
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும் குடும்பமாகவும் விவசாயிகள் சங்க இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்த தோழர் முனியன் குஞ்சம்மாள் தம்பதியரின் கடைசி மகனாக 16.3.1957ல் பிறந்தார் தோழர் எம்.செல்வராஜ்
கப்பலுடையான் கிராமத்தில் இருந்து நடந்தே சென்று கொரடாச்சேரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். பின்பு திருவாரூர் திரு வி.க.அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ இளங்கலை பயின்றார். படிக்கின்ற காலங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்க்கப்பட்டு அனைத்திந்திய மாணவர் – இளைஞர் பெருமன்றத்தில் சேர்ந்து இளைஞர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அரசுப் பணி வேண்டாம் என்று தவிர்த்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேரப் பணியாகத் தொடர்ந்து பணியாற்றினர் .
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாகச் செயலாற்றினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர பற்று கொண்ட இவரை மார்க்ஸியப் பயிற்சி வகுப்பு பயில்வதற்காக சோவியத் யூனியனுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
ரஷ்யாவில் ஓராண்டுக்காலம் தங்கி மார்க்சியக் கல்வி பயின்றார்.
பினாமி நில மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் நிலத்தில் எறங்கி நடவு நடும் போராட்டத்தைக் கட்சி நடத்தியது.
தோழர் எம்.காத்துமுத்துவின் வழி காட்டுதலோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேச சோழகர் தலைமையில் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 35 தோழர்களைக் காவல் துறை கைது செய்து திருச்சி சிறைக்குக் கொண்டு சென்றது. அன்றைய நாளில் எம்.செல்வராஜ் பங்கேற்றுச் சிறைசென்றது மட்டுமல்ல. கடலூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனுயுடன் விடுதலை செய்யப்பட்டார்.
தினமும் கடலூர் சென்று வரபணம் இல்லாத காரணத்தால் தன்னுடன் இருந்த தோழர்களுடன் சேர்ந்து கடலூரில் விவசாயி ஒருவரிடம் அங்கு விதைக்கப்பட்டு இருந்த நாற்றங்காலில் உள்ள நாற்றுகளைப் பறித்துத் தருவதற்காகக் குத்தகைக்குப் பேசி நாற்றுகளைப் பறித்துக் கொடுத்து அதில் வந்த பணத்தைச் செலவுக்கு வைத்துக் கொண்டு தோழர்களுடன் தானும் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து இட்டு வந்தார்கள்.
இவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது…
கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியப் பொறுப்புச் செயலாளர், பிறகு செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை ஏற்று நீடாமங்கலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளை அமைப்பதும் கட்சியில் மக்களைச் சேர்ப்பதும் என்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
இவரின் செயல்பாட்டால் கட்சி அங்கு வலுவான இயக்கமாக மாறியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரமான இளைஞராகவும், ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து தோழர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு நாகப்பட்டினம், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து படுகொலை செய்யப்பட்ட தோழர் எஸ்.ஜி.முருகையன் எம்.பி அவர்களின் மூத்த மகள் கமலவதனத்தைத் திருமணம் செய்து வைக்கக் கட்சி முடிவு செய்து 1984 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
1989ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி என்பது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருச்சி, தஞ்சை, நாகை அகல ரயில் பாதை கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அன்றைய மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களிடம் எங்கள் பகுதிக்கு அகல ரயில் பாதைத் திட்டத்திற்குப் போதிய நிதியைத் தாங்கள் ஒதுக்கவில்லை என்றால் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியைக் கலைத்து விடுவேன் என்று பாராளுமன்றத்தில் கர்ஜித்தார்.
ரயில்வே துறையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது வரலாறு.
வேதாரண்யம் அகஸ்தியம் பள்ளி வரை புதிய இருப்புப் பாதை போடப்பட்டு ரயில் பஸ் இயக்கப்பட்ட முயற்சி மேற்கொண்டவர்.
வாரத்திற்கு ஒரு நாள் வேதாரண்யம் திருச்சி வரை ரயில் சேவை தொடர்கிறது.
திருவாரூர் காரைக்குடி ரயில்பாதையை நிறுத்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ப் போராட்டங்களை நடத்தியது அன்றைய கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வெ.வீரசேணன் வழிகாட்டுதலோடு திருவாரூரில் தொடங்கி முத்துப்பேட்டை வரை 60 கிலோமீட்டர் தூரம் மாவட்டம் முழுவதும் மக்களைத் திரட்டி மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது. போராட்டம் வெற்றியடைய திறம்படப் பணியாற்றினார். அந்தப் போராட்டத்தின் சாதனைதான் திருவாரூர் காரைக்குடி இரயில்பாதை மீண்டு அமைய காரணமாக அமைந்தது, பணிகள் தொடங்கின.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பின் கிடப்பில் கிடந்த திருவாரூர்,- காரைக்குடி ரயில் சேவை மற்றும் கேட் கீப்பர்களை நிரந்தரமாகப் பணி அமர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றியும் பெற்றார்.
திருவாரூக்கு நிறுத்தப்பட்ட இரயில்களைத் திரும்பக் கொண்டு வருவதற்குப் பெருமுயற்சி எடுத்து ரயிலை இயக்க வைத்தவர்.
இந்தியாவில் அப்போது இல்லாத திட்டமான பயிர்ப் பாதுகப்புத் திட்டத்தை டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.
திருவாரூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக திருவாரூர் வர்த்தக சங்கத் தோடு இணைந்து ரயில்வே கீழ் பாலம் அமைத்தவர்.
ஒன்றுபட்ட திருவாரூர் மாவட்டக் கட்சியின் துணைச் செயலாளர், பொறுப்புச் செயலாளர். திருவாரில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக மூன்று முறை கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர். தேசியக் குழு உறுப்பினர். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் மாநில துணைத் தலைவர் எனப் பல பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டவர்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 1989, 1996, 1998, 2019 ஆம் ஆண்டுகளில் நான்கு முறை வேட்பாளராக கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிட்டவர், மூன்றுமுறை வெற்றி கண்டவர்.
மரண நுழைவாயில் பல முறை சென்று அதை வென்றுவந்து 2024 இல் மே மாதம் 13ஆம் தேதி உடல்நிலைக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் ஆளுமை மிக்கக் கம்யூனிஸ்ட் தலைவராகவும் ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டிய இவருக்குத் தமிழக அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சித்தமல்லியில் அவரது இடத்தில் இறுதியடக்கம் செய்யப்பட்டது.
தோழர் எம்.செல்வராஜ் நினைவைப் போற்றி வீரவணக்கம் செய்வோம்…