வரலாறு

ஆவணம் அறிவோம் 5: மானங்காத்த தகப்பன்

ஆ.சிவசுப்பிரமணியன்

மீனாட்சிபுரம் செப்பேடு:

தேனிமாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் மீனாட்சிபுரம். அவ்வூரில் வாழ்ந்த திரு.எஸ்.அப்துல் ரஹிம் என்பவரிடம் இருந்த செப்பேடு ஒன்று மதம் கடந்த மனிதநேயவாதி ஒருவரை அறிமுகம் செய்யும் செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது.

இச்செப்பேடு குறித்து அறிந்த கல்வெட்டாய்வாளர், முனைவர் இரா.கருணானந்தன் இதைப் படித்ததுடன் படியெடுத்துமுள்ளார். பின்னர் இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் 2005 இல் வெளியிடப்பட்ட ‘தமிழகச் செப்பேடுகள்’ தொகுதி ஒன்றில் (பக்கம் 208-&-212) இடம் பெற்றுள்ளது. இந்நூலில் இச்செப்பேடு குறித்த அறிமுகமாகப் பின்வரும் குறிப்பு இடம் பெற்றுள்ளது:

‘25×15. செ.மீ. அளவுள்ள இச்செப்பேட்டில் முன்புறம் 46 வரிகளும் பின்புறம் 33 வரிகளுமாக 79 வரிகளில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மெய்யெழுத்துக்குப் புள்ளியிடுவதோடு மேலும் சில இடங்களில் வாசகங்களைப் பிரித்துப் படிப்பதறகாகவும் 3, 4 புள்ளிகள் இடப்பட்டுள்ளன.’

‘தமிழ்வருடம் ஸ்ரீமுக குறிப்பிடப்படுகிறது. மன்னர் பெயரெதுவுமில்லை. இதன் காலத்தை கி.பி.1873 எனக் கணிக்கலாம்’ (பக்கம்:208).’’

இச்செப்பேடு கூறும் செய்தியை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக வலங்கை இடங்கை என்ற இரண்டு சொற்கள் வெளிப்படுத்தும் பொருளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

வலங்கை- இடங்கை:

தமிழ்நாட்டின் சாதிகள் தனித்துவமான தங்களின் சாதிய அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்ட அதேநேரத்தில் வேறு சாதிகள் சிலவற்றுடன் இணைந்து ஒரு குழுமமாகவும். இணைந்து கொண்டதன் வெளிப்பாடுதான் வலங்கை -இடங்கை என்ற இரு பிரிவுகளாக உருவாகியுள்ளன என்ற கருத்துள்ளது. ஆனால் இது ஒரு தெளிவான ஆய்வு முடிவல்ல. இவ்விரு பிரிவுகள் ஒவ்வொன்றும் பிராமணர், வேளாளர் தவிர்த்து 98 சாதிகளை உள்ளடக்கியதாக இருந்துள்ளன என்ற கருத்தும் உண்டு. வலங்கைப் பிரிவு நிலம், வேளாண்மை சார்ந்த சாதியினரையும், இடங்கைப் பிரிவு நெசவு செய்வோர், பஞ்ச கருமர் அல்லது ஐந்து சாதியினர் என்றழைக்கப்படும் தச்சர் கொல்லர், கன்னார், பொற்கொல்லர், கல்வேலை செய்வோர் என்போரையும் உள்ளடக்கியிருந்தன.ஆயினும் வேளாண்மையுடன் தொடர்புடைய பள்ளர் சமூகத்தினர் இடங்கையிலும், பறையர் சமூகத்தினர் வலங்கையிலும் இடம் பெற்றிருந்தனர். கணவன் மனைவியரில் ஒருவர் இடங்கை மற்றொருவர் வலங்கை என்றும் இருந்துள்ளனர்.

பொதுவாக வலங்கையர் இடங்கையரைவிடப் பொருளாதார நிலையில் உயர்ந்தவர்களாக இருந்ததுடன் இடங்கையர் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றுள்ளனர். இதனால் இவ்விரு பிரிவுகளுக்குமிடையே அவ்வப்போது பூசல்கள் எழுந்துள்ளன.

செப்பேடு கூறும் செய்தி:

ஒரு முறை இடங்கையினரான தேவேந்திரகுல வேளாளர், பஞ்சகருமர்கள் (ஆசாரிகள்) சமூகத்துப் பெண்களை வலங்கையர்கள் சிலர் கவர்ந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது கோம்பை என்ற ஊரைச்சேரந்த பக்கிரி சேர்வை ராவுத்தர் என்ற இஸ்லாமியர் அதைத் தடுத்து நிறுத்தி அப்பெண்களை வலங்கையர்களிடம் இருந்து பாதுகாத்துள்ளார். அவருடைய செயல்பாட்டால் தம் சமூகப்பெண்கள் வலங்கையரிடமிருந்து பாதுகாக்கப் பட்டதற்கு நன்றி கூறும் முகமாக ‘மானம் காத்த தகப்பன்’ என்ற பெயரால் அவரை அழைத்ததுடன் அவருக்கும் அவரது பரம்பரையினருக்கும் செலுத்தவேண்டிய மரியாதை குறித்து இரு சமூகத்தின் தலைவர்களும் ஒன்று கூடிப் பின் வரும் முடிவை எடுத்துள்ளனர். இம்முடிவை இச் செப்பேட்டில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளனர்:

‘நம்மள் பெண் மானங்காத்த தகப்பனாகிய பக்கிருவா சேர்வை ராவுத்தருக்கு அஞ்சுஜாதி இடங்கை ஜாதித் தலைவர்களும் குடும்பன்மார்களும்* (தேவேந்திர குல வேளாளர்களின் சாதிப் பட்டங்களில் ஒன்று) கூடி ஒப்புக்கொண்டு வலங்கையார் குமுசல் கூடிப் பெண் சிறைபிடிக்க (*கவர்ந்து செல்ல) வந்ததில் அப்போது எங்கள் மானங்காத்த தகப்பனாகிய பக்கிருவார் சேர்வை ராவுத்தராகியவரு அதைக் கண்டு பெண்களையும் மானங்காத்து தங்களிடமாக யாதொரு நிந்தனைகளில்லாமல் மானங்காத்திருந்தார்.

‘இவ்வாறு பக்கீர்சேர்வையின் செயலை நினைவுகூர்ந்ததுடன், ‘சுருளி நதிக்குள்ளிட்ட அஞ்சுஜாதி தலைவரும் ஆசாரிமார்களும் குடும்பன்மார் நாங்களனைவோரும் ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்த முத்திரைப் பட்டயமென்னவென்றால் என்று தொடங்கி அடுத்து தாங்கள் எடுத்த முடிவையும் குறிப்பிட்டுள்ளனர். இம்முடிவின்படி ‘மானங்காத்த தகப்பனுக்கு ஆண்டு தோறும் அஞ்சுசாதியினரும், குடும்பன் மார்களும் கொடுத்து வரவேண்டியன குறித்து செப்பேடு கூறும் செய்தி வருமாறு :

தங்கள் வீடுகளில் நிகழும் திருமண நிகழ்வுகளை யொட்டி அவருக்கு மூன்று பணமும்.

  • புன்செய் தானியங்களும் அரிசியும் ஐந்துபடி வழங்க வேண்டும்.
  • முதல் வெற்றிலைப் பாக்கு அவருக்குரியது.
  • புதிதாக வீடு கட்டினால் ஒரு பணமும் புன்செய் தானியம் ஒரு குறுணியும் வழங்க வேண்டும்.

இவற்றைக் கல்லுங் காவிரியும் புல்லும் பூமியும் சந்திரனும் சூரியனும் உள்ளவரைக்கும் செய்துவரவேண்டும் என்று கூறுவதுடன் இதைச் செய்யாவிடில் ஏற்படும் விளைவகளையும், ‘கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவீர்களாக’ பட்டாவுக்குத் துரோகம் செய்தவன் மனையிலே எருக்கிலையும், குருக்கும், ஏசலிப்புத்தும் முளைத்துப் போவீராகவும்’ என்று இப்பட்டையம் குறிப்பிடுகிறது.

மதம் கடந்த மனிதநேயம்:

தமிழக வரலாற்றில் இத்தகைய போர்க்குணத்துடன் கூடிய மனித நேயச் செயல்களை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் குறித்த பதிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இந்து -இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தரும் நெருக்கடியால் மறைந்துவரும் தர்காக்கள் குறித்த வாய்மொழி வழக்காறுகள் சிலவற்றில் இஸ்லாமியர் அல்லாத பெண்களை, அவுலியாக்கள் அல்லது வலிமார் என்றழைக்கப்படும் இறையடியார்கள் சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியமை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகே மேற்குப்பகுதியில் பக்கிர்ஷா தர்கா அல்லது இஸ்மாயில் ஷா தர்கா என்றழைக்கப்படும் தர்கா ஒன்றுள்ளது. பிராமணப் பெண்ணொருத்தியை ஏழு கள்வரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் இறந்த அவுலியா ஒருவரின் நினைவாக இது உருவாகியுள்ளது. மதுரை புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் திருமயம் என்ற இரு நகரங்களுக்கிடையில் காட்டுப்பாவா பள்ளிவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காட்டுப்பாவா பள்ளிவாசல் என்ற பெயரில் பள்ளிவாசல் ஒன்றுமுள்ளது. இப்பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேயே காட்டுப்பாவா தர்காவும் உள்ளது. இதில் சையது பக்ருதின் என்ற அவுலியா அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏழு பிராமணப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் இவர் உயிர் துறந்துள்ளார் (சிவசுப்பிரமணியன். ஆ.2019:20).

பூவாயி என்ற பெண் ஒருத்தி தன் ஊரை அடுத்துள்ள ஊரின் மந்தைவெளிக்கு நாள்தோறும் மோர் விற்கச் சென்று வருவது வழக்கம். அப்போது பட்டாணி முஸ்லிம் (உருது மொழி பேசும் இஸ்லாமியர்) இளைஞன் ஒருவனுடன் நட்பு ஏற்படுகிறது. இது அண்ணன் தங்கை உறவாக நீடிக்கிறது. பட்டாணி அண்ணன் என்றே பூவாயி அவனை அழைப்பது வழக்கம். அவள் தனியாகச் செல்லும்போதெல்லாம் கௌதலன் என்ற சமூக விரோதி அடிக்கடி அவளைச் சீண்டிவந்தான். இதை அவள் தன் பட்டாணி அண்ணனிடம் கூற, அவள் தனியாகச் செல்ல நேரும்போதெல்லாம் பாதுகாப்பாக உடன் சென்றான். ஒரு நாள் திரும்பிச் செல்ல நேரமானபோது பட்டாணியண்ணன் வராத நிலையில் அவள் தனியாகச் செல்ல நேரிட்டது.

அப்போது கௌதலன் அவளைப் பின்தொடர்ந்து பாலியல் வன்முறை செய்ய முயன்ற போது ‘பட்டாணியண்ணா’ என்னைக் காப்பாத்து’ என்று உரக்கக் கூவினாள். சற்றுப் பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணி இளைஞன் ஓடிவந்து கௌதமனைத் தடுத்து நிறுத்த முயன்றபோது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் இருவருமே இறந்து போகின்றனர். பட்டாணியண்ணன் தன்னைக் காப்பாற்ற முயன்று உயிர்துறந்த துக்கம் தாளாது பூவாயி தற்கொலை செய்து கொள்கிறாள்.

கொலைக்காளானவன் தெய்வமாக்கப் படும் தமிழக நாட்டார் மரபிற்கேற்ப கௌதலன் நாட்டார் தெய்வமாகி கௌதல மாடன் என்ற பெயரைப் பெற்றான். ஏக இறைக்கோட்பாட்டினர் என்பதால் பட்டாணிய இளைஞனை, இஸ்லாமியர் தெய்வமாக்கவில்லை. ஆனால் நாட்டார் வழிபாட்டில் ஏன் இடமளிக்கப்படவில்லை என்ற வினா எழ இடமுள்ளது. ஒருவேளை இடமளிக்கப்பட்டுக் காலப்போக்கில் மறைந்திருக்கலாமோ?*

குறிப்பு:

*கௌதல மாடன் வில்லுப்பாட்டு ஒன்றும் உருவாகிப் பாடப்பட்டுள்ளதாம். இக்கதையில் இடம்பெறும் பூவாயி, கௌதலன் சாதி குறித்தும், கதையுடன் தொடர்புடைய ஊர்கள் குறித்தும் மாறுபாடான செய்திகள் உள்ளன. ஆனால் இங்கு குறிப்பிட்ட அடிப்படைச் செய்திகளில் மாற்றம் இல்லை. முற்றுப்பெறாத களஆய்வுச் செய்தியே நினைவில் உள்ளபடி இங்கு தரப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவோருக்கு எதிராகப் போராடி அவர்களைக் காப்பாற்றியோரும், அம்முயற்சியில் தம் உயிரை இழந்தோரும் தம்சாதி, தம் மதம் என்று பாராது செயல்பட்டுள்ளார்கள்.இவர்கள் சிறுமைகண்டு பொங்கியதுடன் அதை எதிர்த்துத் தம் உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்டுள்ளார்கள். சிலநேரங்களில் தம் உயிரையும் இழந்துள்ளார்கள். இவர்களது மனிதநேய உணர்வு போர்க்குணம்மிக்க மனிதநேயமாக மத எல்லையைக் கடந்து வெளிப்பட்டுள்ளது. இவர்கள் வட்டார அளவிலான உள்ளூர் வீரர்கள். கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் மிக அரிதாகவே இவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

என்றாலும் பல நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையும் வழிபாடும் பெரும்பாலும் இவர்களைப் போன்றோரை மையமாகக் கொண்டே உருவாகியுள்ளன. இன்று, நாட்டார் தெய்வங்களை வைதீக மரபுக்கு மாற்றும் திட்மிட்ட முயற்சியானது, ஒருவகையான அடையாள அழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இந்து என்ற ஒற்றைப் பண்பாட்டை நிறுவும் முயற்சியின் வெளிப்பாடாகவும் அமைகிறது.

துணை நின்ற நூல்கள்.

இராசு.செ.2009.செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்.

சிவசுப்பிரமணியன்.ஆ.2019: தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும்.

ஸ்ரீதர்.தி.ஸ்ரீ (பதிப்பாசிரியர்)2005. ‘மீனாட்சிபுரம் செப்பேடு,’ தமிழகச் செப்பேடுகள். தொகுதி 1.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button