவி மக்கள் நாள்தோறும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு வருகின்றார்கள்.

இத்தகைய சூழலில்தான் பாகிஸ்தான் நாட்டில் முகாம் அமைத்துத் தங்களின் பயங்கரவாதச் செயலை வெளிப்படுத்தி வருபவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22-ல் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 26 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றார்கள்.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே 7ஆம் நாள் அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை 30 நிமிடங்களுக்குள்ளாக, மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. அம்முகாம்களில் உள்ள பயங்கரவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆத்திரப்பட்டவனுக்குப் புத்தி மட்டு என்பது போல், பாகிஸ்தான் ராணுவம் நடந்து கொண்டது. முகாம்களில் இறந்தவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அஞ்சலி செலுத்துகின்றது. இவை கட்டுக்கதை அல்ல, படத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு எனில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் முழு ஆதரவு அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுகின்றது. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது, வளர்ப்பது, ஆதரவளிப்பது என்பது அந்நாட்டிற்கே கேடு விளைவிக்கும். வினை விதைத்தவன் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதனை பாகிஸ்தான் தற்போது உணர்ந்துள்ளதாகத் தெரிகின்றது.

பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 22 முதல் மே 10 மாலை 5 மணி வரை ஏறத்தாழ 19 நாட்கள் நாடு பெரும் பதற்றத்தில் இருந்தது.

பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்தவர் உடனடியாகத் தாயகம் திரும்பினார். திரும்பிய வேகத்தில் விமான நிலையத்திலேயே ஆலோசனை நடத்தினார்.

பின் அமைச்சரவைக் கூட்டம், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவர்களுடன் கூட்டாக, தனியாக பிரதமர் சந்திப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

அவர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டங்களை வித விதமாகப் படமெடுத்து ஊடகங்களில் வெளியிட்டவாறு இருந்தனர். பிரதமர் மிகத் தீவிரமாக, சீரியஸாக இறுக்கமான முகபாவனையுடன், கவலை தோய்ந்த முகமாக உள்ள படங்கள் வெளியிடப்பட்டன. திரும்பத் திரும்ப இடைவெளியின்றித் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள், அக்கூட்ட முடிவுகள், அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் படங்கள் ஒவ்வொன்றும் பதற்றத்தை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இவ்வளவுக்கு மத்தியில் தாங்க முடியாத பணிச்சுமைகளுக்கிடையே, பணிச்சுமையெனில் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பிரதமர் இந்த இடைபட்ட 19 நாட்களில் ஒவ்வொரு நாளும் சரியாக உணவருந்த வில்லை, பிளாஸ்கில் உள்ள வெந்நீரை ஊற்றிக் குடித்துப் பசியைப் போக்கிக்கொண்டார். நாள்தோறும் 24 மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கினார், மற்ற 22 மணி நேரமும் நாட்டைப் பற்றியே கவலை கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட பணிச்சுமைகளுக்கிடையே பீகாருக்குச் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெற்று, அங்குதான் தன் கோப, குரூர முகத்துடன் அறிவித்தார். பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி பதிலடி தரப்படும் என்று அறிவித்தார் என செய்திகள் வந்தன.

கடுமையான நெருக்கடி மிக்க நேரத்தில் தலைநகரத்தில் இல்லாமல் பீகாருக்கு ஏன் பறந்து சென்றார்? அங்கு போய் அதிரடி அறிவிப்பை ஏன் வெளியிட்டார்? என்று பொதுமக்கள் கேட்கின்றார்கள். சோழியன் சிண்டு சும்மா ஆடாது என்று நம் ஊர் பழமொழி ஒன்று உண்டு என்றும் பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

நாடு முழுவதும் பதற்றம் மேலும் தீவிரமடைகின்றது. எல்லைகளில் படைகள் வைக்கப்பட்டு விட்டன. எந்நேரமும் எதனையும் செய்ய இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. காஷ்மீர் பகுதிகளில் பதுங்கு குழிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இந்தியா -பாகிஸ்தான் மீறல்கள், துப்பாக்கிச் சத்தங்கள் எனச் செய்திகளைத் தங்கு தடையின்றி, விளம்பர நேரங்கள் போக மீதமுள்ள நேரங்களில் வெளியிட்டு வருகின்றன. நாளேடுகளில் முதல் பக்கத் தலைப்புச் செய்திகள் போதாது என்று உள்பக்கச் செய்திகளையும் பக்கம் பக்கமாக வெளியிட்டு வந்தன. இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கக் கூடாது, பதற்றத்தை தணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வந்தன.

இது நாடுகளுக்கு இடையே போராக மூண்டால் உலகம் தாங்காது என ஐக்கிய நாட்டு சபை மிகுந்த கவலையோடு தெரிவித்தது. பதற்றம் நிறைந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் தெரிவித்தன.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியது ஒரு முறை அல்ல; இரு முறை கூட்டியது. கூட்டத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் இரு கூட்டங்களிலும் மிகச் சிறந்த தேச பக்தரான, இரவு பகல் பாராது நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலைப்படுகின்ற பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்? என்கிற நியாயமான கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டுமல்லவா?

இக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு இருந்தால், பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்களே, தாக்குதல் நடத்தப் போவது குறித்து நமது உளவு அமைப்புகளுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாதா? புகழ்மிக்க அமைப்பு என்ன செய்து கொண்டிருந்தது, உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டனவா? அல்லது நடக்கட்டும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், நாம் பலமாக பாகிஸ்தான் மீது படையெடுக்கலாம் என்று இருந்து விட்டார்களா? இருந்து எனப் பல கேள்விகள் உள்ளன. இவை குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவார்கள் என்று உளவு அமைப்பு பிரதமருக்குத் தெரிவித்துவிட்டதா?

அதற்கு காரணமாக பிரதமர் கூட்டத்தில் பங்கேற்கவில்லையா? எனப் பல பல கேள்விகள் கேள்விகள் உள்ளன. நெருக்கடி மிக்க நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி நமது ஒருமித்த கருத்தை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் வேண்டுகோளையும் ஒன்றிய அரசு ஏன் புறக்கணித்தது? என்ற வினாவிற்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் இருப்பதாகக் கருதுகின்றோம்.

இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று அமெரிக்க அதிபர் அறிவிப்பதேன்? அவர் நமது நாட்டிற்கு பிரதமர் ஆகிவிட்டாரா?

ஆகச் சிறந்த தேசபக்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாட்டின் பிரதமர் நரேந்திரர் நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறுவது நாட்டிற்கு நல்லது அல்லவா? நாட்டு நலனில் அக்கறையுள்ள மோடி உண்மையைச் சொல்ல முன் வருவாரா? முன்வர வேண்டும்!

உண்மைகள் ஒருபோதும் உறங்காது!

மீண்டும் சந்திப்போம் வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button