ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னோடியும், மூத்த தலைவருமான தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா 11.05.2025 அன்று, உத்தனப்பள்ளி அருகில் உள்ள குருபரபள்ளியில் அவரது சகோதரி வீட்டில் காலமானார். தோழர் “கேஎஸ்கே” என அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.கிருஷ்ணப்பா, சிறு வயதிலேயே இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு விவசாயிகள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
தோழர் கிருஷ்ணப்பாவின் வாழ்விணையர் திருமதி செங்கொடி, கட்சியின் தத்துவார்த்த அரசியல் தெளிவு பெற்றவர். ஆசிரியராக பணியாற்றி வந்தவர். சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு விப்ளவ வாணி, தனா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
கிருஷ்ணப்பாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.