
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். அவர்களில் எட்டுப் பேர் இஸ்லாமியர். இந்தத் திடீர்த் தாக்குலால் பரிதவித்து நின்ற பயணிகளை உள்ளூர் இஸ்லாமியர்கள் பாதுகாத்து அனுப்பி வைத்தனர். பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்கும் அதேநேரத்தில், பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான மக்களின் உணர்வுகள் மத வெறியாக, இஸ்லாமிய வெறுப்பு அரசியலாக மாற்றப்படாமல் தடுக்கப்பட வேண்டும்.
ஜம்மு & காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பசுமையான புல்வெளி, அதனைச் சுற்றியுள்ள அடர்காடு, அவற்றுக்கு அப்பால் பனி சூழ்ந்த மலைகள் என வசீகரிக்கும் இயற்கை அழகு நிறைந்த பகுதி. கோடை காலத்தில் புற்களும் காட்டு மலர்களுமாக காட்சியளிக்கும். குளிர் காலத்தில் பனிப் போர்வை போர்த்தியிருக்கும். சுற்றுலாப் பயணிகளையும் திரைப்படத் துறையினரையும் இவைதான் வசீகரிக்கின்றன.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காமில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. பகல்காமில் இருந்து பைன் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்ந்த வனத்தின் ஊடாகத்தான் பைசரன் பள்ளத்தாக்கிற்கு செல்ல வேண்டும். அதுவும் நடந்தோ, குதிரை அல்லது கழுதைகள் மீதோதான் செல்ல முடியும். இதனால் பைசரன் செல்வதே சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.
பைசரன் பள்ளத்தாக்கு அருகேயுள்ள கொல்காய் பனி மலையில் இருந்துதான் லிடர் நதி உருவாகிறது. இந்த நதி பகல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி ஊடாகப் பாய்ந்தோடுவது பைசரனுக்கு மேலும் அழகூட்டுகிறது. இப்பகுதியில் கோடை காலங்களில் சுமார் 15 முதல் 25 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். குளிர் காலங்களில் 0 டிகிரிக்கும் கீழ் சென்றுவிடும்.
இத்தகைய எழிலும் பொலிவும் நிறைந்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ஏப்ரல் 22 அன்று குருவி சுடுவது போல் சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுத்தள்ளினர். இதில் 26 பேர் செத்து மடிந்தனர்.
அழகும் வசீகரமும் நிறைந்த பள்ளத்தாக்கு, அழுகுரலும் அச்சமும் நிறைந்ததாக மாறியது. அவர்களைக் காப்பாற்றப் போராடிய குதிரைச் சவாரி வீரரின் உயிரையும் பயங்கரவாதம் பறித்துக்கொண்டது. அமைதியையும் வனப்பையும் நாடி வந்த சுற்றுலாப் பயணிகள், எங்கு செல்வது? என்ன செய்வது? என்பது தெரியாமல் திண்டாடினர். அந்தப் பகுதி மக்கள் அவர்களைப் பாதுகாத்து, பத்திரமாக அனுப்பி வைத்தனர். காயம்பட்டுக் கிடந்தவர்களை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எங்கிருந்து குண்டுகள் வரும்? யார் சுடுவார்? என்பது தெரியாமல் பீதியில் உறைந்திருந்த சுற்றுலாப் பயணிகளை, ஆற்றுப்படுத்தி, அமைதிப்படுத்தி அப்பகுதி இஸ்லாமியர்கள் அனுப்பிவைத்தனர்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த கொடூரத் தாக்குதலில், அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் கண் முன்னே அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். உறவுகளை இழந்து தவிக்கும் அந்த துயரக் காட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தன. பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
பயங்கரவாதிகள் எப்படி ஊடுருவினர்?
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிவிட்டால், காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களே நடைபெறாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்தாரே, ஏன் இப்படி நடந்தது என்ற கேள்விகளும் எழுந்தன.
ஒன்றிய பாஜக அரசு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370வது பிரிவை அகற்றி, இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது. பயங்கரவாதத் தாக்குதல் இனிமேல் நடக்காது. அமைதியின் உருவமாகிவிடும். காஷ்மீரின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருக்கும். இப்படி எல்லாம் மோடியும் அமித்ஷாவும் தம்பட்டம் அடித்தனர். “யாராலும் செய்ய முடியாததைச் செய்துவிட்டோம். காஷ்மீர் எப்படி மாறப்போகிறது என்று பாருங்கள்” எனப் பீற்றினர்.
இப்படிச் சொல்லி ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. என்ன நடந்தது?
அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கும் பகுதி காஷ்மீர், அங்கு 28 பேருக்கு ஒரு ராணுவ வீரர் நிறுத்தப்பட்டுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடும் கட்டுப்பாடு. அவர்களுக்கு அடிக்கடி வீட்டுச்சிறை. உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் மக்களின் அன்றாட வாழ்க்கை, உலகிலேயே இணைய வசதி (இன்டர்நெட்) அதிகமாகத் துண்டிக்கப்பட்ட பகுதி. ஒன்றிய பாஜக அரசின் மேற்பார்வையில்தான் அத்தனை பணிகளும் காஷ்மீரில் நடக்கின்றன. காஷ்மீர் காவல்துறைகூட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இவற்றை எல்லாம் மீறி பயங்கரவாதிகளால் எப்படி ஊடுருவ முடிந்தது? குருவி சுடுவது போல் மக்களை சுட்டுத்தள்ளிவிட்டுச் செல்ல முடிந்தது எப்படி? மோடியும் அமித்ஷாவும் பதில் சொல்வார்களா? ஆர்எஸ்எஸ், பாஜக பதில் சொல்லுமா?
இதற்கு ஒன்றிய அரசும் உள்துறை அமைச்சரும் பதில் சொல்லியிருக்க வேண்டும். செய்தியாளர்களைச் சந்தித்து பிரதமர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். பாஜக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முடுக்கிவிட முயன்றனர்.
“முஸ்லீம் பயங்கரவாதிகள் இந்துக்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றனர்.”
“உள்ளாடையை கழற்றிப் பார்த்துவிட்டு சுட்டனர்.”
“இந்துக்களுக்கு ஆபத்து” என்று சங்கிகள் பரப்பினர்.
கண் சிவந்தார் பிரதமர் மோடி என்று தமிழ்நாட்டு ஊடகம் ஒன்று தலைப்பிட்டது.
உத்தரகாண்டில் “காஷ்மீரி மாணவர்கள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டும்” என சங்கி அமைப்பு ஒன்று கெடு விதித்தது.
“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சனாதனத்தால் நாடு ஒன்றுபட்டிருக்கிறது. இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுபவர்கள் அழிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே.
“140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றையும் தேசிய வாதத்தையும் தங்களது உயரிய கடமையாகக் கருதும் வரை, பகல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்” என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் எச்சரித்தார்.
பகல்காமில் இருந்து பதற்றத்துடனும் பரபரப்புடனும் கொல்கத்தா திரும்பிய பெண் ஒருவரிடம், “பெயர்களைக் கேட்டு, இந்து என்றால் மட்டும்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்” என்று சொல்லுமாறு மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி அறிவுறுத்துகிறார். “இஸ்ரேல் காசாவை எப்படிக் கையாண்டதோ, அதேபோல் இந்தப் பிரச்சனையை மோடி கையாளுவார்” என்று அந்தப் பெண்ணிடம் அவர் உறுதி அளிக்கிறார். இந்து, இஸ்லாமியர் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துச் சுடவில்லை என அந்தப் பெண் விழிக்கிறார்.
பகல்காம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள், சென்னை விமான நிலையம் வந்திறங்கிய போது, “இங்கு காஷ்மீர் மக்களைத் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கின்றனர். உண்மையில் காஷ்மீரிகள் அன்பானவர்கள். எங்களை அன்போடும் ஆதரவோடும் கவனித்து, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்” என்று கூறினர். (தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன)
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய போது, பகல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள், சொந்த ஊர்களுக்குத் திரும்பியவுடன் பதிவேற்றிய காணொளிகளும் பேட்டிகளும் மாறுபட்டு இருந்தன.
தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான சுற்றுலாப் பயணிகளின் பயத்தையும் பசியையும் போக்க, காஷ்மீர் இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கும் தங்களின் வீடுகளுக்கும் அழைத்துச் சென்று உணவளித்து அன்பைப் பரிமாறியதை எடுத்துக் கூறினர். இவை தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டனர்.
பகல்காம் தாக்குதலை நாடே கண்டித்தது. காஷ்மீர் மக்களும் கண்டித்தனர். காஷ்மீரி இஸ்லாமியர்களும் ஊர்வலமாகச் சென்று கண்டனம் தெரிவித்தனர். பயங்கர வாதச் செயலுக்கு எதிராக முழுநாள் கடையடைப்பும் நடத்தினர். மத வேறுபாடுகள் இன்றி ஒரே குரலில் ஒலித்தனர். ஆனால் அதனை இந்துக்களின் எதிர்ப்பாகவும், இஸ்லாம்
வெறுப்பு அரசியலாகவும் மாற்றிவிட சங் பரிவாரம் துடித்தது. அதன் ஊதுகுழல் ஊடகங்களும் இந்து, இஸ்லாம் மோதலாக மாற்றுவதற்கான எடுத்துரைப்பை (நேரேட்டிவ்) கட்டமைக்க முயன்றன. அதனையும் மீறி மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 26 பேரில் எட்டுப் பேர் இஸ்லாமியர் என்பதும், பகல்காம் பகுதியில் பரிதவித்து நின்ற பயணிகளை காஷ்மீரி இஸ்லாமியர்கள் பாதுகாத்து அனுப்பிவைத்த நிகழ்வுகளும் மத வெறியைத் தூண்டும் முயற்சிகளுக்குத் தடுப்பாக இருந்துவிட்டன.
பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது, பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண்பது முக்கியமானதாகும். இவற்றுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை, போராட்டங்களைப் பயன்படுத்தி, இஸ்லாம் வெறுப்பு அரசியலைத் தூண்டிவிடுவதைத் தடுப்பதும் அவசியமாகும். உழைக்கும் மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.