கட்டுரைகள்

எக்காலத்தும் வீழாதவர் ராஜம் கிருஷ்ணன் (நூற்றாண்டுச் சிறப்புக் கட்டுரை)

பா.ஜீவசுந்தரி

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW – National Federation of Indian Women) தலைவராக 1976 முதல் 1980 வரையிலும், கௌரவத் தலைவராக 1980 முதல் 1984 வரையிலும் என இரு முறை தேர்வு செய்யப்பட்டுத் திறம்படச் செயல்பட்டவர் ராஜம் கிருஷ்ணன்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதியாகப் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கெல்லாம் பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் குரல் எழுப்பியுள்ளார். 1976 ஆம் ஆண்டு ‘வளைக்கரம்’ நாவலுக்கு சோவியத் லாண்ட் – நேரு விருது பெற்றதற்காக சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தார். 1979ல் சோவியத் ஒன்றிய அரசின் அழைப்பின் பேரில் சென்ற மூவர் தூதுக்குழுவில் ஒருவராகவும் மீண்டும் மாஸ்கோ சென்று வந்தார்.

1983ஆம் ஆண்டு அனைத்துலக சமாதான காங்கிரஸ், செக் நாட்டின் தலைநகரான பிராக்ஸ் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ராஜம் கிருஷ்ணன் கலந்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரும் முதுபெரும் தலைவருமான அருணா ஆசிஃப் அலி அவர்கள்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கூட்டங்கள் என்றால் பெரும்பாலும் தவறாமல் ஆஜராகி விடுவார். வர இயலாத நிலை எனில், அதையும் முறையாகத் தெரியப்படுத்தி விடுவார். பெண்களுக்கு எதிரான முக்கியமான பிரச்சனைகள் எனில், பாலன் இல்லத்தில் நடைபெறும் கூட்டங்களில் அவரைத் தவறாமல் பார்க்கலாம்; அந்தக் கூட்டம் எப்போதும் அனல் பறக்கத்தான் இருக்கும்.

1990 மார்ச் 8 மகளிர் தினம்

பெரும்பாலும் இடதுசாரி இயக்கப் பெண்கள் மட்டும்தான் மகளிர் தினத்தை எப்போதும் அனுசரிப்போம். இப்போது போல வியாபார நிறுவனங்கள் முழுமையாக மகளிர் தினத்தைக் கையகப்படுத்திக் கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பிக்கவில்லை. கூட்டங்கள், ஊர்வலங்கள் என எப்போதும் அந்த நாள் பரபரப்பாகவே இருக்கும்.

அன்று காலை ‘தினமலர்’ பத்திரிகை முதல் பக்கத்தில் ஒரு பெரிய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. வயதில் முதிர்ந்த ஒரு பெண் சாராயக் கடைக்குச் சென்று சரக்கு வாங்கிக் கொண்டிருப்பதான படம் அது. அந்த வயதான பெண்ணும் ஒரு கூலித் தொழிலாளியாகத்தான் அந்தப் புகைப்படத்தில் தெரிந்தார். அதற்குத் தலைப்பு ‘இதுதான் மகளிர் தினம்’. அதைப் பார்த்துவிட்டுக் காலையிலேயே தொலைபேசியில் அழைத்துக் கடுமையாகப் பேசினார். பத்திரிகை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்றும் கொந்தளித்தார். அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் தோழர்கள் ‘தினமலர்’ பத்திரிகையைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

ராஜம் கிருஷ்ணன் அதில் கலந்துகொண்டு கடுமையாகப் பேசினார். ‘கடினமான உடல் உழைப்பைச் செலுத்தக்கூடிய பெண்ணாகவும் அவர் இருக்கலாம்; உடல் வலிக்காகவும் வாங்கிச் சென்றிருக்கலாம். இந்த ஒரு நிகழ்ச்சியையும் படத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தப் பெண்களையும் எடை போடுவதா? இழிவுபடுத்துவதா? மகளிர் தினம் என்பது எவ்வளவு உயர்வானது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பார்வையில் இதுதான் மகளிர் தினமாக இருக்கலாம்; ஆனால் எங்களுக்கு.’ என ஆரம்பித்துக் கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டார்.

1997ஆம் ஆண்டின் ‘தினமணி’ தீபாவளி மலரில் காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரர், கைம்பெண்கள் குறித்து, ‘ஏதும் விளையாத தரிசு நிலம்’ என்று கருத்து வெளியிட்டபோது அதைக் கடுமையாக விமர்சித்து ‘தரிசுக் கோட்பாடு’ என்னும் தலைப்பிட்டு ஒரு விரிவான, விளக்கமான கட்டுரையை உடனே எழுதி அதை ‘தினமணி’ பத்திரிகைக்கே அனுப்பினார். அன்றைய நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரையாகவே அது வெளியானது. இவை எல்லாம் அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஒருமுறை தோழர் பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். மிகவும் வயது முதிர்ந்த பெண்மணி. அவர் எழுதிய ஒரே நாவலான ‘கவலை’ நாவலுக்கு ஒரு விமர்சனக் கூட்டம் புக் பாயிண்ட்  (Book Point) புத்தக விற்பனை நிலையத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ராஜம் கிருஷ்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். அந்நாவலில் ஒரு பெண்ணை அவள் கணவன் திருக்கை வால் சாட்டையைக் கொண்டு அடித்து விளாசுவதாக எழுதப்பட்டிருக்கும்.

அதைக் கொண்டு சுழற்றி அடித்தால் உடல் முழுதும் ரத்த விளாறாகிப் படுகாயமாகிவிடும். அது பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போது தன்னையே அடித்தது போல் அவ்வளவு உணர்வு ததும்ப அவர் வீறிட்டுப் பேசியதைக் கண்டு அழகிய நாயகி அம்மாள் எழுந்து வந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டார். பொன்னீலன் அதைப் பார்த்து மிகவும் பூரித்துப் போனார்.

ராஜம் கிருஷ்ணனை ‘தாமரை’ இதழுக்கு எழுதும்படி அவருக்கு தோழர் ப.ஜீவானந்தம் கடிதம் எழுதியிருக்கிறார். அதன் பின்னரே ராஜம் கிருஷ்ணன் தாமரைக்குச் சிறுகதைகள் எழுதியுள்ளார். ‘இயக்கம் சாராத எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன் சமூக உணர்வு அதிகம் உள்ள இலக்கியம் படைப்பவர்’ என்று தொமு.சி.ரகுநாதனும் அவர் எழுத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஹெச்.ஜி.ரசூல், பொன்னீலன், கார்த்திகேசு சிவத்தம்பி, தோத்தாத்ரி, புலவர் ஆ.சிவசுப்பிரமணியன் என இடதுசாரி இலக்கிய கர்த்தாக்கள் பலரும் அவர் எழுத்தைச் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பெயர் தவிர்க்க இயலாதது. பெண்ணெழுத்து வகைமையிலும் அவரே முதன்மையானவர். 1940களில் துவங்கி 2010ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ அறுபதாண்டு காலம் தொடர்ச்சியாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ராஜம் கிருஷ்ணன். நாவல், சிறுகதை, ஏராளமான மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கட்டுரைகள், குழந்தைகளுக்கான படைப்புகள், வானொலி நாடகங்கள் என எழுத்தின் பல்வேறுபட்ட பரிமாண வகைமையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் அவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் தன் எழுத்தாற்றலுக்காகப் பெற்றவர்.

அவர் உருவாக்கிய படைப்புகள் முற்றிலும் வேறு வகையானவை. சமூக அக்கறையும் சிந்தனையும் பெரும்பான்மையாக அவற்றில் வெளிப்பட்டன. அதேபோல், ஓரிடத்தில் அமர்ந்து கற்பனா ரீதியாக எழுதுவது என்பதில் அவருக்குப் பெரிதாக விருப்பமில்லை. பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாகப் பயணித்து, அந்தப் பகுதியிலேயே வாழும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் அசலான வாழ்க்கையை, அவர்தம் பாடுகளை அறிந்து தகவல்களைத் திரட்டிய பின், அதில் தன் கற்பனையையும் கலந்து அவர் எழுதிய படைப்புகளும் அந்தப் படைப்புகளின் ஊடாகப் பல்வேறுபட்ட பாத்திரங்களை அதிலும் குறிப்பாகக் காத்திரம் மிக்க உழைப்பாளிப் பெண்களை, அசல் போராளிகளை உயிருடன் நம்மிடையே உலவ விட்டவர். அந்தப் பாத்திரங்கள் அனைவரும் வாசகர்களின் மனங்களில் இன்றைக்கும் நிலை பெற்று வாழ்கிறார்கள்.

குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுவது குறித்தும் அவர்களின் அடிப்படை உரிமைகள், நலன்கள், எதிர்காலம் குறித்தும் ராஜம் கிருஷ்ணனின் எழுதுகோல் மகத்தான எழுத்துகளைப் பிரசவித்திருக்கிறது. அவர்கள் பால் கொண்ட மிகுந்த அக்கறையும் அதில் வெளிப்படுகிறது. அவரின் பெரும்பான்மை எழுத்துகளிலும் அனைத்துத் தரப்புப் பெண்களும் ’எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை நிரூபிப்பது போல் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

அவர் காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த எழுத்தாளர்களிடமிருந்து தனித்துவமாகச் செயல்படுவதற்கான தனித்தன்மைகள் நிரம்பப் பெற்றவர் அவர். ஆயினும் ஓர் ஆண் படைப்பாளிக்குக் கிடைக்கக்கூடிய எந்த கௌரவமும் அப்போது இவருக்குக் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. ஒரு பெண் படைப்பாளியாக இருப்பதனால் பல்வேறு போராட்டங்களுக்கும் இடையில்தான் இந்த எழுத்துலகில் அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடிந்தது. ராஜம் கிருஷ்ணன் படைப்புகளைத் தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமானால், அது மிக மோசமான ஒரு வரலாற்றுப் பிழையாக மாறும். தன் படைப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்ல, தரத்தின் அடிப்படையிலும் நமக்கும் இலக்கிய உலகுக்கும் மிக அதிகமாகவே அவர் வாரி வழங்கிச் சென்றிருக்கிறார்.

கட்டுரை ஆசிரியர்:
பா.ஜீவசுந்தரி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button