50% வரி விதிப்பு அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம்
திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கே.சுப்பராயன் எம்.பி. பேச்சு


“திருப்பூரில் நாம் வாழ்வதற்கு ஆதாரம் பனியன் தொழிற்சாலை. அந்த பனியன் தொழிற்சாலையின் மீது அமெரிக்க வரிவிதிப்பு என்பது வெற்று வரிவிதிப்பு அல்ல. இது ஒரு பொருளாதார பயங்கரவாதம்’’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் பேசினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பை எதிர்த்து திருப்பூரில் நடைபெற்ற போராட்ட நிகழ்வில் மேலும் அவர் பேசியதாவது :
‘‘50 சதவீத வரி உயர்வு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஜவுளி மையங்களையும் பாதிக்கிறது. தோல் பொருள் தொழிலும் பாதிக்கிறது. பல்வேறு பகுதிகளில் பாதிக்கிற இந்தப் பிரச்சனைக்கு வெறும் 50% மட்டுமல்ல; ஏற்கெனவே 16 சதவீதம் வரி போடப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் 50 சதவீதம் என்று சொல்கிற போது 66% வரி உயர்வு ஏற்படுகிறது. இதனுடைய நேரடி விளைவு என்ன?
திருப்பூரில் இருந்து மட்டும் 40 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவிற்கு நடக்கிறது. அமெரிக்கச் சந்தைதான் திருப்பூர் தொழிலுக்கு மார்க்கெட். அந்த அமெரிக்கச் சந்தையில் இனி இந்தியப் பொருள் திருப்பூர் பனியன் இறங்க வேண்டுமானால் கடந்த விலையைக் காட்டிலும் 50 சதவீதம் உயரும்.
அதே நேரத்தில் சீனாவுக்கு 30 சதவீதம்தான் உயர்த்தினார்கள். அந்த 30 சதவீதம் உயர்வும் தொண்ணூறு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு உடனடியாக 27 ஆம் தேதி ஆகஸ்ட் இரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஏன் இங்கு இத்தகைய வேற்றுமை. இதன் மூலம் என்ன நிலைமை ஏற்படும்? வியட்நாமும் பங்களாதேசமும் சைனாவும் இந்தியா பெற்றிருந்த அமெரிக்கச் சந்தையைக் கைப்பற்றும். இதனுடைய நேரடி விளைவு திருப்பூரில் பனியன் உற்பத்தி நடக்காது.
பனியன் தொழில் தன்னியல்பாக நின்று விடும். ஆர்டர் இல்லை, கொடுக்கப்பட்ட ஆர்கள் ரத்து செய்யப்படுகின்றன. புதிய ஆர்டர்கள் வருவதில்லை. தொழிலாளர்கள் திருப்பூரைத் திரும்பிப் பார்க்கவே அஞ்சுகிறார்கள். என்ன காரணம்? மோடி அவருடைய அருமை நண்பர், உயிர் நண்பர் டிரம்ப் போட்ட வரி உயர்வுதான். அதனுடைய நேரடி விளைவுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம்.
திருப்பூரில் நாம் வாழ்வதற்கு ஆதாரம் பனியன் தொழிற்சாலை. அந்த பனியன் தொழிற்சாலையின் மீது அமெரிக்க வரிவிதிப்பு என்பது வெற்று வரிவிதிப்பு அல்ல. இது ஒரு பொருளாதார பயங்கரவாதம். அந்த பயங்கரவாதத்தை இந்தியாவின் மீது நிகழ்த்தியிருப்பவர் ட்ரம்ப். அதனால்தான் இந்தியா, குறிப்பாக திருப்பூர் சந்தையையும் பொருளாதார அடிப்படைகளையும் இழந்து விடும்.
திருப்பூரில் பிழைக்கவே இயலாது என்ற நிலை ஏற்பட்டு விட்டால், கட்டிடங்கள் வெறும் குட்டிச் சுவர்கள்தான். நிலங்கள் மதிப்பற்ற வெற்று நிலங்கள்தான். அத்தகைய நிலையை ஏற்படுத்தியவர் ட்ரம்ப் என்ற ஒற்றைக் குற்றவாளி அல்ல, ட்ரம்ப் அமெர்க்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அவமானச் சின்னம்.
அமெரிக்கா, உலகில் நடைபெற்ற இரண்டு போர்களில், பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்றுக் கொள்ளையடித்த கொலைகார பூமி. இந்த ட்ரம்பின் அமெரிக்கா ஈராக்கை அழித்த அமெரிக்கா. லிபியாவைக் கொன்று அழித்த அமெரிக்கா. இறையாண்மை உள்ள நாடுகளைக் கொல்லுகிற உரிமையை, ட்ரம்புக்கு யார் கொடுத்தார்கள். அவரே எடுத்துக்கொண்டார்.
ஆனால், வரலாற்று உண்மை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1956 இல் சோவியத் யூனியன் இருந்தது. சோவியத் யூனியன்தான் உலகின் சர்வ வல்லமையுள்ள நாடாக நிமிர்ந்து நின்றது. காலனி நாடுகளின் விடுதலைக்கு உழைத்தது. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குக் கரம் கொடுத்தது. அப்படி இருந்த நிலையில் தனக்கு உரிமையுள்ள சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கினார் அதிபர் நாசர். அதை எதிர்த்து இஸ்ரேல், பிரான்ஸ் உட்பட மூன்று நாடுகள் எதிப்திற்குள் படையெடுத்துத் தாக்குதல் தொடுத்தார்கள். தனக்கு இறையாண்மையுள்ள சூயஸ் கால்வாயை தேச உடமையாக்குவதற்கு அந்த அரசுக்கு உரிமை உண்டு. அதில் இவர்கள் ஏன் தலையிட்டார்கள். உடனடியாக சோவியத் யூனியனின் சுக்ரீம் சோவியத் கூடியது. ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளிவந்த 24 மணி நேரத்திற்குள், எகிப்தை ஆக்கிரமித்துள்ள 3 நாடுகளும், அந்த நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், அந்த மூன்று நாடுகளையும் சோவியத் யூனியன் நிர்மூலமாக்கி விடும் என்று எச்சரித்தது. அந்த எச்சரிக்கை வெளிவந்த உடனேயே வாபஸ் பெற்று வெளியேறினார்கள். அப்படிச் சொல்வதற்கு இன்று உலகில் நாடுகளில்லை. அத்தகைய வல்லமை உள்ள நாடுகள் இல்லை என்பதால்தான், உலகிற்குத் தான்தான் எஜமானன் என்பது போல் நடந்துகொண்டு இத்தகைய அடாவடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மோடி, இன்றுவேண்டுமானால் அமெரிக்காவைக் கைகாட்டித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் உலகின் சக்திமிக்க ஆயுதம் நம் புலக் கண்களுக்குப் புலப்படாத ஆயுதம் என்பது ஏகாதிபத்திய நாடுகளால் வரம்பின்றிக் குவிக்கப்பட்ட செல்வத்தை, நிதிவளத்தை உலகின் வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும், அரசியல் அதிகாரத்தில் தலையீடு செய்வதற்குமான உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது.
இன்று உலகின் பிரதான எதிரி, உலக நிதி மூலதனம். உலக வங்கி, டபிள்யு.டி.ஓ, ஐஎம்எம் போன்றவை அதன் நிதிமூலதனத்தின் கருவிகள்தான். இவை வளரும் நாடுகளைக் குறிவைத்துத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதல்தான் இந்த நடவடிக்கைக்குக் காரணம்.
இதற்கான தீர்வு உலகில் வளரும் நாடுகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவில்லை என்றால் எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும். இந்தியா மட்டுமல்ல, உலகின் வளரும் நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். ஆனால், மோடி அதற்குத் தயாராக இல்லை. மோடி ஒரு பித்தலாட்டத்தின் அடையாளச் சின்னம். மோடி அரசியலில் அங்கீகரிக்கத் தகுதியற்ற ஒரு அமைப்பின் பிரதிநிதி. அவர் காலத்தால் தூக்கி எறியப்படுவார். இன்றைக்கும் நாளுக்கு நாள் அவமானப்பட்டுப் போகிறார் மோடி.’’
இவ்வாறு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் பேசியுள்ளார்.