கட்டுரைகள்

இந்தித் திணிப்பு. பின்வாங்கிய மராட்டிய பாஜக அரசு!

த.லெனின்

இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா! இதைச் சிதைத்து எதையாவது திணிப்பதைக் கண்டித்துத் தான் மிக வீரியமாக எழுகிறது எதிர்ப்புக் குரல்!

தேரா தேசியக் கல்விக் கொள்கை!

கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசியக் கல்வி கொள்கையை அமல்படுத்தியது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழ்நாடு அரசு அந்தத் திட்டத்தை எதிர்த்து வருகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசு மும்மொழிக் கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் வந்து கொண்டே இருக்கிறது.

அதே சமயம் ஒன்றிய பாஜக தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியைக் கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சி கூடும் என்று கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி தொடர்பான நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியது. இன்று இது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மும்பைக்கு மொழி இல்லையா?

மகாராஷ்டிராவில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி இதைப் போல ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி கூறியது அங்கு ஆளும் பாஜக- சிவசேனா -என்சிபி கூட்டணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில், மும்பைக்கு ஒரு மொழி கூட இல்லை என்றும். மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி மொழி உள்ளது. காட்கோபர் பகுதியின் மொழி குஜராத்தி. எனவே மும்பையில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மராத்தி மொழியை கட்டாயமாக்கியிருக்கும் நேரத்தில், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கள் எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியதுடன். நான் முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் மராத்தி மொழியை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றியிருந்தேன். இப்போது, அவரது கருத்துகள் அச்சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதே போன்று பேசிவிட்டு அவர் திரும்பி வரமுடியுமா?.” என்று பேசியுள்ளார்.

இந்தநிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையில் தனது நிலைப்பாட்டை கூறினார். அதில் அவர் கூறியதாவது, “மராத்தி மொழி மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அதைக் கற்றுக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும். மராத்தி மொழி மகாராஷ்டிராவில் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் அது நமது கலாச்சார, பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மராத்தி தெரியாது என்றால் கன்னத்தில் அறை!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே பொதுக் கூட்டத்தில் ஒன்றில் உரையாற்றிய போது “நமது மும்பையில், அவர்கள் மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களின் கன்னத்தில் அறை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கு வசித்து, அந்த மொழியைப் பேசவில்லை என்றால், நீங்கள் அதற்குத் தகுந்த முறையில் நடத்தப்படுவீர்கள். இனி ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்க வேண்டும். அங்கெல்லாம், மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா? என்று சரிபார்க்க வேண்டும். நீங்கள் அனைவரும், மராத்தி மொழிக்காக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள், அங்கு இந்தி வேண்டாம் என்று மக்கள் துணிந்து சொல்கிறார்கள் என்று பேசியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல்டி அடித்த பட்னாவிஸ்!

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதற்கு மகாராஷ்டிரா எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். போராட்டங்களையும் நடத்தினர். அரசின் இந்த முயற்சி மராத்தி மொழியையும், கலாசாரத்தையும் அழிக்கும் செயல். மாநில மொழிகளை அழிக்க பாஜக துடிக்கிறது என்றும் விமர்சித்தனர். இதனை அடுத்து அரசின் மொழி பரிந்துரை வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரமேஷ் பன்சே மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பை எதிர்த்துள்ளார். அதன் முடிவைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மாநில அரசுக்கும் தானும் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார். கரடியே காரி துப்பியதைப் போல இந்தி மொழியைத் திணிப்பதற்கு அவர்கள் நினைத்த இக்குழுவும் தனது எதிர்ப்பைத் தெரிவித்து விட்டது. இந்தி கட்டாயப் பாடம் என்ற முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதுவரை இந்தி கட்டாயப் பாடம் என்று பேசிய பட்நாவிஸ், மராத்திதான் முக்கியம் எனப் பல்டி அடித்து விட்டார்.

மு.க.ஸ்டாலினின் கிடுக்கிப்பிடி கேள்விகள்

பட்நாவிஸின் முடிவை ஒன்றிய அரசு ஏற்கிறதா? அப்படியானால், புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா? என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு இன்று வரை எந்தப் பதிலும் இல்லை. ஒருபுறம் இந்தி கட்டாயமில்லை என பட்நாவிஸ் கூறிய ஒரு சில நாளிலேயே ‘இந்தி கட்டாயம்’ என்ற வார்த்தை அரசு ஆணையில் உள்ளது. அதனை நீக்கிப் புதிய அரசாணை வெளியிடப்படும் என உண்மையைப் போட்டுடைத்தார் கல்வி அமைச்சர் தாதா புசே. பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலேயே இந்த நிலை ஏற்பட்டது ஒன்றிய அரசுக்குப் பெரும் பின்னடைவு. அவர்களது ஜனநாயகம் அற்ற நடவடிக்கைகளுக்கு விழுந்தது பேரிடியாகும். தங்களது திட்டங்களை அமல்படுத்தினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்குவோம் என்ற பாஜகவின் வாதம், அதற்காக விழுந்து, விழுந்து வாதாடிய தமிழ்நாட்டின் சங்கி, மங்கிகள் இப்போது என்ன சொல்வார்கள்? பாஜவே ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிக்க முடியாது என்பதை இது நிரூபித்துள்ளதே!

மும்மொழிக் கொள்கை வடமாநிலங்களில் தோல்வி

உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, அரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் வட மாநிலங்களில் முதல் மொழி இந்தி, 2 வது மொழி ஆங்கிலம். மூன்றாவது மொழியாக பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் சிலவற்றில் சமஸ்கிருதத்துக்குப் பதிலாக உருது மொழி கற்பிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் அதை அவர்கள் ஏற்பதில்லை. இந்த மாநிலங்களில் தென் மாநில மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் எது ஒன்றும் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுவதில்லை என்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த கல்வியாளர் நிரஞ்சனராத்யா.

தென்மாநிலங்களின் மொழியை ஒரு போதும் மூன்றாவது மொழியாக அவர்கள் கற்பிப்பதில்லை. வடமாநிலங்களில் உள்ள பஞ்சாபி, காஷ்மீரி மொழிகள் கூட 2 வது அல்லது 3 வது மொழியாக அங்கு கற்பிக்கப்படவில்லை. அப்படியிருக்க, வடமாநிலங்களில் உள்ள இந்தியை இங்கு எவ்வாறு ஏற்க முடியும்? என்றும் வினா எழுப்புகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button