இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு

இந்தியாவின் 79வது விடுதலைத் திருநாளன்று சேலத்தில் துவங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு.
1950 பிப்ரவரி 11ஆம் தேதி அன்று சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 கம்யூனிஸ்டுகளின் நினைவாக சேலம் சிறைத் தியாகிகள் அரங்கம் என்று மாநாட்டு அரங்குக்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. சேலம் நகரமெங்கும் செங்கொடிகளும் பதாகைகளும் சுவர் எழுத்துகளும் பிரதிநிதிகளை வரவேற்றன.
மாநாட்டுக்கு க.சந்தானம், எம்.ஆறுமுகம், பி.பத்மாவதி, எம்.ரவி மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலாளரான அ.மோகன் ஆகியோரைக் கொண்ட குழு தலைமையேற்றது.

அரங்கவாசலில் இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு தேசியச் செயலாளர் டாக்டர் கே.நாராயணா மலர் மாலை சூட்டிய பின், அரங்கத்தில் தேசியக் கொடியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்டுப்பாட்டுக் குழுச் செயலாளருமான கோ.பழனிச்சாமி உயர்த்திட, சென்ற மாநாடு நடைபெற்ற திருப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கொடியை, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் ஜனசக்தி ஆசிரியருமான டி.எம். மூர்த்தி ஏற்றி வைத்தார். 
சென்ற மாநாட்டுக்குப் பின் காலமான தலைவர்கள், தோழர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாட்டைத் துவக்கி வைத்து தேசியச் செயலாளரும், ஏஐடியுசி பொதுச் செயலாளருமான அமர்ஜீத் கவுர் உரையாற்றினார். மற்றொரு தேசியச் செயலாளரான ஆனி ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
ஜனசக்தி சுதந்திரத் தினச் சிறப்பிதழை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட, ஆனி ராஜா பெற்றுக் கொண்டார்.
மாநாட்டுக்கான அரசியல் அறிக்கையை மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைப்பு நிலை அறிக்கையை துணைச் செயலாளர் நா.பெரியசாமியும், செயல்பாட்டறிக்கையைத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியனும் முன்வைத்தனர்.
மாநாட்டின் அரசியல் தீர்மானத்தைத் தீர்மானக் குழு தலைவர் டி.எம். மூர்த்தி முன்மொழிய, விவாதத்துக்குப் பின், திருத்தங்களோடு மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது.
மாலை 4 மணிக்கு ‘கனவுகள் மெய்ப்பட’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமையில், காங்கிரஸின் மூத்த தலைவரான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உரையாற்றினார்.
மாநாட்டின் இரண்டாம் நாள், அறிக்கைகள் மீதான பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. அன்று மாலை 4 மணிக்கு ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பொது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி, துண்டணிவித்து கே.சுப்பராயன் எம்.பி சிறப்பு செய்தார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், எம்.பி, தனது உரையைக் காணொளி மூலம் அனுப்பி இருந்தார். அது திரையிடப்பட்டது.
மாலை 7 மணிக்கு கலைமாமணி, முனைவர் மேரி ஸ்டெல்லா இயக்கத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் ‘வீராயி காவியம்’ நாட்டிய நாடகம் நடைபெற்றது.

மூன்றாம் நாள் பிரதிநிதிகள் விவாதம் நிறைவடைந்த பின்பு, அறிக்கைகள் மீதான தொகுப்புரை வைக்கப்பட்டது. மூன்று அறிக்கைகளையும் மாநாடு ஒரு மனதாக நிறைவேற்றியது. 68 தீர்மானங்களை, தீர்மானக் குழு சார்பில் ம. ராதாகிருஷ்ணன், இரா. ஆறுமுகம், அ.பாஸ்கர், இசக்கிதுரை ஆகியோர் முன்மொழிய, விவாதத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
நான்காம் நாள் காலை, தணிக்கை குழு அறிக்கை, கட்டுப்பாட்டுக்குழு அறிக்கை ஆகியவை முன்வைக்கப்பட்டு ஒரு மனதாக ஏற்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளின் தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை இ.பாரதி முன் வைத்தார்.
பின்னர் 101 பேர் கொண்ட மாநில குழுவை மாநாடு ஒரு மனதாகத் தேர்வு செய்தது. மாநில கட்டுப்பாட்டு குழுவுக்கு 9 தோழர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். செப்டம்பர் 21 முதல் 25 வரை சண்டிகரில் நடைபெறவுள்ள கட்சிப் பேராயத்திற்கான 96 பிரதிநிதிகளை ஒரு மனதாகத் தேர்வு செய்து, தனது கடமைகள் அனைத்தையும் மாநாடு முழுமையாக நிறைவேற்றியது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக் குழு மற்றும் மாநிலக் கட்டுப்பாட்டு உறுப்பினர்களின் கூட்டம் துவங்கிய போது மாலை 4 மணி ஆகிவிட்டது.
மாநாட்டுப் பேரணிக்காக தமிழ்நாடு முழுமையிலும் இருந்து பல்லாயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குடும்பம் குடும்பமாக திரண்டிருந்த சூழலில், பேரணியின் இன்றியமையாமை கருதி, நிர்வாக குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தலை வேறொரு நாள் நடத்தலாம் என்று மாநில குழு மீண்டும் ஒரு மனதாக முடிவு செய்தது.